Tamilnadu

1 வயது குழந்தையின் மூச்சுக் குழாயில் சிக்கிய மிளகு: அறுவை சிகிச்சை இல்லாமல் அகற்றிய கோவை அரசு மருத்துவமனை

குழந்தைகள் இருக்கும் வீட்டை எப்போதும் சுத்தமாகவும், அவர்கள் கையில் எதுவும் கிடைக்காதபடி பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஏன் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது என்பதற்குத் திருப்பூரில் நடந்த ஒரு சம்பவம் உதாரணமாக அமைந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், சின்னைக்கரை என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஒரு வயது ஆண் குழந்தைக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் உடனே கோவை அரசு மருத்துவமனைக்குக் குழந்தையை சிசிக்சைக்காக அழைத்து வந்தனர்.

அங்குக் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் சி.டி. ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். அப்போது குழந்தையின் மூச்சுக் குழாயில் ஏதோ உருண்டையாக இருப்பது தெரியவந்து. பிறகு அது என்னவென்று பார்த்தபோது சமையலுக்குப் பயன்படுத்தப்படும் மிளகு என்று தெரியவந்தது.

இதையடுத்து மருத்துவர்கள் மூச்சுக் குழாய் உள்நோக்கி செலுத்தும் கருவி மூலம் அறுவை சிகிச்சை எதுவும் இல்லாமல் குழந்தையின் மூச்சுக் குழாயில் சிக்கி இருந்த மிளகை அகற்றினர். இதையடுத்து குழந்தை எந்தவிதமான சிரமமும் இல்லாமல் மூச்சுவிட்டுள்ளது.

இது குறித்துக் கூறும் காது, மூக்கு தொண்டை பிரிவு மருத்துவர் சரவணன், "உரிய நேரத்தில் சிகிச்சை அளித்து மிளகு அகற்றப்பட்டதால் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டுவிட்டது. இல்லை என்றால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும்" என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்களுக்கு அவரது பெற்றோர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் சிறப்பாகச் சிகிச்சை அளித்த மருத்துவர் குழுவினருக்கு மருத்துவமனை முதல்வர் நிர்மலா பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: நீங்கதான் இதற்கு காரணம்.. புதிதாக BMW பைக் வாங்கி நடிகர் அஜித்துக்கு நன்றி தெரிவித்த துணிவு பட நடிகை!