Tamilnadu
“தேஜஸ் ரயிலை தாம்பரத்தில் நிற்க வைத்த வரலாறு தெரியுமா?” : ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த TR.பாலு MP!
சென்னை எழும்பூரில் இருந்து மதுரை வரை செல்லும் தேஜஸ் விரைவு ரயில் இன்று முதல் தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்கிறது. இந்த சேவையின் தொடக்க விழா, தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிலையில், அதில் தி.மு.க மக்களவை குழுத் தலைவர் டி.ஆர். பாலு, ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா, மாநகர மேயர் வசந்தகுமாரி ஆகியோர் தெற்கு ரயில்வே உயர் அலுவலர்கள், பயணிகள் கலந்து கொண்டனர்.
அப்போது தி.மு.க மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா, மாநகர மேயர் வசந்தகுமாரி ஆகியோர் கொடியசைத்து ரயில் சேவையை தொடங்கி வைத்தனர்.
ரயில் சேவையை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர். பாலு, கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர், மக்களவை உறுப்பினராக பொறுப்பேற்கும் முன்பே ரயில்வே வாரிய தலைவரை நேரில் சந்தித்து தேஜஸ் விரைவு ரயிலை தாம்பரத்தில் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததையும்,
அதனைத் தொடர்ந்து அப்போதைய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலிடம் நாடாளுமன்றத்தில் பலமுறை இந்த கோரிக்கை குறித்து பேசியதையும், ரயில்வே தொடர்பான பல கூட்டங்களில் சுட்டிக்காட்டி பேசியதையும், தற்போதைய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ்விடம் நேரில் வலியுறுத்தியதையும் விவரித்தார்.
முன்னதாக தேஜஸ் விரைவு ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு மோடி அரசின் தனிப்பட்ட அக்கறையே காரணம் என்பது போல் உருட்டி வந்தனர். ஆனால் டி.ஆர்.பாலு எம்.பி ஆன முதல் ஆண்டிலேயே வைத்த கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவாக இவை நடந்துள்ளது.
உண்மைக்கு மாறாக பொய்யான தகவலை பரப்பிய கும்பலுக்கு டி.ஆர்.பாலு எம்.பி அறிக்கை மூலம் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக டி.ஆர்.பாலு எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில், “2019 மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற உடனேயே, டி.ஆர்.பாலு, எம்.பி., சென்னை – மதுரை - சென்னை வழித்தடத்தில் செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரம் நிலையத்தில் நிற்க வேண்டும் என்ற கோரிக்கையை 30.5.2019 (பக்கம் 2) அன்று ரயில் வாரியத் தலைவர் வினோத் யாதவ் அவர்களுக்குக் கடிதம் வாயிலாக வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து, தெற்கு ரயில்வே அதிகாரிகளுடனும் கலந்துரையாடியதன் விளைவாக 21.06.2019 அன்று இந்தக் கோரிக்கையை தெற்கு ரயில்வே புது டெல்லியில் உள்ள ரயில்வே வாரியத்திற்குக் கால அட்டவணை (பக்கம் 3) சகிதம் பரிந்துரைத்தது.
நாடாளுமன்றத்தில் விவாதம் – அமளி
தேஜஸ் எக்ஸ்பிரஸ், தாம்பரத்தில் வேண்டுமென்ற கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில், 04.12.2019 அன்று நாடாளுமன்ற மக்களவையில் இந்தக் கோரிக்கை தொடர்பாக எழுந்த விவாதத்தில், டி.ஆர்.பாலு, எம்.பி. அவர்களுக்கும், அப்போதைய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் அவர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அவையில் அமளி உருவானது. கேள்வி நேரம் முடிந்த பின்னர், மக்களவை சபாநாயகர் மாண்புமிகு ஓம் பிர்லா அவர்கள், டி.ஆர்.பாலு, எம்.பி., ரயில்வே அமைச்சர் இருவரையும் தனது அறைக்கு அழைத்து சமாதானம் செய்ததுடன், டி.ஆர்.பாலுவின் வேண்டுகோளை நிறைவேற்றிட உதவுமாறு அமைச்சரிடம் குறிப்பிட்டார்.
16.11.2021 அன்று தெற்கு ரயில்வே அதிகாரிகளின் கூட்டம் அதன் பிறகும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில், தாம்பரம் நிலையத்தில் நின்றுசெல்வது குறித்து முடிவு அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், தேஜஸ் எக்ஸ்பிரஸ் பிரச்சனை உள்ளிட்ட நிலுவையில் உள்ள பல்வேறு ரயில்வே திட்டங்கள், பணிகள் அனைத்தையும் பட்டியலிட்டு அவற்றை எல்லாம் விரைந்து நிறைவேற்றிட வேண்டுகோள் வைத்து அப்போதைய தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் அவர்களுக்கு 02.01.2020 (பக்கம் 4 & 5) அன்று டி.ஆர்.பாலு கடிதம் எழுதினார்.
