Tamilnadu

“ஈரோடு இடைத்தேர்தலில் பா.ஜ.க - அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவு கிடையாது” : அடித்துச் சொன்ன PR.பாண்டியன்!

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தி.மு.க., கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கிஉள்ளது.

காங்கிரஸ் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பணியைத் தொடங்கி விட்டது. ஈரோடு மாவட்ட தி.மு.க சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தைக் கூட்டி தேர்தல் பணியைத் தொடங்கிய அமைச்சர் சு.முத்துசாமி வாக்காளர்களிடம் வாக்கு கேட்கும் பணியையும் தொடங்கியுள்ளார்.

அமைச்சர் முத்துசாமியுடன் அமைச்சர் கே.என்.நேருவும் இணைந்து ஈரோடு பகுதியில் காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தேர்தல் வேலையைத் தொடங்கியுள்ளனர். பரபரப்பான இடைத்தேர்தல் களத்தில் திமுகவின் முன்னணி தலைவர்கள் இப்போதே தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டதால், தி.மு.க கூட்டணிக் கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க அங்கம் வகிக்கும் வேட்பாளர்களுக்கு எங்களது ஆதரவு கிடையாது; அதுதான் விவசாயிகளின் நிலைப்பாடு என பிஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்து டெல்லியில் போராடிய விவசாயிகளை ஏமாற்றிய ஒன்றிய அரசுக்கு எதிராக தமிழ்நாட்டு விவசாயிகள் குரல்கொடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் கூட்டம் இன்று நாகையில் நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிஆர்.பாண்டியன், “ஒன்றிய அரசு தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை கடைபிடித்து வருகிறது. அரிசி மிகை உற்பத்தி காலத்தில் வெளிநாட்டு ஏற்றுமதிக்கு தடை விதித்து ஒன்றிய அரசு விவசாயிகளின் வயிற்றில் அடித்துள்ளது.

வேளாண் விரோத சட்டங்களை டெல்லியில் போராடிய விவசாயிகளிடம் திரும்ப பெறுவதாக மோடி அறிவித்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விவசாயிகளை ஒன்றிய அரசு ஏமாற்றி வருகிறது. குறைந்த பட்ச ஆதார விலையை அறிவித்த ஒன்றிய அரசு நியமித்த அதற்கான குழுக்கள் இதுவரை செயல்படவில்லை.

வருகின்ற மார்ச் 1 ஆம் தேதி குமரியில் தொடங்கி மார்ச் 20 ஆம் தேதி டெல்லி நோக்கி ஒன்றிய அரசை கண்டித்து யாத்திரை. பா.ஜ.க தவிர அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். மார்ச் 21 ஆம் தேதி டெல்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளோம்.

உத்திரபிரதேச தேர்தலை மனதில் வைத்தே ஒருவருடம் டெல்லியில் போராடிய விவசாயிகளிடம் வேளாண் சட்டத்தை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்து விவசாயிகளை தற்போது ஏமாற்றி உள்ளார்.

விவசாய விரோத செயல்களை மேற்கொள்ளும் பிரதமர் மோடியை கண்டித்து நடைபெறும் இந்த பேரணியில் தமிழ்நாட்டு விவசாயிகள் மீது அக்கறை இருந்தால் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பங்கேற்க வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க அங்கம் வகிக்கும் வேட்பாளர்களுக்கு எங்களது ஆதரவு கிடையாது. அதுதான் விவசாயிகளின் நிலைப்பாடு” என்று கூறினார்.

Also Read: “ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டி” : காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவிப்பு!