Tamilnadu

இந்தியாவில் முதல் முறை.. மதுரை ரயில் நிலையத்தில் கருவாடு கடை திறப்பு: 30 வகை கருவாடுகள் விற்பனை!

இந்தியா முழுவதும் ஒரு நிலையம், ஒரு பொருள் என்ற திட்டத்தை ரயில்வேதுறை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மாவட்ட ரயில் நிலையங்களில் உள்ளூர் தயாரிப்புகளை விற்பனைக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 5000 ரயில் நிலையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி தெற்கு ரயிவேக்கு உட்பட்ட 6 ரயில் நிலைங்களில் பிரபலமான உள்ளூர் தயாரிப்புகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. மதுரை ரயில் நிலையத்தில் சுங்குடி சேலை, திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சின்னாளபட்டி கைத்தறி சேலைகள், தூத்துக்குடி ரயில்நிலையத்தில் மக்ரூன், ராமேஸ்வரத்தில் கடல் பாசி பொருட்கள் போன்ற விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இது பயணிகள் மற்றும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்தியாவிலேயே முதல் முறையாக மதுரை ரயில் நிலையத்தில் கருவாடு விற்பனையகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் நெத்திலி, வஞ்சரம், காரல், பண்ணா, நகரை, வாலை , திருக்கை என 30 வக்கும் மேற்பட்ட கருவாடுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நன்கு பதப்படுத்தப்பட்டு டப்பாவில் விலையுடன் வைக்கப்பட்டுள்ளது.

மதுரை மண்டபம் பகுதியைச் சேர்ந்த புதுமைப் பெண்கள் மகளிர் சுயஉதவிக்குழு மூலம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, கலைக்கதிரவன் ஆகிய இருவர்தான் இந்த கருவாடு விற்பனை நிலையத்தைத் தொடக்கியுள்ளனர்.

இந்த கருவாட்டு விற்பனை நிலையத்தைத் தமிழ்நாடு அரசின் புத்தொழில் மற்றும் புத்தாக்க நிறுவன நிர்வாக இயக்குநர் சிவராஜா ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். மதுரை ரயில் நிலையத்தில் கருவாடு விற்பனை நிலையம் திறக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Also Read: நடுவானில் திக் திக் நிமிடம்.. திடீரென பற்றி எரிந்த விமானத்தின் இறக்கை: கூக்குரலிட்ட பயணிகள் - வீடியோ!