Tamilnadu

துணிவு படம் பார்த்து வங்கியில் புகுந்த வாலிபர்.. ஊழியர்களை மிரட்டி கொள்ளை முயற்சி: சிக்கியது எப்படி?

திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. வங்கி இருக்கும் இடம் முக்கிய சாலை என்பதால் எப்போதும் இங்கு பரபரப்பாகவே இருக்கும்.

இந்நிலையில் இன்று காலை வங்கியில் மூன்று ஊழியர்கள் மட்டும் இருந்தனர். அப்போது வங்கிக்குள் நுழைந்த வாலிபர் ஒருவர் திடீரென மிளகாய்ப்பொடி, பெப்பர் ஸ்பிரே, கட்டிங் பிளேடு உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி ஊழியர்களை மிரட்டியுள்ளார்.

பின்னர் மூன்று ஊழியர்களையும் கட்டிப்போட்டுக் பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளார். அப்போது ஒரு ஊழியர் அங்கிருந்து தப்பித்து வெளியே ஓடிவந்து வங்கியல் ஒருவன் கொள்ளை அடிப்பதாகப் பொதுமக்களிடம் கூறியுள்ளார்.

இதைகேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனே வங்கிக்குள் புகுந்த அந்த வாலிபரைச் சுற்றிவளைத்தனர். அப்போது அவர் ஆயுதங்களைக் காட்டி பொதுமக்களையும் மிரட்டியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து அங்கு போலிஸார் விரைந்து வந்தனர்.

பின்னர் போலிஸார் அந்த வாலிபரைப் பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் வங்கியில் கொள்ளை அடிக்க வந்தது திண்டுக்கல் பூச்சி நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த கலீல் ரகுமான் என்பது தெரியவந்தது.

மேலும் வாழ்க்கையில் விரக்தி அடைந்ததால் 'துணிவு' போன்ற வங்கியில் கொள்ளையடிக்கும் படங்களைப் பார்த்து, அதன்படி வங்கியில் கொள்ளையடிக்க வந்ததாக கலீல் ரகுமான் கூறியதைக் கேட்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து கைது செய்த போலிஸார் மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் வங்கியில் புகுந்து தனிநபராக வாலிபர் ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஷூட்டிங் ஸ்பாட்டில் மயங்கி விழுந்த இளம் உதவி இயக்குநர் உயிரிழப்பு.. சாந்தனு வெளியிட்ட பதிவால் பரபர !