Tamilnadu

8 கிரவுண்ட் நிலம் அபகரிப்பு.. நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம்: சிக்கிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்த உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்த வழக்கு இன்று நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், சஞ்சய் கரோல்.அமர்வில் விசாரணைக்கு வந்தது.

சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. இதில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்துக் கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாக ஜெயகுமாருக்கு எதிராக மகேஷ் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார், அவரது மகள் ஜெயபிரியா, மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

2016 ஆம் ஆண்டு குற்றச்சாட்டுக்கு 2021 ஆம் ஆண்டு தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தரப்பில் வாதிடப்பட்டது. 2016 ஆம் ஆண்டு ஜெயக்குமார் அமைச்சராக இருந்ததால் புகார் அளிக்க இயலவில்லை என்று மகேஷ் தரப்பில் வாதிடப்பட்டது. காலதாமதத்தைக் குறிப்பிட்டு ஜெயக்குமார், அவரது மகள், மருமகன் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த வழக்கில் அதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் ஜெயகுமாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Also Read: "பா.ஜ.கவின் பொம்மலாட்டத்திற்கு ஆடிக்கொண்டிருக்கும் அ.தி.மு.க": கி.வீரமணி கடும் சாடல்!