Tamilnadu
“மதவாதத்துக்குத்தான் எதிரானவர்களே தவிர; மதத்துக்கு அல்ல” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு உரை!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய பதிலுரை :-
கடல்கண்டு மலைகண்டு பயன் கொண்ட தமிழ்நாடு வாழ்க!
களங்கண்டு கலை கண்டு கவின் கொண்ட தமிழ்நாடு வாழ்க!
உடல்கொண்டு உரங்கொண்டு உயர்வாண்ட தமிழ்நாடு வாழ்க!
உளமாண்டு உலகாண்டு புகழாண்ட தமிழ்நாடு வாழ்க! வாழ்கவே!
என்று தாய்த் தமிழ்நாட்டை வாழ்த்தி, பேரவைத் தலைவர் அவர்களுக்கும், இந்த மாமன்ற உறுப்பினர்களுக்கும் என்னுடைய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களையும், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களையும் கூறி, எனது உரையை நான் தொடங்குகிறேன்.
தாய்த் தமிழ்நாட்டைக் காக்க ஒப்படைத்துக் கொண்டு தூங்காமை, கல்வி, துணிவுடமை ஆகிய மூன்றையும் முறைமேற்கொண்டு முறைசெய்து வெல்லும் திராவிட மாடல் ஆட்சியானது நடைபெற்று வரும் வேளையில் மகிழ்ச்சியான மனநிலையில் இந்த மாமன்றத்தில் நான் கம்பீரமாக நிற்கிறேன்.
சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகளை உள்ளடக்கிய திராவிட மாடல் ஆட்சியானது வீரத்துடனும், விவேகத்துடன் நடைபெற்று வருகிறது என்பதை தமிழ்நாடு மட்டுமல்ல; இந்தியத் துணைக்கண்டமே இப்போது உணர்ந்துவிட்டது.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், சமத்துவப் போராளி அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், அறிஞர்களுக்கெல்லாம் பேரறிஞர் அண்ணா, எங்களை எல்லாம் ஆளாக்கி அழகு பார்த்த நவீன தமிழ்நாட்டின் சிற்பி முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர், இவர்களது கொள்கைகளையும், இலட்சியங்களையும் கொண்டு செலுத்துவதற்காக உருவாக்கப்பட்டதே இந்த திராவிட மாடல் ஆட்சி!
இருபது மாதங்களைக் கடந்திருக்கிறது கழக அரசு. அதற்குள் இமாலய சாதனைகளைச் செய்திருக்கிறோம். நாம் கடந்துள்ள காலம் குறைவுதான். ஆனால் ஆற்றியுள்ள பணிகள் அதிகம். அதேநேரத்தில், இந்த இருபது மாத காலம் போனதே தெரியவில்லை. இலக்கினை அடைவதை நோக்கமாகக் கொண்டு நாம் செயல்பட்டோம். மக்களின் நலன் மட்டுமே நம்முடைய சிந்தையில் நின்றது; அதுவே மக்களின் மனதை வென்றது.
சமூகநீதி - சமத்துவம் - சுயமரியாதை - மொழிப்பற்று - இன உரிமை - மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடித்தளத்தில் எழுப்பப்பட்ட பலம் வாய்ந்த இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். அரசியல் களத்தில் எந்த நோக்கத்தை விதைத்ததோ, அதே நோக்கம் கொண்ட மக்களாட்சியை எந்தவித சமரசத்துக்கும் இடமின்றி கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக நாங்கள் நடத்தி வருகிறோம்.
தமிழ்நாட்டின் மேன்மைக்கும் வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் உயர்வுக்கும் வழிவகுக்கும் 'திராவிட மாடல்' கொள்கையை உருவாக்கி அதன் தடத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி செயல்பட்டு வருகிறது. செயல்பட்டு வருகிறது என்பதை விட - திராவிட மாடல் ஆட்சியானது வெற்றி பெற்று வருகிறது என்பதுதான் சரியானதாகும்.
'எல்லார்க்கும் எல்லாம்' என்ற அடிப்படையிலேயே தமிழ்நாட்டினுடைய வளர்ச்சியானது அமைய வேண்டும் என்று நாம் திட்டமிட்டோம். தொழில் வளர்ச்சி - சமூக மாற்றம் - கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும்; அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் என்று விரும்பினோம். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று திட்டமிட்டோம்.
