Tamilnadu

கழக செயல்வீரர், புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் உயிரிழப்பு : முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி இரங்கல் !

கோயம்புத்தூரை சேர்ந்தவர் ஸ்டாலின் ஜேக்கப் (37). இவர் தமிழ்நாட்டில் பிரபலமான புகைப்பட கலைஞராக இருந்தார். இவர் சிறந்த புகைப்பட கலைஞர் மட்டுமல்லாமல் திமுகவின் சமூக வலைதள பணியை மிக சிறப்பாக செய்து வந்தார். இவரது வேலை காரணமாக சென்னையிலே தங்கி இருந்த இவர், 'What a Karwad' என்ற ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தையும் நடத்தி வந்தார்.

மேலும் அவ்வப்போது படங்கள், விழாக்கள் போன்றவற்றில் ஒளிப்பதிவும் செய்து வந்தார். சமூக வலைதளங்களில் இவரது புகைப்படங்கள் தற்போதும் நின்று பேசும். எல்லாவற்றிற்கும் மேலாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் இறுதி ஊர்வலத்தில் இவர் எடுத்த புகைப்படங்கள் பல உள்ளன.

இந்த நிலையில், நேற்று செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தனது நண்பரான விஷ்ணு என்பவருடன் சேர்ந்து ஒளிப்பதிவு செய்ய சென்றிருந்தார். நிகழ்ச்சி முடிந்து இருவரும் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திரும்பிக் கொண்டிருந்தபோது, இவர்களுக்கு பின்னால் வந்த கனரக வாகனம் இவர்கள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்தில் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கொண்டிருந்தனர். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து காவல்துறை மற்றும் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ், இருவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த ஸ்டாலின் ஜேக்கப் நேற்றைய முன்தினம் தான் அவரது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவை தொடர்ந்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், " "நேற்றுதான் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் கழகத்தின் துடிப்பான சமூக வலைத்தளச் செயல்வீரர் ஸ்டாலின் ஜேக்கப், இத்தனை இளம் வயதில் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் & உடன்பிறப்புகளுக்கு எனது ஆறுதலும் ஆழ்ந்த இரங்கல்களும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அமைச்சர் உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில், "கலைஞரின் இறுதிப் பயணத்தை உணர்ச்சி குவியலாக காட்சிப்படுத்தியவர், கொள்கை உறுதியோடு சமூக வலைத்தளங்களில் களமாடிய தம்பி‌ ஸ்டாலின் ஜேக்கப்-ன் அகால மரணம் மிகுந்த வேதனையளிக்கிறது. கழகத்திற்கு பேரிழப்பு. குடும்பத்தினர்& சமூகவலைத்தள உடன்பிறப்புகளுக்கு என் ஆறுதல். உன் உழைப்பை என்றும் மறவோம்." என்று குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Also Read: ஓட்டுநர் இல்லா வாடகை மின்சார கார்கள் அறிமுகம்.. பறக்கும் காரை தொடர்ந்து அடுத்த அறிவிப்பு !