Tamilnadu

“காவி கட்சிக்கு பிரசார தூதுவராக செயல்படுகிறார் RN.ரவி.. ஆளுநர் நமக்கு வேண்டாம்”: நீதியரசர் சந்துரு ஆவேசம்

திமுக சட்டத்துறை சார்பில், அரசியலமைப்பு சட்டமும், ஆளுநரின் அதிகார எல்லையும் என்ற சட்ட கருத்தரங்கம் நிகழ்ச்சி சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், தி.மு.க எம்பி என்.ஆர்.இளங்கோ, திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு, திமுக சட்டத்துறை தலைவர் இரா.விடுதலை, தி.மு.க சட்டத்துறை இணை செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன், எழும்பூர் எம்.எல்.ஏ பரந்தாமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில், சென்னை முன்னாள் நீதிபதி சந்துரு பேசுகையில், ‘‘ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு ஒரு குழுவை அமைத்து, அதற்கு தலைவராக என்னை போட்டார்கள். நாங்கள் ஆராய்ந்து ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று அறிக்கையை சமர்ப்பித்தோம். அதை ஏற்ற அரசும் அவசர சட்டம் பிறப்பித்தது அந்த அவசர சட்டத்திற்கு இதே ஆளுநர் கையொப்பமிட்டார்.

சட்டப்பேரவையில் அவசர சட்டத்தின் ஒரு பிரதி சட்டமாக நிறைவேற்றப்படுவதற்காக ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், அந்த மசோதாவுக்கு அதே ஆளுநர் கையொப்பமிட மறுக்கிறார். ஆளுநர் சூதாட்ட கம்பெனி முதலாளிகளுக்கு, ராஜ்பவனில் தேநீர் விருந்து அளித்து கொண்டிருக்கிறார். காவி கட்சிக்கு பிரசார தூதுவராக ஆளுநர் செயல்படுகிறார். இந்த ஆளுநர் மட்டுமல்ல எந்த ஆளுநரும் நமக்கு வேண்டாம் என்ற ஒரு முடிவுக்கு நாம் விரைவில் தள்ளப்படுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “திமுக அரசு எடுத்த நடவடிக்கை : தமிழ்நாட்டில் 1.14 லட்சம் பேருக்கு வேலை..”: அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!