Tamilnadu
"ஆளுநர் பதவி அலங்கார பதவி" : அம்பேத்கரின் மேற்கோளை சுட்டிகாட்டும் தி.மு.க MP என்.ஆர்.இளங்கோ!
சென்னை பெரியார் திடலில் 'அரசமைப்புச் சட்டமும், ஆளுநரின் அதிகார எல்லையும்' என்ற தலைப்பில் தி.மு.க.சட்டத்துறை சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் பங்கேற்று கழக சட்டத்துறைச் செயலாளர், மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆற்றிய உரை வருமாறு:
இந்த சிறப்பான கருத்தரங்கத்தை நடத்த சட்டத்துறைக்கு வாய்ப்பளித்த கழகத் தலைவர் அவர்களுக்கு, சட்டத்துறை சார்பில் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அரசியலமைப்புச் சட்டமும் ஆளுநரின் அதிகார எல்லையும் என்ற தலைப்பில் தொடர் சட்டக்கருத்தரங்குகளை தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் நடத்திட கழகத் தலைவரிடம் அனுமதி கேட்டபோது, அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் உரிய ஆலோசனைகள் தந்து நமக்கு அனுமதி தந்துள்ளார்.
முதற்கட்டமாக சென்னை, மதுரை, திருச்சி ஆகிய மாநகரங்களில் கருத்தரங்குகளை நடத்துகிறோம். அதன் பின்னர் சிறப்பு அழைப்பாளர் இசைவான தேதியை கேட்டு, கோவை, திருநெல்வேலியில் கருத்தரங்குகள் நடைபெறும். தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 9ம் தேதி நடந்த நிகழ்வுகள்தான், இந்த கருத்தரங்கத்திற்கு காரணம் என என்னைக் கேட்டால், என்னுடைய பதில் அது மட்டுமே காரணம் இல்லை என்று கூறுவேன்.
தவறு செய்தவர்கள் பேரவையில் இருந்து வெளியேறிய உடனே, அந்த தவறை நேர் செய்தவர் புன்னகைத்ததுடனே, அது முடிந்து விட்டது. அதுகுறித்து பேசுவதற்கு ஏதுமில்லை. ஒரு பத்திரிகை சார்பில் நடைபெற்ற ஒரு விழாவில், அந்த பத்திரிகையின் ஆசிரியர், தமிழ் நாட்டின் முதல்வர் யாரிடம் ஆலோசனை பெற்றார் எனக்கேட்டிருந்தார்.
முதல்வர் அவர்கள் யாரிடம் ஆலோசனை கேட்டிருப்பார்கள்; அவர்கள் என்ன ஆலோசனை சொல்லியிருப்பார்கள் என்பது அவர்களுக்கு தெரிய நியாயமில்லை தான். என்ன செய்வது, எப்படி செய்வது,எப்போது செய்வது என்று கேள்விகளை தமிழ்நாட்டு முதல்வர் மூன்று பேரிடம் கேட்டார்.
திராவிடத்திற்கு, தமிழ்நாட்டிற்கு, உன் சுயமரியாதைக்கு யாராவது அவமரியாதை செய்வார்கள் என்றால், அவர்கள் யார் என்றாலும், அதன் விளைவு எதிர்த்திட வேண்டும்; ஏனென்றால் உயிரை விட மானம் பெரியது என்று பதில் சொன்னார் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்.
எப்படி செய்வது என்று கேட்டார் முதல்வர். பெரியாரின் சொல்படி நடத்திடு அது உன் கடமை. அதை தமிழ்நாட்டின் சட்டமன்றத்தின் கண்ணியம் காக்கும் வகையில், கட்டுப்பாட்டுடன் செய்திடுக என்றார் பேரறிஞர் அண்ணா.
எப்போது செய்வது என்று கேட்டார் முதல்வர். ஆளுநர் உரை படித்து முடிந்தவுடன்; அரசு தயாரித்த, அதன் தமிழாக்கம் முழுமையாக பேரவை தலைவர் படித்து முடித்தவுடன், அது பதிவானவுடன், சட்டமன்ற பேரவை விதி 17ஐ தளர்த்தி, அதற்கான தீர்மானத்தை கொண்டு வந்து, சமயோசித மாக நடந்திடுக என்றார் முத்தமிழறிஞர் கலைஞர்.
இந்த கேள்விகளும், பதில்களும் எங்களுக்கு புரியும்; உங்களுக்கு புரியாது. 9.1.2023 அன்று நடந்தது மட்டுமில்லை; அதற்கு முன்பாக சட்டமன்ற பேரவை முழுமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டு, பல சட்டமுன் மொழிவுகள் தேக்கமடைந்துள்ளன.
