Tamilnadu
"இந்த அரசுக்கு கல்வியும், மருத்துவமும் இரண்டு கண்கள்".. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (1.02.2023) வேலூர் மாவட்டம், காட்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் தமிழ்நாடு முழுவதும் 784 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5351 புதிய பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள் கட்டும் பணிக்கான குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்து,
வேலூர் மாவட்டத்தின் 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 55 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ரூ.15.96 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 114 வகுப்பறைக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி ஆற்றிய உரை:-
இந்தப் பள்ளியினுடைய நிகழ்ச்சிக்கு வருகை தந்து பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கக்கூடிய இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் நான் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன்.
இந்தப் பள்ளி வளாகத்திற்குள் நுழைகிறபோது, நம்முடைய நீர்வளத் துறை அமைச்சர் அண்ணன் துரைமுருகன் ஒன்றை குறிப்பிட்டுச் சொன்னார்கள், அதைப் பெருமையோடு சொன்னார்கள், நான் படித்த பள்ளி இந்தப் பள்ளி. அந்தப் பள்ளிக்குள்ளே நுழைகிறோம் என்று பெருமையோடு எடுத்துச் சொன்னார்கள். எனவே, அவரை ஆளாக்கியிருக்கக்கூடிய, அவரைப் போன்ற பல்வேறு மாணவச் செல்வங்களை எல்லாம் உருவாக்கி இருக்கக்கூடிய, இன்னும் உருவாக்க இருக்கக்கூடிய இந்தப் பள்ளியில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மீண்டும் நான் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன். இந்தத் திட்டத்தை பொறுத்தவரைக்கும் நம்முடைய மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கமாக உங்களிடத்தில் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள்.
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2400 கோடி ரூபாய் அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு, பாழடைந்து இருக்கக்கூடிய பள்ளிக் கட்டடங்களை பழுதாகிப் போயிருக்கக்கூடிய வகுப்பறைகளை சீர்செய்திட வேண்டும், புதுப்பிக்க வேண்டும் என்கிற ஒரு நல்ல எண்ணத்தோடு இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அப்படி உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய இந்தத் திட்டத்திற்கு நம்முடைய அரசு ஒதுக்கியிருக்கக்கூடிய தொகை 2400 கோடி ரூபாய். அதில் குறிப்பாக, இன்றைக்கு மட்டும் இந்தத் திட்டத்தின் மூலமாக, நீங்கள் காணொலிக் காட்சியில் பார்த்திருப்பீர்கள், பல்வேறு மாவட்டங்களில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சிகளில் ஆங்காங்கு இருக்கக்கூடிய அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், ஆட்சித்தலைவர்கள் எல்லாம் அதில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையில் இன்றைக்கு மட்டும் 784 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5351 புதிய பள்ளி வகுப்பறைகள் கட்டக்கூடிய அந்த பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை இங்கு உங்கள் முன்னாலே நாம் நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம்.
அதிலே குறிப்பாக, இந்த வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரைக்கும் 7 ஊராட்சி ஒன்றியங்களில் 55 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 15 கோடியே 96 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 114 வகுப்பறை கட்டடங்கள் கட்டுவதற்காக இந்த விழாவிலே அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட இந்த நிலையில், இவ்விழாவை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
நான் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்கின்ற நேரத்தில் தவறாமல் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்வதுண்டு. நம்முடைய அரசைப் பொறுத்தவரைக்கும் கல்வியை, மருத்துவத்தை இரண்டு கண்களாக நாங்கள் பாவித்து அதற்காக நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் என்று பலமுறை நான் எடுத்துச் சொன்னதுண்டு. அந்த வகையில் தான், இன்றைக்கு இந்தத் திட்டம் அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.
நான் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டு நம்முடைய ஆட்சி பொறுப்பேற்றுதற்கு பின்னால், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சென்ற நேரத்தில், அந்தந்த மாவட்டங்களில் அந்தந்த பகுதிகளில் திடீர் திடீரென்று ஆய்வுக்கு நான் செல்வதுண்டு. இன்ஸ்பெக்ஷன் என்ற பெயரிலே அந்த ஆய்வுக்கு செல்லுகிற போது, அப்படிப்பட்ட ஆய்வுக்கு செல்கிறபோது பல பள்ளிகளுக்கு சென்றபோது, அந்த பள்ளியிலே படித்துக் கொண்டிருக்கக்கூடிய மாணவர்கள், மாணவியர்கள் எல்லாம் என்னிடத்திலே சொல்வதுண்டு, நாங்கள் காலையில் கூட உணவு அருந்தாமல் பள்ளிக்கு வந்து விடுகிறோம் என்று உருக்கத்தோடு சொன்னார்கள். அதைக் கேட்டுவிட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். அதற்குப் பின்னால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளையெல்லாம் அழைத்து, அதற்குப் பிறகு ஆய்வு நடத்தி அதைத் தொடர்ந்துதான், எப்படி மதிய உணவுத் திட்டத்தை நாம் அரசின் சார்பில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோமோ, அதேபோல் காலை உணவு திட்டம் ஒன்றை கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்து, அந்த திட்டத்தையும் அறிமுகப்படுத்தி, கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று அந்தத் திட்டம் தொடங்கப்பட்டு ஒரு பகுதியிலே, ஒரு சில மாவட்டங்களில் அது நிறைவேற்றப்பட்டிருக்கிறது. விரைவில் முழுமையாக அதுவும் நிறைவேற்றப்பட இருக்கிறது.
அதேபோலத்தான் பல பள்ளிக் கட்டடங்கள் இடிந்த நிலையில், வகுப்பறைகள் இல்லாத வகையில் மரத்தடி நிழல்களில் உட்கார வைத்து அதில் வகுப்புகள் நடத்தக்கூடிய அந்த காட்சிகளையும் நாங்கள் கண்கூடாக பார்த்தோம். இதையெல்லாம் உடனடியாக சீர் செய்ய வேண்டும், அந்த மாணவர்கள் வசதியாக நல்லவித அடிப்படை வசதிகளை ஏற்றுக்கொண்டு அவர்கள் படிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுடைய சிந்தனைகள் அந்தக் கல்வியை போய் சேர முடியும் என்பதை ஆழ்ந்து சிந்தித்து, அதற்குப் பிறகு பேராசிரியர் அன்பழகன் பெயரிலே இந்த பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தினை அறிவித்திருக்கிறோம். அதற்காக 2400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று முடிவு செய்து, அந்தப் பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.
எனவே இதன் மூலமாக பல பள்ளிகள் பாழடைந்திருக்கக்கூடிய, சீரழிந்து இருக்கக்கூடிய அந்த பள்ளிகளெல்லாம் இன்றைக்கு மேம்படக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறோம். இதை நல்ல வகையில், அந்தந்த பகுதியிலே இருக்கக்கூடிய அந்தந்த பள்ளி மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நான் இந்த நேரத்திலே உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொண்டு, இந்த சிறப்பான நிகழ்ச்சியை மிகுந்த எழுச்சியோடு ஏற்பாடு செய்திருக்கக்கூடிய இந்த மாவட்டத்தினுடைய ஆட்சித் தலைவருக்கும், கல்வி துறையைச் சார்ந்திருக்கக்கூடிய அதிகாரிகளுக்கும், இங்கு இருக்கக்கூடிய நம்முடைய அமைச்சர் பெருமக்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றி.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!