Tamilnadu
ரயில் மோதி உயிரிழந்த பீகார் தொழிலாளி.. கொலைசெய்யப்பட்டதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த போலிஸார்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த ஏராளமான நிறுவனங்களில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் என்பவர் போயம் பாளையம் பகுதியில் பின்னலாடை சார்ந்த உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் சிறிய கடையை நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்றைய முன்தினம் இரவு சுமார் ஒரு மணி அளவில் திருப்பூர் தண்டவாளத்தில் கேரளாவில் இருந்து சென்னை சென்ற ரயிலில் அடிபட்டு தண்டவாளத்தில் சடலமாக கிடந்துள்ளார் . இது குறித்த தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் நேற்று காலை சஞ்சீவ் குமாரை கொலை செய்து தண்டவாளத்தில் போட்டு விட்டு சென்றதாக வதந்திகள் பரவியது. இதன் காரணமாக ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் திருப்பூர் ரயில்வே காவல் நிலையம் முன்பாக குவிந்தனர். மேலும் சஞ்சீவ் குமாரின் கைபேசி மற்றும் வாகனங்கள் காணவில்லை எனவும், எனவே அவர் கொலை செய்யப்பட்டு அவரின் உடைமைகள் திருடப்பட்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து அவர்களிடம் உரிய விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறை உறுதி அளித்தனர். இருப்பினும் கலைந்து செல்லாமல் ரயில் நிலையத்தில் சஞ்சீவ் குமார் வந்து சென்றதற்கான ஆதாரங்களை காண்பிக்க வலியுறுத்தினர்.
காவல் துறை சார்பில் தெரிவிக்கப்படும்போது நள்ளிரவு 12.56 மணிக்கு கேரளா திருவனந்தபுரத்திலிருந்து சென்னை சென்ற ரயிலை இயக்கி வந்த கருப்பசாமி என்பவர் கொடுத்த தகவலின் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது சஞ்சய் குமார் சடலமாக இருந்ததாகவும், ரயிலை அவர் கடக்க முயற்சித்த போது ரயில் மோதி உயிரிழந்ததாக அவர் வாக்குமூலம் அளித்ததை தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
இருப்பினும் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் வடமாநிலத்தவர்களை தாக்குவதாக பரப்பப்படும் வீடியோக்களின் காரணமாக தொடர்ந்து வட மாநில தொழிலாளர்களுடைய அச்ச உணர்வு ஏற்பட்டதன் காரணமாக திருப்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் குவிந்தனர்.
இதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் மற்றும் மாநகர காவல் துணை ஆணையர் அபிஷேக் குப்தா ஆகியோர் ரயில்வே காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டபோது ரயில்வே நிலைய கண்காணிப்பு கேமராவில் சஞ்சய் குமார் வந்து சென்றது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து காவல் நிலையத்தில் குவிந்த தொழிலாளர்களை அழைத்து சிசிடிவி காட்சிகளை காண்பித்து இது விபத்து தான் என உறுதிப்படுத்தினர்.
மேலும் அவரது கைபேசி மற்றும் இருசக்கர வாகனம் போயம்பாளையத்தில் அவர் குடியிருக்கும் வீட்டில் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநகர காவல் துணை ஆணையர் அபிஷேக் குப்தா சஞ்சய் குமார் மரணம் விபத்துதான் என உறுதி செய்யப்பட்டதை அவர்கள் உறவினர்கள் மற்றும் வட மாநில தொழிலாளர்களிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றதாகவும் திருப்பூரில் வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லை அனைவரும் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் , சமூக வலைதளங்களில் தவறான வதந்திகள் பரப்பப்பட்டு வருவதால் இது போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டு வருவதாகவும் வட மாநில தொழிலாளர்கள் ஏதேனும் அச்சம் இருப்பின் மாவட்ட நிர்வாகம் அல்லது காவல்துறையை தொடர்பு கொண்ட தங்கள் அச்சத்தை போக்கிக் கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களுக்காக 24x7 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கான தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது குடியிருப்பு அல்லது நிறுவனங்களில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் மாநகரில் 0421-2220313 / 2244500 9498101300 மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் இருந்தால் 0421-2970017/ 949101320 என்ற எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!