Tamilnadu

கபடி விளையாடும் போது சுருண்டு விழுந்த வாலிபர்: மருத்துவமனைக்கு சென்ற நண்பர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் பாளையம் அருகே காசக்கரன்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் மாணிக்கம். இவர் கரூரில் உள்ள டெக்ஸ்டைலில் வேலை பார்த்து வந்தார். மேலும் இவர் கபடி வீரரும் கூட. இந்நிலையில், குளித்தலை அருகே கணக்கப்பிள்ளை ஊரில் நேற்று மாலை நடைபெற்ற கபடி போட்டியில் தங்கவேல் பங்கேற்று விளையாடியுள்ளார்.

அப்போது இவரது அணி இரண்டு சுற்று போட்டிகளில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்று போட்டிக்கு தயாராகிக் கொண்டிருந்தது. அந்நேரம், நெஞ்சு வலிப்பதாக அருகில் இருந்த நண்பர்களிடம் மாணிக்கம் கூறியுள்ளார்.

பின்னர் உடனே நண்பர்கள் அவரை அருகில் உள்ள அய்யர் மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மாணிக்கம் இருதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

வெண்ணிலா கபடிக்குழு படத்தைப்போன்று கபடி போட்டியில் விளையாடும் போது வாலிபருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: தனியாக இருந்த ரயில்வே பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி: கேரள இளைஞரை கைது செய்து போலிஸ் அதிரடி!