Tamilnadu
"அந்தக் காலத்து அஞ்சாவது” -புத்தக திருவிழாவுக்கு பேரனை அழைத்து வந்த 83 வயது முதியவர்.. இதுதான் தமிழ்நாடு!
தமிழ்நாடு அரசு மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து திருப்பூரின் காங்கேயம் சாலையில் உள்ள வேலன் ஹோட்டல் மைதானத்தில் 19-வது திருப்பூர் புத்தகத் திருவிழாவை நடத்துகிறது. ஜனவரி 27-ம் தேதி தொடங்கிய இந்த புத்தக திருவிழா பிப்ரவரி 5 வரை மொத்தம் 10 நாள்கள் நடைபெறவுள்ளது.
இந்த புத்தக திருவிழாவுக்காக 126 புத்தக விற்பனை அரங்குகள் மற்றும் 24 அரசுத்துறை சார்ந்த அரங்குகள் என மொத்தம் 150 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் காலை 11 மணிக்கு தொடங்கும் இந்த புத்தக திருவிழா இரவு 9.30 மணி வரை நடைபெறுகிறது. இந்த புத்தக திருவிழாவுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் சமூகவலைத்தளத்தில் கவிஞர் மகுடேசுவரனின் பதிவு இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. அவரின் பதிவில், "நேற்றைய புத்தகத் திருவிழாவின் நாயகரே இந்தப் பெரியவர்தான். கையில் கைத்தடி. ஆனால், ஊன்றாமல் நடக்கவல்ல உடலுரம். பொக்கைவாய்ச் சிரிப்பு. நெடுநெடுவென்று வந்தவர் புத்தகங்களை அள்ளி அணைக்காத குறையாக எடுத்துப் பார்த்தார்.
ஐயனை நானும் வியப்போடு பார்த்துக்கொண்டிருக்க என்னருகில் வந்தார்.
“மகாபாரதம் முழுசா வேணும். இருக்குதா ?”
“அது பொதுப்புத்தகம் விற்கிற கடையில் இருக்குமுங்க. இரட்டைக் கடை போட்டிருப்பாங்க. அங்கே கேளுங்க ஐயா.”
ஒரு புத்தகம் எல்லாக் கடைகளிலும் கிடைக்காதோ என்ற ஐயத்தோடு வளாகத்தைக் கண்களால் சுற்றிப் பார்த்தார்.
“ஐயனுக்கு எந்த ஊருங்க ?”
“ஒத்தக்கடை. புதுப்பாளையத்துக்கிட்ட.”
“இங்க புத்தகக் கண்காட்சி நடக்குதுன்னு எப்படித் தெரிஞ்சுக்கிட்டீங்க ?”
“நம்மூரு கண்டக்டர் சொல்லொ. அதான் வந்தாவணும்னு வந்தென்.”
ஐயனோடு சிறுவன் ஒருவன் ஓடியாடினான். “இது பேரனுங்களா ?”
“அல்லொ. பேரனோட பேரன்.”
“அப்ப ஐயனுக்கு என்னதான் வயசுங்க ?”
“எண்பத்து மூனு.”
“எத்தனாவது படிச்சீங்க ?”
“அஞ்சாவது படிச்சிருக்கேன். அந்தக் காலத்து அஞ்சாவது.”
“அப்போ பெரிய படிப்புங்க ஐயா.”
ஐயனோடு வந்திருந்த இளைஞர் மேலும் சிலவற்றைக் கூறினார். “எது கிடைச்சாலும் படிச்சுப் போடறாருங்க. என்னன்னு தெரியலீங்க. படிக்கிறதுல இப்போ அவ்வளவு ஆசையா இருக்காரு. அதான் என்ன கேட்கறாரோ வாங்கிக் கொடுத்தர்றதுன்னு கூட்டி வந்துருக்கறோம்.”
ஐயனைப் பார்க்க அவ்வளவு மலைப்பாக இருந்தது. படிப்பின் இன்பத்திற்கு ஈடேது ? ஒவ்வொரு கடையாக ஏறிக்கொண்டிருந்த ஐயன் கைக்கெட்டிய நூல்களை எல்லாம் விரும்பித் தொட்டு எடுத்துப் படித்துக்கொண்டிருந்தார்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!