Tamilnadu

"விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் ரெய்டு செய்யும் ஒன்றிய அரசு.. மோடி மீது ப.சிதம்பரம் சரமாரி தாக்கு!

குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தில் சிறுபான்மையினரான இசுலாமியர் மீது நடந்த திட்டமிட்ட தாக்குதல் என உலகம் முழுவதும் பல்வேறு கண்டனங்கள் எழுந்தது.

இத்தகைய கொடுமையான குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து அரசு ஊடகமான பிபிசி, கடந்த 17-ம் தேதி “இந்தியா- மோடிக்கான கேள்விகள்” (India : The Modi Question) என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. இந்த ஆவணப்படத்திற்கு பா.ஜ.கவினர் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் மூன்று நாட்கள் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தன. இந்நிலையில், விமர்சனத்தையே சகித்துக் கொள்ள முடியாத அரசாக மோடி அரசு உள்ளது என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இது குறித்து ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், "மோடி குறித்து குறும்படம் எடுத்து விமர்சித்தால் உங்கள் வீட்டிற்கு ரெய்டு வரும். விமர்சனங்களையே சகித்துக் கொள்ள முடியாத அரசாக மோடி அரசு உள்ளது.

விமர்சனத்தையே சகித்துக்கொள்ள முடியாத சீனா, ரஷ்யா, எகிப்து போன்ற நாடுகளில் வரிசையில் இந்தியாவும் சேர்ந்து விட்டது. இதை இப்போது உலகம் முழுவதும் அறிந்து விட்டது. ஒன்றிய அரசு உணவு, உர மானியத்தைக் குறைத்துள்ளது. பெட்ரோல் மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் உணவுப் பொருள், உரத்தின் விலை உயரும். பெட்ரோல் விலையும் உயரும். ஒன்றிய அரசின் தவறான கொள்கையால் இந்தியா பெரிய விளைவுகளைச் சந்திக்க உள்ளது" என தெரிவித்துள்ளார்.

Also Read: இந்தியாவிலும் கைவரிசை காட்டிய எலான் மஸ்க்.. இரண்டு Twitter அலுவலகங்கள் மூடப்படுவதாக அறிவிப்பு !