பொருளாதாரம் - கல்வி - சமூகம் - சிந்தனை - செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒருசேர வளர வேண்டும். அதுதான் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் காணவிரும்பிய வளர்ச்சி. அது தான் திராவிட மாடல் வளர்ச்சி! அதுதான் தமிழ்நாடு காணும் தனித்துவமான வளர்ச்சி. அத்தகைய திராவிட மாடல் சிகரத்தை நோக்கிய பயணமானது ஒரு சரித்திரப் பயணமாக - ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதை இந்த மாமன்றத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதில் நான் பெருமை அடைகிறேன்.
கடந்த 9 ஆம் தேதியன்று ஆளுநர் இந்த மாமன்றத்தில் 2023-2024 ஆம் ஆண்டின் தொடக்கத்துக்கான தொடக்கவுரையை ஆற்றினார்கள். தமிழ்நாடு அரசின் பன்முகக் கூறுகளை விளக்கியும், தமிழ்நாடு அரசு எந்த வகையில் எல்லாம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்பதைப் பாராட்டியும், எதிர்காலத்தில் செயல்படுத்த இருக்கக்கூடிய முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து சுருக்கமாக அறிவித்தும் தனது உரையை இந்த மாமன்றத்துக்கு ஆற்றினார்கள்.
அன்றையதினம் நிகழ்ந்தவற்றை மீண்டும் பேசி அரசியலாக்க நான் விரும்பவில்லை. அதே நேரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் மாண்பைக் காக்கவும், மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆட்சியின் வலிமையை உணர்த்தவும், நூற்றாண்டைக் கடந்த இந்த சட்டமன்றத்தின் விழுமியங்களைப் போற்றவும் நான் என்னுடைய சக்தியை மீறியும் செயல்படுவேன் என்பதை இந்த மாமன்றமும் என்னை இச்சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுத்து அனுப்பிய தமிழ்ப் பெருமக்களும் நன்கு அறிவார்கள்.
பேரவைத் தலைவர் அவர்களே,
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலைகடல் ஓய்வதில்லை
செந்தமிழே நீ பகைவென்று முடிசூடிவா
மயிலாட வான்கோழி தடை செய்வதோ
மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ?
முயர்கூட்டம் சிங்கத்தின் எதிர்நிற்பதோ
அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ ?
உயிருக்கு நிகர் இந்த நாடு அல்லவோ
அதன் உரிமைக்கு உரியவர்கள் நாம் அல்லவோ?
என்ற திராவிட இயக்கக் கவிஞர் முத்துக்கூத்தன் அவர்களின் கவிதையை நாம் என்றும் நினைவில் கொண்டு, பெருமித நடைபோடுவோம்.
தமிழ்காக்க, தமிழர் நலன் காக்க, தமிழ்நாட்டின் மானம் காக்க என்றும் உழைக்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மகன் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதை மெய்ப்பித்துக் காட்டும் நாளாக, அன்றைய தினம் அமைந்திருந்ததே தவிர வேறல்ல.
பேரவைத் தலைவர் அவர்களே, ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் இம்மாமன்றத்துக்கு வருகை தந்து உரையாற்றிய ஆளுநர் அவர்களுக்கு இந்த அரசின் சார்பிலான நன்றியை இந்த மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நாட்காட்டியில் நகரும் ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டுக்கு நன்மை தரும் நாளாக உயர்ந்து வருகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள். அதற்காக பாராட்டி வருகிறார்கள். 'கடிகாரம் ஓடும் முன் ஓடு' என்று புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எழுதினார். அதேபோலத்தான் நாங்கள் வேகமாகவும் - அதே நேரத்தில் விவேகமாகவும் செயல்பட்டு வருகிறோம். ‘நான்’ என்று சொல்லும் போது என்னை மட்டுமல்ல; அமைச்சரவையை மட்டுமல்ல; நமது சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் உள்ளடக்கி ஒட்டுமொத்தமாகச் சேர்த்துத்தான் நான் சொல்கிறேன்.
