Tamilnadu
"கல்வி செல்வம் அனைவருக்கும் கிடைக்கவே உருவாக்கப்பட்ட இயக்கம் திராவிட இயக்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம், இந்துக் கல்லூரியில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டத்தின் கீழ் , அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- வீதம் உதவித்தொகை வழங்கும் "புதுமைப் பெண்" இரண்டாம் கட்ட திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பெண் கல்விக்கு 150 ஆண்டுகளுக்கு முன்பே முக்கியத்துவம் தந்த தருமமூர்த்தி கண்ணன் அவர்களது பெயரால் அமைந்த கல்லூரியில் புதுமைப் பெண் திட்டத்தின் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுவது மிகமிக பொருத்தமானது. ஒரு நாடு செழித்து தன்னிறைவுடன் திகழ வேண்டுமென்றால் நாட்டில் உள்ள மக்கள் கல்வியறிவு பெற்றவர்களாய் இருப்பது மிகவும் அவசியம். முக்கியமாக, பெண்களுக்கு கல்வி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
கல்வி இல்லாத பெண்கள் களர் நிலம்' என்று சொன்னார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அத்தகைய கல்விச் செல்வத்தை அனைவரும் பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான் திராவிட இயக்கம் ஆகும். அனைவருக்கும் சமமான வாய்ப்பு தரப்பட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் இது.
கல்வியை அனைவர்க்கும் பொதுவானதாக ஆக்கும் கடமையை நீதிக்கட்சி காலத்தில் இருந்து செய்து வருகிறோம்.அனைவர்க்கும் சமமான கல்வி கிடைக்கவே சமூகநீதித் தத்துவம் உருவாக்கப்பட்டது. இதில் பெண் சமூகத்தைக் கூடுதலாகக் கவனிக்க வேண்டும் என்பதற்காகவே ஏராளமான திட்டங்கள் மகளிருக்குச் செய்து தரப்பட்டன.
* நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் தான் - 1921 ஆம் ஆண்டு பெண்களும் வாக்களிக்கலாம் என்ற சட்ட உரிமை தரப்பட்டது.
* தந்தை சொத்தில் மகளுக்கும் சம உரிமை உண்டு என்ற சட்டத்தை முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் தான் 1989 ஆம் ஆண்டு பிறப்பித்தார்கள். பணியிடங்களில் பெண்களுக்கு 30 சதவிகித இடஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
* உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு தரப்பட்டது.
* மகளிர் சொந்தக் காலில் நிற்கவும், அவர்கள் பொருளாதாரச் சுதந்திரம் பெற்றவர்களாக வலம் வரவும் மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கப்பட்டது
* இப்போது ஆட்சிக்கு வந்ததும் நான் இட்ட முதல் கையெழுத்து என்பது மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதியை ஏற்படுத்தித் தந்தது ஆகும். இதுவரை 180 கோடி பயணங்களை பெண்கள் கட்டணமில்லாமல் மேற்கொண்டுள்ளார்கள்.
இந்த வரிசையில் தொடங்கப்பட்ட மகத்தான திட்டம் தான் புதுமைப் பெண் என்ற திட்டம் ஆகும். இதற்கு மூவலூர் இராமிர்தம் அம்மையார் பெயர் சூட்டப்பட்டது. திராவிட இயக்கத்தின் பெண் சிங்கமாக இருந்தவர் தான் மூவலூர் ராமாமிர்தம் அவர்கள் ஆவார்கள்.அடக்கி ஒடுக்கப்பட்ட பெண்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்தவர்.படிக்கக் கூடாது என்று தடுக்கப்பட்ட பெண்களுக்காகப் போராடியவர். அந்தக் காலத்தில் மூடநம்பிக்கை காரணமாக முடக்கப்பட்ட பெண்களுக்கு உரிமைக் கதவைத் திறந்துவிட்டவர் அவர்.
100 ஆண்டுகளுக்கு முன்னால் மகத்தான புரட்சியை தந்தை பெரியாருடன் இணைந்து நடத்திக் காட்டியவர் அவர்.1938 ஆம் ஆண்டு தமிழ்காக்கும் போராட்டத்துக்காக திருச்சி முதல் சென்னை வரை நடந்த பேரணியில் நடந்து வந்தவர் அவர்.
திராவிட இயக்கத்தின் தீரர்களுக்கு விருதுகள் தரவேண்டும் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் முடிவெடுத்து - அதனை முதன்முதலாக வழங்கியது மூவலூர் அம்மையாருக்குத்தான். அத்தகைய பெருமைமிகு அம்மையார் பெயரால் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதியன்று தலைநகர் டெல்லியில் குடியரசு தினம் அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் சார்பில் அலங்கார ஊர்தி விடப்பட்டது. அதில் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த மகளிர் ஏழு பேரின் திருவுருவச் சிலைகளை வைத்திருந்தோம். அதில் ஒருவர் தான் இராமாமிர்தம் அவர்கள். அவரது பெயரால் இந்த திட்டம் அமைந்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!