Tamilnadu

ஒருநாள் கூட லீவு போடாத 12 மாணவர்கள்.. தூத்துக்குடி to சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து வந்த ஆசிரியர்!

தூத்துக்குடியில் பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அரசு உதவி பெறும் இப்பள்ளியில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பலரும் படித்து வருகின்றனர்.

இந்தப் பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் ரமா. இவரது வகுப்பு மாணவர்கள் கல்யாணம், கோயில் திருவிழா, ஊருக்குபோகிறேன் என்ற காரணங்களைச் சொல்லி அடிக்கடி லீவு எடுத்து வந்துள்ளனர்.

இதை எப்படி தடுப்பது என்று யோசித்த ஆசிரியர் ரமாவுக்கு ஒரு சிந்தனை வந்துள்ளது. இதன் படி பள்ளிக்கு விடுமுறை எடுக்காமல் யார் வருகிறார்களோ அவர்களை சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளார்.

பின்னர் மாணவர்கள் விடுமுறை எடுப்பது குறைந்துள்ளது. பிறகு 12 மாணவர்கள் பள்ளிக்கு விடுமுறையே எடுக்காமல் வந்துள்ளனர். இதையடுத்து சொன்னபடியே சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் செல்வதாக மாணவர்களிடம் ஆசிரியர் ரமா கூறியுள்ளார்.

இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடமும் தெரிவித்து அவர்கள் அனுமதியும், பெற்றுள்ளார். பின்னர் 12 மாணவர்களையும் ஆசிரியர் ரமா தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து வந்துள்ளார்.

பின்னர் மாணவர்களை வண்டலூர் பூங்கா, வள்ளுவர் கோட்டம், மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று மாணவர்களை உற்சாக படித்தியுள்ளார். இந்த உற்சாகத்தை அடுத்து சென்னையில் இருந்து ரயில் மூலம் மாணவர்கள் தூத்துக்குடிக்குத் திரும்பினர்.

இந்த சம்பவம் குறித்துப் பேசிய ஆசிரியர் ரமா, "என்னுடைய வகுப்பு மாணவர்கள் அடிக்கடி லீவு போட்டு விடுவாங்க. இது குறித்து அவர்களது பெற்றோரிடம் சொல்லியும் எந்த பலனும் இல்லை.

பிறகு வகுப்பில் மாணவர்களிடம் உங்களுக்கு என்ன ஆசை என்று கேட்டபோது அனைவரும் விமானத்தில் செல்ல வேண்டும் என்று சொன்னாங்க. அப்போதான் லீவு போடாம பள்ளிக்கு வந்தால் விமானத்தில் அழைத்துச் செல்வேன் என்று சொன்னேன்.

அதன் பிறகுதான் 12 மாணவர்கள் லீவு போடமாக பள்ளி வந்தாக. இவர்களைச் சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் பள்ளி நிர்வாகம் பயணத்திற்கான செலவுகளுக்கு உதவினாங்க" என தெரிவித்துள்ளார். விமானம் மூலம் மாணவர்களை சென்னைக்கு அழைத்து செல்லப்பட்ட சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தமிழ்ச் சொந்தங்களோடு உறவாடிய பேனா: கிணற்று தவளை போல கூச்சலிட்டு வரும் கூட்டத்திற்கு பாடம் எடுத்த சிலந்தி!