ஆட்சிப் பொறுப்பேற்றபின் மேற்கொண்ட எனது பயணங்கள் குறித்து பின்னோக்கிப் பார்க்கும் போது எனக்கே மலைப்பாக இருக்கிறது. கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் 655 நிகழ்ச்சிகளில் நான் பங்கெடுத்துள்ளேன். ஓராண்டு என்பது 365 நாட்களாக இருந்தாலும் - ஒரு நாளைக்கு இரண்டு நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட அளவுக்கு நான் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளேன். அதிலே 551 நிகழ்ச்சிகள் அரசு நிகழ்ச்சிகள். இடையில் கொரோனா தாக்கப்பட்டு சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டியதாக இருந்தது. கால் வலி மற்றும் முதுகு வலி காரணமாக சில நாட்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வெடுத்தேன். இத்தகைய இடர்பாடுகள் இல்லாமல் இருந்தால் இன்னும் 50 நிகழ்ச்சிகள் அதிகம் ஆகியிருக்கும்.
மொத்தமாகச் சொல்வதாக இருந்தால் கடந்த ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 9 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களைச் சந்தித்து விட்டு வந்திருக்கிறேன். நாள்தோறும் உழைப்பதாகச் சொல்வார்கள் - இல்லை இல்லை நொடிக்கு நொடி உழைத்து வருகிறேன். என்னை வருத்திக் கொண்டு நான் அலையவில்லை. யாரும் பாராட்ட வேண்டும் என்பதற்காகவும் நான் ஓயாத அலைச்சல்களை உருவாக்கிக் கொள்ளவில்லை. நான் என்னுடைய இயல்பில் தான் இருக்கிறேன். இதில் ஆச்சர்யப்படுவதற்கு எதுவுமில்லை. தலைவர் கலைஞர் எங்களுக்கு இப்படித்தான் உழைக்கக் கற்றுக் கொடுத்தார்கள். அவரிடம் கற்ற பாடங்கள் என்னை இப்படி உழைக்கத் தூண்டுகிறது.
என்னுடைய அறையில் 'டேஷ் போர்டு' வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திட்டமும் ஒவ்வொரு நாளும் எந்தளவுக்கு முன்னேறிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை தொடர்ந்து நான் கண்காணித்து வருகிறேன். தீட்டிய திட்டங்கள் அனைத்தும் எந்தளவுக்கு ஒவ்வொரு நாளும் நகர்ந்து கொண்டிருப்பதை அறிவதன் மூலமாக அரசாங்கத்தை முடுக்கிவிட்டுக் கொண்டு இருக்கிறேன். இரவுத் தூக்க நேரம் மட்டுமே எனது ஓய்வு நேரமாக இருக்கிறது. பொறுப்பு கூடக்கூட ஓய்வு என்பது குறைந்துவிடும். 'மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதாக இல்லை' என்றார் புரட்சியாளர் மாவோ. அப்படித்தான் பணிகள் அதிகம் வந்து, என்னை செயல்பட வைத்துக் கொண்டே இருக்கிறது.
9 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சுற்றி வந்து மக்களைச் சந்தித்தேன், விழாக்களில் கலந்து கொண்டேன் என்றால் அதன் மூலமாக பயனடைந்த மக்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? மக்களுக்கு நேரடியாக வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் மூலமாக ஒரு கோடியே 3 இலட்சத்திற்கும் அதிகமான பேர் பயனடைந்துள்ளார்கள். அதாவது ஒரு கோடிப் பேருக்கு தனிப்பட்ட முறையில் உதவிகள் செய்து கொடுத்துள்ளது தமிழ்நாடு அரசு. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதன் மூலமாக பயனடைந்தவர்கள் இவர்கள்.
மொத்தமுள்ள மாவட்டங்களில் 28 மாவட்டங்களில் நலத் திட்ட விழாக்கள் நடந்துள்ளன. முடிவுற்ற மொத்தப் பணிகள் 7 ஆயிரத்து 430; இதன் மொத்த மதிப்பு 3 ஆயிரத்து 50 கோடி ரூபாய் ஆகும். இதுவரை அடிக்கல் நாட்டி, தொடங்கி வைக்கப்பட்ட மொத்தப் பணிகள் 13 ஆயிரத்து 428; இதன் மொத்த மதிப்பு 4 ஆயிரத்து 744 கோடி ரூபாய் ஆகும். இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து வெளியிடப்பட்ட அறிவிப்புகளின்கீழ், தமிழ்நாடு முழுவதும் இதுவரை அனைத்து அரசுத் துறைகளின் சார்பிலும் 2 இலட்சத்து 57 ஆயிரத்து 850 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலமாக அரசு எந்தளவுக்கு வேகத்துடன் செயல்படுகிறது என்பதை அறியலாம்.
