Tamilnadu

“அன்று No 1 முதல்வர்.. இன்று No 1 மாநிலம்..” சொன்னதை செய்துகாட்டிய முதலமைச்சர்.. இந்தியா டுடே கெளரவிப்பு!

அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளில் இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது, மூதலிடத்தில் தமிழ்நாடு இருக்கிறது என்று “இந்தியா டுடே' ஆங்கில தொலைக்காட்சி மேற்கொண்ட சர்வேயில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டைப்போல 2022 ஆம் ஆண்டும் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பது குறித்து கலந்துரையாடலில் பங்கேற்றவர்கள் பெருமையுடன் குறிப்பிட்டதுடன், அது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களையும் பேட்டி கண்டது.

இந்தியாவில் 2022ஆம் ஆண்டின் சிறந்த மாநிலங்கள் தொடர்பாக "இந்தியா டுடே' ஆங்கில தொலைக்காட்சியில் கலந்துரையாடல் நடைபெற்றது.

"இந்தியா டுடே' ஆசிரியர் குழும இயக்குநர் ராஜ் செங்கப்பா நெறியாளராக இருந்து நடத்திய இந்த கலந்துரையாடலில் எம்.டி. ஆர்.ஏ. முன்னணி ஆய்வு மைய இயக்குநர் அபிஷேக் அகர்வால் மற்றும் "இந்தியா டுடே" நிர்வாக ஆசிரியர் கௌஷிக் டேக்கா பங்கேற்றனர்.

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள், அரசுகள் குறித்து இந்தியா டுடே சர்வே செய்து வெளியிட்டதன் அடிப்படையில் இந்தக் கலந்துரையாடல் நடந்தது.

இந்தக் கலந்துரையாடலின்போது நெறியாளர் ராஜ் செங்கப்பா குறிப்பிட்டதாவது:-

"இந்தியா என்பது பல்வேறு மாநிலங்கள் கொண்ட ஒன்றிய பிரதேசமாகும். அப்படிப் பார்த்தால் கூட்டாட்சி முறையில் நடைபெறும் அரசு மைய அரசு. மாநிலங்களின் வளர்ச்சி என்பதுதான் ஒன்றிய அரசான, இந்தியாவின் வளர்ச்சி ஆக இருக்கும்.

இந்தியாவில் உள்ள மாநிலங்களின் வளர்ச்சி குறித்து 2003 ஆம் ஆண்டு முதல் "இந்தியா டுடே" ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கலந்துரையாடலின் போது அபிஷேக் அகர்வால் குறிப்பிட்டதாவது:-

பொருளாதாரம், உள்கட்டமைப்பு, வேளாண்மை, சுகாதாரம், கல்வி, சட்டம் - ஒழுங்கு, வளர்ச்சி, ஆட்சி, தொழில் சுற்றுலா, சுற்றுச் சூழல், தூய்மை உள்ளிட்ட மாநில துறைகளின் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து அதன் மூலம் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பற்றி முடிவு எடுக்கப்பட்டது என்றார்.

'இந்தியா டுடே' நிர்வாக ஆசிரியர் கௌஷிக் டேக்கா குறிப்பிட்டதாவது:-

ஒவ்வொரு மாநிலங்களும் ஒரு சில துறைகளில் சிறந்து விளங்குவதாக தெரிவித்தார். அதே சமயம் தமிழ்நாடு பல துறைகளில் சிறந்து செயல்பட்டு முன்னணி மாநிலமாக திகழ்கிறது என்றும் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு முதலிடம்!

ராஜ்செங்கப்பா: பெரிய மாநிலங்களில் சிறந்து விளங்கும் மாநிலமாக மீண்டும் தமிழ்நாடு திகழ்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு சிறந்த மாநிலங் ளில் முதலிடத்தை வகிக்கிறது.

அதைத் தொடர்ந்து இமாச்சலப் பிரதேசம், கேரளா, குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் சிறந்த மாநிலங்களின் வரிசையில் உள்ளன.

தமிழ்நாடு மீண்டும் சிறந்த மாநிலமாக விளங்க என்ன காரணம்?

அபிஷேக் அகர்வால் : தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அனைத்துத் துறைகளிலும் சிறந்த முறையில் செயல்படுகிறது என்றே கூறலாம். மொத்தமுள்ள 12 துறைகளில் முதல் 5 மாநிலங்களில் தமிழ்நாடு 9 துறைகளில் சிறந்து விளங்குகிறது. முதல் 3 மாநிலங்களில் தமிழ்நாடு 5 துறைகளில் சிறந்து விளங்குகிறது. கல்வி, சட்டம்-ஒழுங்கு, பொருளாதாரம் உள்ளிட்டவைகளில் சிறந்து விளங்குகிறது. தமிழ்நாடு, துணிச்சலுடன் பல்வேறு திட்டங்களைசெயல்படுத்தி வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

(இதைத்தொடர்ந்து ராஜ் செங்கப்பா, தமிழ்நாட்டில் சென்று அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பேட்டி கண்டார்.)

