Tamilnadu
“எல்லாம் அவளுக்காக..” காதலர் தினம் கொண்டாட ஆடு திருடிய கல்லூரி மாணவன்.. வளைத்து பிடித்த கிராம மக்கள் !
ஆண்டுதோறும் உலகம் முழுவதும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலை போற்றும் விதமாக கொண்டாடப்பட்டு வரும் இந்த தினம், அனைத்து தரப்பில் இருந்தும் வரவேற்பு மிக்க ஒரு தினமாக கருதப்படுகிறது.
இந்த தினத்தில் காதலர்கள் தங்கள் காதல்களை தங்களுக்கு பிடித்த வகையில் பரிமாறி கொள்வர். சிலர் தங்கள் காதலன் / காதலிக்கு பரிசு கொடுப்பர்; டேட்டிங் செய்வர்..- இப்படி சிலர் தங்களுக்கு பிடித்தவாறு காதலை வெளிப்படுத்தி காதலர் தினத்தை கொண்டாடுவர்.
ஆனால் இங்கு இளைஞர் ஒருவர் தனது காதலியுடன் காதலர் தினத்தை கொண்டாட எண்ணியுள்ளார். ஆனால் அதற்கு பணம் இல்லை என்பதால் ஆட்டை திருட முயற்சித்துள்ளார். அப்போது அந்த பகுதி கிராம மக்களிடம் வசமாக சிக்கியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது மலையரசன் குப்பம் என்ற கிராமம். இந்த கிராமத்தில் ரேணுகா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். சொந்தமாக ஆடு வைத்திருக்கும் இவர், தினசரியும் ஆட்டுக்கு தேவையானவையை செய்து பராமரித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், அந்த பகுதிக்கு உயர் ரக பல்சர் வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் வந்துள்ளனர். அப்போது யாரும் இல்லை என்று நினைத்து ரேணுகாவின் ஆட்டுப்பட்டியில் இருந்து ஆடு ஒன்றினை திருடியுள்ளனர். பின்னர் எதேர்ச்சியாக அங்கு வந்த ரேணுகா இவர்களை கண்டதும் கத்தி கூச்சலிட்டுள்ளார். மேலும் தனது ஆட்டை திருடி செல்வதாகவும் கத்தியுள்ளார்.
ரேணுகாவின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த கிராம மக்கள், ஆட்டை எடுத்து சென்ற இளைஞர்களை சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அவரை கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் இருவரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, அவர்கள் கல்லூரி மாணவன் அரவிந்த் குமார் (20) மற்றும் அவனது நண்பன் மோகன் (20) என்றும் தெரியவந்தது.
தொடர்ந்து ஆட்டை திருடியது குறித்து விசாரிக்கையில், அரவிந்த் குமார் ஒரு பெண்ணை காதலித்து வருவது தெரியவந்தது. எனவே காதலர் தினத்தை முன்னிட்டு தனது காதலிக்கு பரிசு வாங்கி தர எண்ணியுள்ளார். ஆனால் அவரிடம் போதுமான பணம் இல்லை. இதனால் அவர் ஆட்டை திருடி விற்று, அதில் வரும் பணத்தை வைத்து காதலர் தினத்தை கொண்டாட திட்டமிட்டுள்ளார்.
இதற்காக இவரது ஆருயிர் நண்பரான மோகன் என்பவரையும் துணைக்கு சேர்த்துக்கொண்டுள்ளார். அதன்படி ஆடு திருடும்போது மாட்டியுள்ளது விசரணையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக காவல்துறைக்கு அடிக்கடி புகார்கள் வந்திருக்கிறது. எனவே முன் நடந்த சம்பவங்களுக்கும், இந்த இளைஞர்களுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்றும் விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து இவர்கள் பயன்படுத்திய விலை உயர்ந்த பல்சர் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
முன்னதாக இதே போன்று காதலிக்காக பரிசு கொடுப்பதற்காக சில இளைஞர்கள், கார் ஷோ ரூமில் கார் திருட்டு, வீட்டில் நகை திருட்டு, செல்போன் கடையில் போன் திருட்டு போன்ற சம்பவங்கள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!