ஏதோ முதலமைச்சர் செயல்படுகிறார்; அமைச்சர்கள் செயல்படுகிறார்கள்; தலைமைச் செயலகம் செயல்படுகிறது என்பதாக இல்லாமல் ஒட்டுமொத்தத் தமிழ்நாடே செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. பத்து ஆண்டுகளாகத் தேங்கிக் கிடந்த தமிழ்நாட்டை முன்னோக்கி ஓட வைத்திருக்கிறோம். தேய்ந்து கிடந்த தமிழ்நாட்டை வளப்படுத்தி வருகிறோம்.
இந்த அரசு பதவியேற்றதிலிருந்து பல்வேறு அறிவிப்புகளைச் செய்துள்ளது. அதாவது, ஆளுநர் உரை அறிவிப்புகள் – 75; என்னால் சட்டமன்றப் பேரவை விதி எண். 110-ன்கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் – 67; மாவட்ட விழாக்களில் செய்த அறிவிப்புகள் – 88; மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு அறிவிப்புகள் – 5; செய்தி வெளியீடு அறிவிப்புகள் – 154; நிதிநிலைஅறிக்கை – 254; வேளாண்மை நிதிநிலை அறிக்கை – 237; அமைச்சர் பெருமக்களால் மானியக் கோரிக்கைகளின் போது வெளியிடப்பட்ட அறிவிப்புகள் – 2424; இதர அறிவிப்புகள் – 42 என இதுவரை மொத்தம் 3,346 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 86 விழுக்காடு அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. அதாவது 2,892 அறிவிப்புகளுக்கு அரசாணை / அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் 852 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2,040 பணிகள் நடைபெற்று வருகின்றன. 422 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிட தொடர்புடைய துறைகளால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 32 அறிவிப்புகள் குறித்த கருத்துருக்கள் ஒன்றிய அரசினுடைய பரிசீலனையில் உள்ளன. கடந்த ஒன்றரை ஆண்டில் எப்படி வளர்ச்சி அடைந்தோம் என்றால், சொன்னதைச் செய்தோம் அதனால் வளர்ந்துள்ளோம். அதுதான் உண்மை.
தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபரம் மிக விளக்கமாகச் சொல்லி இருக்கிறது. பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு அண்மையில் மாநிலங்களினுடைய வளர்ச்சி நிலை குறித்து ஆய்வு செய்து வெளியிட்டுள்ள சமூக வளர்ச்சிக் குறியீட்டு அறிக்கையில் (Social Progress Index) 63.3 புள்ளிகளைப் பெற்று, இந்தியாவின் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. இப்படிச் சொல்வது நானல்ல, தமிழ்நாடு அரசு அல்ல; ஒன்றிய அரசு தான் இதனைச் சொல்லி இருக்கிறது. இந்தியாவில் இருக்கிற பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்துக்கு வந்திருக்கிறது என்றால் அது சாதாரணமானது அல்ல. அதுதான் அனைவரையும் உள்ளடக்கிய திராவிட மாடல் தத்துவத்தினுடைய ஊட்டமும், வளமும், வளர்ச்சித் திறனும்! நமது நோக்கம் ஒன்று தான், மக்கள் மனங்களின் மகிழ்ச்சி. இது ஒன்று தான் திராவிட மாடல் ஆட்சியின் முதலும் முடிவுமான ஒற்றை இலக்கு.
காலைச் சிற்றுண்டி சாப்ப்பிடும் குழந்தைகள் முகத்தில் கட்டணமில்லாப் பேருந்து பயணம் செய்யும் மகளிரின் முகத்தில் - நித்தமும் காலையில் உதயசூரியன் உதிக்கிறது அல்லவா இதுதான் இந்த ஆட்சியினுடைய மாபெரும் சாதனையாகும்.
கடந்த பத்து ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச விவசாய மின் இணைப்புகள் 2.20 இலட்சம் மட்டுமே. ஆனால், விவசாயிகளின் நலன் காக்கும் இந்த அரசு 15 மாத காலத்தில் வழங்கிய இணைப்புகள் 1 இலட்சத்து 50 ஆயிரம். பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை, கல்லூரியில் படிக்கும் இளைஞர்களை மட்டுமல்ல; படிக்கவராமல் இடையில் நின்று விடக் கூடியவர்களையும் பள்ளி, கல்லூரிகளுக்குள் அழைத்து வருகிறோம்.