தமிழ்நாடு சம்பந்தப்பட்ட ரயில்வே திட்டங்கள் குறித்து தமிழக எம்.பி.க்களின் கோரிக்கைகளைத் தொகுத்து, தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு 11.10.2021 (பக்கம் 6 & 7) அன்று மீண்டும் கடிதம் எழுதப்பட்டது. இந்தக் கடிதத்திலும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் நிற்பது தொடர்பான விஷயமும் எழுப்பப்பட்டது. இக்கடிதத்தைத் தொடர்ந்து 16.11.2021 (பக்கம் 8) அன்று சென்னை தியாகராய நகரில் உள்ள டி.ஆர்.பாலு அவர்களின் பாராளுமன்ற அலுவலகத்தில் நடைபெற்றக் கூட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், திருப்பெரும்புதூர், அம்பத்தூர்
சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் உள்ளிட்ட ரயில்வேயின் மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், தேஜஸ் எக்ஸ்பிரஸ் குறித்து விவாதிக்கப்பட்டபோது, ரயில்வே நிர்வாகம் ‘இது தொடர்பான பரிந்துரை குறித்து ரயில்வே வாரியம் அணுகப்பட்டுள்ளது என்றும், அவர்களது ஆணைக்காக எதிர்பார்த்துள்ளது என்றும், தெற்கு ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடன் சந்திப்பு
இந்த முயற்சிகளைத் தொடர்ந்து 21.02.2022 (பக்கம் 9) அன்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை நாடாளுமன்ற வளாகத்தில் நேரில் சந்தித்த டி.ஆர்.பாலு, எம்.பி. அவர்கள், நிலுவையில் உள்ள தேஜஸ் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் நின்று செல்லும் கோரிக்கை பற்றி வலியுறுத்திக் கூறியதுடன் வேண்டுகோள் கடிதம் ஒன்றையும் அமைச்சரிடம் வழங்கினார். பின்னர், 03.12.2022 (பக்கம் 10) அன்று தெற்கு ரயில்வே நடத்திய கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட டி.ஆர்.பாலு எம்.பி. அவர்கள், பல்வேறு கோரிக்கைகளை எழுப்பியதுடன், தேஜஸ் எக்ஸ்பிரஸ் தாம்பரம் முனையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்ல வேண்டுமென்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியதுடன் விரிவான கடிதம் ஒன்றையும் வழங்கினார்.
இத்தனை, பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் பிரச்சனையில் நல்ல முடிவு கிடைக்காத நிலையில் 23.12.2022 (பக்கம் 11) ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை நாடாளுமன்றத்தில் நேரில் சந்தித்து, தேஜஸ் எக்ஸ்பிரஸ் குறித்து வலியுறுத்தி வேண்டுகோள் கடிதத்தையும் தந்தார். பின்னர், 08.02.2023 (பக்கம் 12) அன்று ரயில்வே அமைச்சருக்கு, தான் எழுதிய கடிதத்தில் டி.ஆர்.பாலு அவர்கள், தேஜஸ் எக்ஸ்பிரஸ் பிரச்சனையில், தான் மீண்டும் மீண்டும் வேண்டுகோள் வைத்ததைக் குறிப்பிட்டு, தனது வேண்டுகோளினை மேலும் தாமதமின்றி, முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றித் தர வேண்டுமென்று வலியுறுத்தினார்.
டி.ஆர்.பாலுவின் 4 ஆண்டுகால இடைவிடாத முயற்சியின் பலன்
டி.ஆர்.பாலு, எம்.பி. அவர்கள், ஏறத்தாழ நான்கு ஆண்டுகளாக அயராமல் மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் விளைவாக, தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் இருமார்க்கங்களிலும் தாம்பரத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தென் தமிழகத்துக்குச் செல்லும் பல லட்சம் ரயில் பயணிகள் 26.2.2023 முதல் தாம்பரம் ரயில் முனையத்தில் இருந்து தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையின் மூலம் பயனடைவர்.
நீண்ட தாமதத்திற்கு பிறகு ஒன்றிய அரசு லட்சக்கணக்கான ரயில் பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்றி உள்ளதை பெரிய சாதனையாக ஒரு சிலர் காட்டிக் கொள்ள முயற்சிப்பது சரியல்ல. இல்லையென்றால், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் சேதுசமுத்திரத் திட்டம், மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, சென்னை துறைமுகம் மதுரவாயல் உயர்மட்ட விரைவுச் சாலை, ‘நீட்' மருத்துவ நுழைவுத் தேர்வு பிரச்சனை, ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடைச் சட்டம் உள்ளிட்ட பல முக்கிய பிரச்சனைகளில் இவர்கள் தலையிட்டு செய்து காட்டியிருக்கலாமே. ஏன் செய்யவில்லை? தமிழ்நாட்டு மக்கள் ஏமாறமாட்டார்கள்!” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!