சிறைவாசிகளுக்கு கருணை அடிப்படையில் சட்டத்திற்கு உட்பட்டு, விடுதலை தந்திடுவதில் தாமதம் என்றெல்லாம், பல முக்கிய பணிகளிலே சுணக்கமும், பிணக்கமும் மனப்பாங்கு உள்ளது. சொல்ல போனால், இளைஞர் அணி செயலாளர் அவர்களை சந்தித்து, இந்த விழாவிற்கான அழைப்பிதழை கொடுக்கும்போது அந்த நேரத்தில் ததமிழ்நாடு, தமிழகத்திற்கான விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது.
அழைப்பிதழை பெற்றவுடன் இளைஞர் அணி செய்லாளர் விளக்கம் கொடுத்து விட்டாரே என துவங்கினார். இதற்கு முன்பாக, ஆமாம் ஆமாம் நிறைய BILL Pendingல் இருக்கிறது. இந்த ஆளுநருக்காக மட்டு மில்லை; வரக்கூடிய ஆளுநர்களுக்கும் இந்த மாதிரியான கருத்தரங்கங்களை நடத்திட வேண்டும் என்று இளைஞர் அணி செயலாளர் சொன்னார்.
இதில் யார் சொல்வது சரி என்பது பிரச்சினை அல்ல; அரசியலமைப்பு சட்டம் என்ன சொல்கிறது என்பதே இறுதியானது. அரசியலமைப்பு சட்டம்என்ன சொல்கிறது என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த கருத்தரங்கத்தின் நோக்கம். இதுவே கழகத் தலைவர் அவர்களின் விருப்பமும் கூட.
இந்த கருத்தரங்கள் துவக்கம் தானே அன்றி இது முடிவல்ல. இந்த கருத்தரங்கத்தில் பேசக்கூடிய கருத்துக்களெல்லாம் தீப் பொறிகள்தான். அதனை கேட்டிடும் வழக்கறிஞர்களும், மாணவர்களிடமும், இளைஞர்களிடமும், அ னைப் பற்றி பேச வேண்டும். பேரறிஞர் கூறியது போல், தீ பரவட்டும். நாம் பரப்பக் கூடிய தீ தெளிவின்மையை அழித்துவிடும்; பகுத்தறிவுகளை வளர்த்து விடும்.
தமிழர்களெல்லாம் அறியும் வண்ணம், அரசியலமைப்புச் சட்டம், ஆளுநரின் அதிகார எல்லையை எவ்வாறு வரையறுத்துள்ளது என்று உரையாற்றிட வருகை வந்துள்ள இந்த மூன்று ஆளுமைகளுக்கு மீண்டும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள சரத்துக்களை நாம் புரிந்து கொள்ள வேண்டுமானால், பொதுவாக, அரசியல் அமைப்பு நிர்ணய சபையிலே நடந்த விவாதங்களை தான் மேற்கொள்ள காட்ட வேண்டும். அப்படி நடைபெற்ற விவாதங்களில், ஒரே ஒரு விவாதத்தை மட்டும் உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்.
30.5.1949ல், டாக்டர் பேசிய அம்பேத்கர் குறிப்பில், ஆளுநர் என்ற பதவி, தேர்தலில் மூலமாக நியமிக்க வேண்டுமா அல்லது நியமன முறையிலே நடத்திட வேண்டுமா என்ற விவாதம் வந்தது. விவாதத்திற்கு டாக்டர் அம்பேத்கர் அளித்த பதிலில், ஆளுநர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டால் என்ன, நியமிக்கப்பட்டால் என்ன. அவர் ஒரு அலங்கார பதவியை வகிக்க போகிறார். அவருக்கென்று எந்த அதிகாரமும், அரசியலமைப்பு சட்டத்தில் கொடுக்கப்படவில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட மந்திரி சபையின் மூலமாக, அவர்கள் சொல்லும் கருத்துக்குட்பட்டே, ஆளுநர் இயங்க வேண்டும் என்பதால், அவர் எந்த முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் பரவாயில்லை. எனவே தேர்தல் தேவையில்லை; நியமன முறையிலே நியமனம் செய்தால் போதுமானது என்று டாக்டர் அம்பேத்கர் சொல்லியிருந்தார்.
இந்த முன்னுரையுடன் இங்கே அமர்ந்திருக்கும் மூவரும் அரசியலமைப்புச் சட்டத்திலே ஆளுநரின் அதிகார எல்லைகளை எவ்வாறாக வரையரத்துள்ளன என்று பேசிட, அந்தப் பேச்சின் மூலமாக தமிழக மக்களுக்கு விளக்கம் அளித்திட அழைக்கிறேன்.
இவ்வாறு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!