சில வாரங்களுக்கு முன்னால் கோவையைச் சேர்ந்த தீபாராணி என்ற ஒரு பெண், 'முதலமைச்சரின் முகவரி' திட்டத்தில் உள்ள சிஎம் ஹெல்ப் லைன் தொலைபேசி எண்ணில் பேசி இருக்கிறார். பெரும்பாலும் தங்களது தேவைகளை, கோரிக்கைகளை, புகார்களை பதிவு செய்வதற்காகத்தான் அதிலே பலரும் பேசுவார்கள். ‘உங்களுடைய புகார் என்னம்மா?’ என்று கேட்டதும், ‘புகார் சொல்வதற்காக நான் போன் செய்யவில்லை, சி.எம். போன் நம்பர் என்னிடம் இல்லை, சி.எம்.-க்கு நன்றி சொல்வதற்காக போன் செய்தேன்’ என்று தீபாராணி என்ற அந்தப் பெண்மணி சொல்லி இருக்கிறார். அவர் சொல்கிறார் - ''நான் காய்கறி வியாபாரம் செய்கிறேன். அதனால என் பிள்ளைக்கு காலையில சாப்பாடு கொடுக்க முடியாது. என் மகன் ஐந்தாவது படிக்கிறான். காலை உணவுத் திட்டத்தின் மூலமாக அவனுக்கு தினமும் காலை உணவு கிடைத்து விடுகிறது, அது தரமானதாக இருக்கிறது. அதுனால சிஎம்க்கு நன்றி சொல்லணும்" என்று அந்தத் தாய் நெகிழ்ச்சியோடு கூறியதுதான் எனக்குக் கிடைத்த பாராட்டு!
இதுபோன்று ஏராளமான எளிய மக்களின் பாராட்டின் காரணமாகத்தான், வாழ்த்துக்களின் காரணமாகத்தான் பெருமை அடைந்து இன்றைக்கு நாங்கள் ஊக்கத்தோடு பணியாற்றுகிறோம். ‘சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்’ - இது தலைவர் கலைஞரின் முழக்கம்! அதோடு, தமிழ் மக்களின் நலன் என்று வந்துவிட்டால், சொல்லாததையும் செய்வோம்; ஏன்? சொல்லாமலும் செய்வோம் - என்பதுதான் எனது முழக்கம்.
மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி; விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள்; சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி; 234 தொகுதியிலும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்; நகர்ப்புரச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்; இல்லம் தேடிக் கல்வி; மக்களைத் தேடி மருத்துவம்; நான் முதல்வன்; புதுமைப் பெண்; இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48; தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப் பதக்கத் தேடல்; சமத்துவபுரங்கள் புனரமைப்பு; உழவர் சந்தைகளுக்குப் புத்துயிர் அளித்தல்; அரசு முன் மாதிரிப்பள்ளிகள்; பத்திரிக்கையாளர் நலவாரியம்; எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம்; இலக்கிய மாமணி விருது; கலைஞர் எழுதுகோல் விருது; பேராசிரியர் அன்பழகனார் பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டம்; பெருந்தலைவர் காமராசர் கல்லூரிகள் மேம்பாட்டுத் திட்டம்; முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு; பெரியார் - சமூகநீதி நாள் உறுதிமொழி; அம்பேத்கர் - சமத்துவநாள் உறுதிமொழி; வள்ளலார் பிறந்தநாள் தனிப்பெரும் கருணை நாள்; கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்; அன்னைத் தமிழில் அர்ச்சனை; அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்; மாவட்டம் தோறும் புத்தகச் சந்தைகள்; கோவில் நிலங்கள் மீட்பு; 20 புதிய கலை அறிவியல் கல்லூரிகள்; புதிய ஐடிஐ நிறுவனங்கள்; காவல் ஆணையம்; கல்லூரிக் கனவு; வேலைவாய்ப்பு முகாம்கள்; தமிழ்ப் பரப்புரைக் கழகம்; தமிழ்நாடு பசுமை இயக்கம்; சிறுகுறு புத்தாக்க நிறுவனங்கள்; பொறுப்புமிக்க மாணவர்களை உருவாக்கும் சிற்பி திட்டம்; போதைப் பொருள் ஒழிப்பு; ஆன்லைன் ரம்மி ஒழிப்பு சட்டம்; நீட் தேர்வு விலக்குச் சட்டம்; ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையம்; வழக்கறிஞர் சேமநல நிதி 10 லட்சமாக உயர்வு; நீதிமன்றங்கள் அமைக்க நிலம் ஒதுக்கீடு என்று ஏராளமான திட்டங்களை, சட்டங்களை கடந்த ஒன்றரை ஆண்டுக் காலத்தில் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறோம். ஒரு சில திட்டங்களைத்தான் நான் சொல்லி இருக்கிறேன். மொத்த திட்டங்களையும் சொல்வதாக இருந்தால் இன்று முழுவதும் நான் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். இத்தகைய திட்டங்களின் மூலமாக ஒட்டுமொத்த தமிழ்நாடும் உயர்ந்திருப்பதை கண்ணுக்கு முன்னால் காண முடிகிறது.