ராஜ்செங்கப்பா: ஸ்டாலின் சார். வாழ்த்துக்கள். நீங்கள் 'இந்தியா டுடே'வின் சிறந்த மாநிலங்களுக்கான விருதை பெறுகிறீர்கள் உங்களுக்கு மீண்டும் வாழ்த்துக்கள். இந்த விருதைப் பெற்றது குறித்து உங்களது கருத்து என்ன?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: சென்ற ஆண்டு இதே 'இந்தியா டுடே'வில் இந்தியாவில் இருக்கும் முதலமைச்சர்களில் 'நம்பர் 1 முதலமைச்சர் நான்' என்று நீங்கள் கருத்துக் கணிப்பு வெளியிட்டீர்கள். அதை ஏற்றுக் கொண்டு, இந்தியாவில் முதல் முதலமைச்சர் என்கிற பெயரை விட, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு வரவேண்டும். அதுதான் என்னுடைய விருப்பம் என்று சொன்னேன். இப்போது நீங்கள் அதை வெளியிட்டுள்ளீர்கள். தமிழ்நாடு முதல் மாநிலமாக விளங்கி வருகிறது. அந்த வகையில் நானும் மகிழ்ச்சி அடைகிறேன். பெருமை படுகிறேன். இது இன்னும் என் பணிகளை ஊக்கப்படுத்துவதற்கும் உற்சாகப்படுத்துவதற்கும் நிச்சயம் பயன்படும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

ராஜ்செங்கப்பா: உங்கள் வெற்றியின் மந்திரம் என்ன?

முதல்வர் மு.க.ஸ்டாலின் : அதாவது மக்களோடு மக்களாக இருக்கவேண்டும். மக்களோடு இருந்து மக்களின் பிரச்சினைகளை கேட்டு அந்த அடிப்படையில் செயல்படவேண்டும் என்றுதான் எங்களுக்கு அறிஞர் அண்ணா கற்றுத் தந்தார். தலைவர் கலைஞரும் அப்படித்தான் செயல்பட்டார்கள். அவர் வழியில் நானும் அப்படியே செயல்படுகிறேன்.

ராஜ்செங்கப்பா: ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் நீங்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டீர்கள். இந்த மாநிலத்தை ஒரு சிறந்த மாநிலமாக மாற்ற நீங்கள் எவ்வாறு செயல்பட உள்ளீர்கள்? ஆட்சிக்கு வருவதற்கு முன்பே...!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: நாங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நேரத்தில், ஒரு பெரிய தொற்று கொரோனா என்கிற கொடிய தொற்று, அதிவேகமாக பரவிக் கொண்டிருந்தது. வெற்றி பெற்று, ஆட்சி அமைப்பதற்கு முன்பே, என்னை வந்து சந்தித்த அரசு அதிகாரிகள் கொரோனா பற்றி எடுத்துரைத்தார்கள். அப்போதே நான் அந்த அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டங்களும் நடத்தினேன். இந்தக் கொரோனோவை எப்படி தடுப்பது, எப்படி ஒழிப்பது என்பது குறித்து ஆய்வு நடத்தினேன்.

பின்னர் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு, அதற்காக நியமிக்கப்பட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மட்டுமல்ல, நான் உள்பட, எல்லா அமைச்சர்களுமே மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக மாறி இந்தக் கொரோனாவை எதிர்த்து கடுமையாக செயல்பட்டோம். அதன் காரணமாக கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. அது ஒரு சோதனையான கால கட்டம். அதன் பிறகு, தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் என்னென்ன வாக்குறுதிகளை கொடுத்தோமோ அவைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தினோம்.

முதல் கட்டமாக மூன்று வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக ஆட்சிப் பொறுப்பேற்ற உடனே மூன்று கையெழுத்துக்களை போட்டு நிறைவேற்றினேன். படிப்படியாக தேர்தல் கால வாக்குறுதிகளை எங்கள் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றுவோம்.

ராஜ்செங்கப்பா: தமிழ்நாடு தற்போது வளர்ச்சி உள்ளிட்ட திட்டங்களில் முதலிடத்தில் இருப்பதற்கான விருதை பெற்றுள்ளது. இந்த நிலையில் அனைத்துத் தரப்பு மக்களின் வளர்ச்சி உள்ளிட்டவைகளில் உங்கள் எல்லா தொலைநோக்கு பார்வை என்ன?

முதல்வர் மு.க.ஸ்டாலின் : எல்லார்க்கும் எல்லாம். அதாவது உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, நடுத்தர வர்க்கம், பிற்படுத்தப்பட்டவர்கள் என்று பார்க்காமல், தரப்பினருக்கும், எல்லா மக்களுக்கும் எல்லாம் கிடைக்கவேண்டும் என்கிற உறுதியோடு நாங்கள் பணியாற்றிக் கொண்டு வருகிறோம். சமூகநீதி, சமத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, அந்த அடிப்படையில் நாங்கள் ஆட்சியை நடத்திக் கொண்டு வருகிறோம்.

