Tamilnadu
சூடு பிடிக்கும் திருவண்ணாமலை ATM கொள்ளை.. அரியானா விரைந்த போலிஸ்.. கொள்ளை கும்பல் தலைவர் 2 பேர் கைது !
திருவண்ணாமலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 3 எஸ்.பி.ஐ ஏடிஎம் மற்றும் 1 இந்தியன் ஏடிஎம் என 4 ஏடிஎம்களில் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கேஸ் வெல்டிங் மூலம் துளையிட்டு ஏடிஎம்-ல் இருந்த பணத்தை முழுவதும் இரவோடு இரவாக கொள்ளையர்கள் கொள்ளையடித்து தலைமறைவானர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகள் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவையை ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து இதுகுறித்து விசாரித்து குற்றவாளிகளை பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. பின்னர் ஆந்திரா, மும்பை, ஒடிசா போன்ற வெளிமாநிலங்களை தொடர்ந்து ஏடிஎம் இயந்திரத்தை கையாளக்கூடிய தொழில்நுட்பத்துடன் கூடிய வட மாநில கொள்ளை கும்பல் இந்த ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட மாடல் ஏடிஎம் எந்திரத்தை மற்றும் ஏடிஎம் ஆதாரங்களை செயல் இழக்க செய்துவிட்டு இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அரியானா வரை காவல்துறை தனிப்படைகள் விரைந்தனர். அங்கு தீவிரமாக சோதனை செய்ததில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் முகமது ஆரிப் (35), மற்றும் ஆசாத் (37) என்ற 2 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்கள்தான் இந்த கொள்ளைக் கும்பலின் தலைவர்கள் என்று தெரியவந்தது.
இந்த நிலையில் இதுகுறித்து காவல்துறை தரப்பில் வெளியிட்ட பத்திரிகை குறிப்பில், "கடந்த 12.02.2023-ந் தேதி அதிகாலை திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில் கேஸ் கட்டிங் இயந்திரத்தை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து ரூபாய்.72,79,000/- பணத்தை திருடர்கள் கொள்ளையடித்தனர்.
தகவலறிந்தவுடன் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் Dr.N.கண்ணன், மேற்பார்வையில், வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் Dr.M.S.முத்துசாமி, தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தீவிர விசாரணையில் இச்சம்பவத்தில், வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. இக்கொள்ளையில் 6 பேர்களுக்கு மேற்பட்டவர்கள் ஈடுபட்டதும், இவர்கள் கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியில் தங்கியிருந்து குற்றம் நடந்த பகுதிகளை ஏற்கனவே நோட்டமிட்டு அதன் பின்பு கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதன் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் P.செபாஸ்கல்யாண், ஆந்திர மாநிலத்திற்கும், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ராஜேஷ்கண்ணன், குஜராத் மாநிலத்திற்கும்; திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன், ஹரியானா மாநிலத்திற்கும்;
மாவட்ட திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.S.பாலகிருஷ்ணன், கர்நாடகா மாநிலத்திற்கும் தங்களது தனிப்படைகளுடன் விரைந்தனர்.
இராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் D.V.கிரண் ஸ்ருதி, தடய அறிவியல் சம்மந்தப்பட்ட புலன் விசாரணை ஒப்படைக்கப்பட்டது. தீவிர தேடுதல் வேட்டையின் காரணமாக அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் கீழ்கண்ட குற்றவாளிகள் ஹரியானா மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர்.
மேற்படி குற்றவாளிகள் திருடிச்சென்ற பணத்திலிருந்து ரூபாய். 3,00,000/- பணத்தையும், குற்றாவாளிகள் பயன்படுத்திய வாகனத்தையும் கைப்பற்றி குற்றவாளிகளுடன் தனிப்படையினர் டெல்லியிலிருந்து திருவண்ணாமலைக்கு விரைந்து வந்துகொண்டிருக்கின்றனர். பிற குற்றவாளிகளையும் கைது பல்வேறு பகுதிகளில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!