கடந்த ஆண்டு ஆளுநர் உரைக்கு முன்னதாக 'இந்தியா டுடே' ஆங்கில வார இதழ் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் இந்தியாவினுடைய சிறந்த முதலமைச்சர் என்று எனக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. தற்போது ஓராண்டு முடிந்த நிலையில் இந்த ஆண்டு ஆளுநர் உரைக்கு முன்னதாக சில வாரங்களுக்கு முன்னதாக அதே 'இந்தியா டுடே' ஆங்கில வார இதழ் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் இந்தியாவின் சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்ற தகுதியைப் பெற்றுள்ளோம். இந்தியாவில் ஒட்டுமொத்த மாநிலங்களின் செயல்பாட்டில் தமிழ்நாடு பல்வேறு பிரிவுகளில் முன்னேறி சாதனை பெற்றிருக்கிறது.
பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாட்டின் வளர்ச்சி நம் கண்ணுக்கு முன்னால் நன்கு தெரிகிறது. தமிழகத்தில் புதிய தொழில்கள் ஏராளமாக இந்த பதினைந்து மாத காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் புதிய தொழில்கள் ஏராளமாக இந்த 20 மாத காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. இதுவரை 207 தொழில் நிறுவனங்கள் புதிதாகத் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன. இதன்மூலம் 2 இலட்சத்து 23 ஆயிரத்து 209 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதுடன், 3 இலட்சத்து 44 ஆயிரத்து 150 நபர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட 207 தொழில் நிறுவனங்களில், இதுவரை 111 நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, 13 ஆயிரத்து 726 கோடி ரூபாய் முதலீடு வரப்பெற்றுள்ளது.
15 ஆயிரத்து 529 நபர்களுக்கு வேலை கிடைக்கப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் எல்லையைத் தாண்டி பல்வேறு மாநிலத்தில் இருந்தும் வந்து நிறுவனங்களைத் தொடங்குகிறார்கள். பல்வேறு நாடுகளில் இருந்தும் தொழில் தொடங்க இங்கே வருகிறார்கள். அந்த வகையில் தொழில் அதிபர்களை - நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் 14 ஆவது இடத்தில் இருந்து 3 ஆவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது நம்முடைய தமிழ்நாடு.
அண்மையில் "ஸ்டார்ட் அப் இந்தியா" வெளியிட்டிருக்கக்கூடிய தரவரிசைப்பட்டியலிலும் பல படிகள் முன்னேறி அரசின் சிறந்த புத்தொழில் செயல்பாடுகளுக்காக "லீடர்" என்கிற அங்கீகாரத்தினை பெற்றுள்ளது தமிழ்நாடு. கடந்த 2021-2022 ஆம் ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தேவையான துணிகர முதலீடுகளை திரட்டுவதில் தமிழ்நாடு, பெங்களூரு, டெல்லி மற்றும் மும்பைக்கு அடுத்தபடியாக நான்காம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. தொழில் வளர்ச்சி என்பது மாநிலத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியின் முகமாகவும் முகவரியாகவும் இருக்கிறது.