ராஜ்செங்கப்பா: உங்களின் உடலை கட்டுக்கோப்பில் வைத்துக் கொண்டுள்ளீர்கள். அதற்காக ஓய்வு நேரத்தை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறீர்கள்? ஓய்வு நேரம் கிடைக்கிறதா?

முதல்வர் மு.க.ஸ்டாலின்: நான் அடிப்படையில் நான் கட்டுப்பாடாக சிறுவயதிலிருந்தே விளையாட்டு, இருக்கிறேன். உடற்பயிற்சி இவைகளில் அதிகமாக கவனம் செலுத்துவேன். அந்த அடிப்படையில்தான் இப்பவும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும் சரி, உள்ளாட்சித் துறை அமைச்சராக, துணை முதலமைச்சராக இருந்தபோதும், இப்போது முதலமைச்சராக இருக்கும் போதும் சரி, உடற்பயிற்சியை நான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்.

உணவு விஷயத்திலும் கட்டுப்பாடுடன் இருப்பேன். இதுதான் வேண்டும், இது வேண்டாம் என்று இல்லாமல் கட்டுப்பாட்டுடன் உணவு உட்கொள்வேன். கவிப்பேரரசு வைரமுத்து "பசியோடு உட்கார்ந்து பசியோடு எழ வேண்டும்" என்று அடிக்கடி சொல்வார். அந்த அடிப்படையில் நான் கட்டுக்கோப்பாக இருக்கிறேன். என் உடலும் கட்டுப்பாடாக உள்ளது.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜ் செங்கப்பாவிற்குப் பேட்டி அளித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுடனான பேட்டிக்குப் பிறகு ராஜ் செங்கப்பா தொடர்ந்து குறிப்பிடுவதாவது:-

தமிழ்நாடு, நன்கு செயல்படும் பெரிய மாநிலங்களில் முதலிடத்தைப் பெற்று, சிறந்த முறைகளில் செயல்படும் மாநிலம் என்ற விருதைப் பெறுகிறது. ஆந்திரப் பிரதேசம் இரண்டாம் இடத்திலும், மத்தியப் பிரதேசம் மூன்றாம் இடத்திலும், பீகார் நான்காம் இடத்திலும், குஜராத் ஐந்தாம் இடத்திலும் சிறந்த மாநிலங்களின் வரிசையில் இடம் பெற்றுள்ளன. அவரை அடுத்து பேசிய அபிஷேக் அகர்வால், ஒவ்வொரு மாநிலமும் குறிப்பாக பெரிய மாநிலங்களில் 2,3,4 மற்றும் 5வது சிறந்த மாநிலங்களின் சிறப்பு குறித்து விவரித்தார்.

தொடர்ந்து பேசிய நிர்வாக ஆசிரியர் கௌஷிக் டேக்கா : 'இந்தியா டுடே' மேற்கொண்ட சர்வேயில் முன்னணியாகத் திகழும் ஒரு சில மாநிலங்கள் பற்றி எடுத்துரைத்தார். இதையடுத்து சிறந்த மாநில விருதை பெறுவதற்கான சான்று குறித்து உங்களின் உடனடியான கருத்து என்ன என்று நெறியாளர் ராஜ் செங்கப்பா கேள்வி எழுப்பினார்.

அதற்கு அபிஷேக் அகர்வால் பதிலளிக்கையில், எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட நிலையில் தமிழ்நாடு முதல் மாநிலமாகவும் அதையடுத்து அஸ்ஸாம் மாநிலம் அதை பின் தொடர்கிறது என்றும் குறிப்பிட்டார். இது பற்றி கௌசிக் குறிப்பிடுகையில், கொள்கை, அதை அமல்படுத்தும் விதம் - இவைகளை கருத்தில் கொண்டு அந்த விருது அளிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

எல்லா மாநிலங்களும் தங்களுக்கென்று கொள்கைகள் கொண்டிருந்தாலும் தமிழ்நாடு அவைகளின் அமலாக்கத்தில் கவனம் செலுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இதையடுத்து ராஜ்செங்கப்பா குறிப்பிடுகையில், "தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினிடம், நான் பேட்டி கண்ட போது, எனக்கு தெரியவந்தது என்னவென்றால், மாநிலத்தின் சமத்துவப் பொருளாதார வளர்ச்சியில் அவர் அக்கறை கொண்டு, ஒரு மாதிரி அரசாக தமிழ்நாட்டை நடத்தி வருகிறார் என்பதுதான்" என்று தெரிவித்தார்.

- நன்றி இந்தியா டுடே & முரசொலி !

Also Read: “மொழி என்பது வெறும் கருவி அல்ல - நம் குருதி ஆகும்..” மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் ! - முரசொலி