Tamilnadu
நரபலி கொடுக்க முயற்சி.. தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த இளம் பெண்ணுக்கு தமிழ்நாடு காவல்துறை பாதுகாப்பு !
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி பெண் ஷாலினி சர்மா தாக்கல் செய்த மனுவில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனும் ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தனது வளர்ப்புத் தாய் சுதா ஷர்மா, மாந்த்ரீகங்களிலும், மூட நம்பிக்கைகளிலும் நம்பிக்கை கொண்டவர் எனவும், தன்னை நரபலி கொடுக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும் அச்சம் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தனது 10 வயது சகோதரனையும், மேலும் இருவரையும் அவர் நரபலி கொடுத்துள்ளதாகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு எதிராக போலீசில் புகாரளிக்க எவருக்கும் தைரியமில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
நரபலியில் இருந்து தப்பிப்பதற்காக தட்சிணாமூர்த்தி என்ற நண்பரின் உதவியுடன் பிப்ரவரி 17ம் தேதி சென்னை வந்ததாகவும், தந்தைப் பெரியார் திராவிடர் கழக செயலாளர் வீட்டில் தங்கியிருக்கும் தன்னை, குடும்பத்தினரும், ஏ.பி.வி.பி. அமைப்பினரும் வலுக்கட்டாயமாக போபால் அழைத்துச் சென்று விடுவர் என மனுவில் அச்சம் தெரிவித்துள்ளார்.
வலுக்கட்டாயமாக தன்னை போபாலுக்கு கொண்டு சென்று விட்டால் தன்னை நரபலி கொடுக்கும் அபாயம் உள்ளது என மனுவில் கூறியுள்ளார். தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான இடம் என்பதால் தனக்கு போலிஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், ஆன்லைனில் பெறப்பட்ட புகாரும் விசாரிக்கப்படும் என தெரிவித்தார்.
அப்போது மனுதாரர் ஷாலினி ஆஜராகி தனக்கு பாதுகாப்பு வழங்கிய தட்சிணாமூர்த்தி, விக்னேஷ் ஆகியோருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
பின்னர் நீதிபதி, இந்த நூற்றாண்டிலும் பில்லி சூனியம், மாந்திரீகம் ஆகியவற்றை நம்பி, நரபலி கொடுக்கப்படுவதாக கேள்விப்படுவது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். பெண்ணுக்கும், அவருக்கு உதவிய இருவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு குறித்து ஷாலினி சர்மாவின் பெற்றோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.
நரபலி தொடர்பாக ஷாலினி புகார் அளித்த விவகாரத்தில் போபால் காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
இதனிடையே போபால் பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழக காவல்துறை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!