Tamilnadu

ஆதரவற்றோர்களுக்கு புது வாழ்வு.. ‘காவல் கரங்கள்’ மூலம் 500 பேரை குடும்பத்துடன் இணைத்த தமிழ்நாடு காவல்துறை!

சென்னையில் வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் “காவல் கரங்கள்” மூலம் சென்னையில் சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் மனநலம் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிந்த நபர்களை மீட்டு, பாதுகாப்பாக காப்பகத்தில் தங்க வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மீட்கப்படுபவர்கள் அவரவர் முகவரியை கண்டுபிடித்து குடும்பத்திடம் ஒப்படைக்கப்படுகின்றனர்.

இதில் 12 நபர்களின் உரிய முகவரி கண்டறிந்து அவர்களை அவர்களது குடும்பத்துடன் இணைக்கும் நிகழ்ச்சியில் நடைபெற்றது. இதில் கூடுதல் காவல் ஆணையர் லோகநாதன் கலந்து கொண்டு, 12 நபர்களை அவர்களது உறவினர்களுடன் ஒப்படைத்தார். மேலும் 15 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினையும் அவர்களுக்கு வழங்கினார்.

பின்னர் மேடையில் பேசிய கூடுதல் ஆணையர், "'காவல் கரங்கள்' செயல்படுவதற்கு மிக முக்கிய காரணம் தன்னார்வலர்கள். அவர்களால்தான் காவல்காரங்கள் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இரண்டு ஆண்டுகளாக பல்வேறு சோதனைகள் வந்த போதும் சாலையோர மக்களை மீட்டெடுத்து அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும் மகத்தான பணியை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு காவல்துறை முழு ஒத்துழைப்பு அளித்து பணிகளில் மேற்கொண்டு வருகிறது.

சாலையில் மீட்டெடுக்கும் நபர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. எல்லாவற்றிற்கும் அடிப்படை நோக்கம் என்பது அவர்களை வந்து குடும்பத்தோடு இணைப்பது தான். இதுவரைக்கும் 500-க்கும் மேற்பட்டவர்களை நாம் அவர்களது குடும்பத்துடன் இணைத்துள்ளோம்.

கோப்பு படம்

ஒரு குடும்பத்தில் ஒருத்தர் காணாமல் போய் திரும்ப அவர்களுக்கு அவர் கிடைப்பது என்பது மிக முக்கியமான ஒன்று. 2021 முதல் இதுவரைக்கும் மீட்கப்பட்ட நபர்கள் 4013 பேர் மேற்கொண்டு இருக்கிறார்கள் அதுவும் இதுவரை 1876 நபர்கள் அடக்கம் செய்து இருக்கிறோம். இதுபோன்று காவல்துறை காவல் பணி மட்டும் இல்லாமல் சமூகத்திற்கு எந்தவொரு பயன் அளிக்கக்கூடிய ஒரு திட்டமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

இது மேலும் விரிவடைந்து பணிகள் சிறப்பாக நடைபெறுவதற்கு, தினம் சில ஆலோசனைகளை வழங்கும் நம் காவல் ஆணையர் அவர்களுக்கும் இந்த தருணத்திலே நான் நன்றியை கூற கடமைப்பட்டிருக்கிறேன். மேலும் 'காவல் கரங்கள்' இந்த அளவு சிறப்பாக இருப்பதற்கு இந்த காவல் கரங்கள் உடைய காவல் ஆய்வாளர் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

இந்நிகழ்வில் போரூரைச் சேர்ந்த விஜயகுமார் தனது தாய் 2005 ஆம் ஆண்டில் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு வெளியேறி கிடைக்காததால், தாய் இறந்ததாக நினைத்து தொடர்ந்து 18 ஆண்டுகள் அவர் இறப்புக்கு சடங்குகள் செய்து வந்துள்ளார். ஆனால் தற்போது அவரது தாய் மீண்டும் வந்துள்ளது அவருக்கு மகிழ்ச்சி என்றும், இதற்கு உறுதுணையாக இருந்த காவல்துறைக்கு நன்றி என்றும் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Also Read: ஒரே ஒரு புகார்.. சாமியார் ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனத்தின் மீது நடவடிக்கை : அதிரடி காட்டிய காங்கிரஸ் MP!