பேரவைத் தலைவர் அவர்களே,
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பில், தமிழ்நாட்டின் பங்கு 9.22 விழுக்காடு; இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 8.4 விழுக்காடு; ஜவுளித் துறை ஏற்றுமதியில்
19.4 விழுக்காடு; கார்கள் ஏற்றுமதியில் 32.5 விழுக்காடு; தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 33 விழுக்காடு! இவை அனைத்தும் இந்தியாவின் தலை சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை தலை உயர்த்திச் சொல்கின்றன.
இந்தியா முழுமைக்குமான பணவீக்கம் இப்போது அதிகமாகி உள்ளது. ஆனால், தமிழ்நாட்டுக்கு மட்டுமான பணவீக்கம் குறைந்துள்ளது. இதுவும் சமீபத்தில் ஒன்றிய அரசு வெளியிட்ட புள்ளிவிவரம்தான். தமிழ்நாட்டு மக்களின் வாங்கும் திறன் அதிகமாகி இருக்கிறது. இதற்குக் காரணம், சமூக வளர்ச்சித் திட்டங்களின் மூலமாக அனைத்துப் பிரிவு மக்களும் வளர்ந்ததுதான். இதுகுறித்து பிரபல ஆங்கில நாளிதழ் பிசினஸ் லைன் எழுதிய கட்டுரையில், தமிழ்நாட்டில் உணவுப்பொருள் விலை குறைந்துள்ளது என்று குறிப்பிட்டது. எரிபொருள் விலை அதிகரித்தாலும், பெண்களுக்கு வழங்கிய இலவச பேருந்து வசதி அதனை ஈடுசெய்துவிட்டது என்று குறிப்பிட்டது. பெண்களின் போக்குவரத்து செலவு குறைந்ததை சுட்டிக்காட்டியது.
''கல்வி, சுகாதாரம், சமூக நலத் திட்டங்கள், வேலைவாய்ப்புகள், தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் சிறப்பான குறியீடுகளை அடையும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால் பணவீக்கம் குறைந்து வருகிறது" என்று எழுதியது. இதையே பிபிசி நிறுவனமும், இந்து ஆங்கில நாளிதழும் எழுதி இருக்கின்றன. இதே வேகத்தில் சென்றால் தமிழ்நாடு தன்னிகரற்ற மாநிலமாக உயர்ந்துவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
பேரவைத் தலைவர் அவர்களே, மாநில அரசுகளின் வரி உரிமைகள், நிதி உரிமைகள் பலவும் ஏற்கெனவே பறிக்கப்பட்டுவிட்டன. நிதிக்காக ஒன்றிய அரசை சார்ந்திருக்க வேண்டிய நிலை கடந்த 8 ஆண்டுகளில் மேலும் அதிகமாகிவிட்டது. அனைத்து நிதிகளையும் கேட்டுக் கேட்டு வாங்க வேண்டிய நிலைமையே இருக்கிறது. கட்டணம் உயர்த்தினால்தான் சலுகைகள் வழங்கப்படும் என ஒன்றிய அரசு தொடர்ந்து வலியுறுத்துகிறது. இப்படிப்பட்ட நிலையிலும், தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் சுமையைத் தந்துவிடக் கூடாது என்று பெரும்பாலான சுமையை அரசே தாங்கிக் கொண்டு, சிறிய அளவிலான கட்டண சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டிய நிலையில் அந்த நடவடிக்கைகள் நடுத்தர வர்க்கத்தினரை பாதிக்காத வகையில் மேற்கொள்ளப்பட்டன. புதிய நிதி ஆதாரத்தை திரட்டுவதுதான் எங்கள் முன்னால் உள்ள மிக முக்கியமான, பெரிய சவாலாக இருக்கிறது என்பதையும் நான் மனம் திறந்து ஒப்புக்கொள்கிறேன்.
பேரவைத் தலைவர் அவர்களே, இத்தகைய சூழலிலும் அரசு ஊழியர்களுக்கு இந்த ஆட்சி அமைந்ததில் இருந்து பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
அரசு ஊழியர்களின் நலன் காப்பதில் திராவிட முன்னேற்றக் கழக அரசு எந்தளவிற்கு கண்ணும் கருத்துமாகச் செயல்படும் என்பதை அரசு ஊழியர்கள் நன்கு அறிவார்கள். அரசு நலத் திட்டங்களையும், பல்வேறு சேவைகளையும் மக்களிடம் சிறப்பாக கொண்டு சேர்க்கும்விதமாக 10 ஆயிரத்து 338 புதிய பணியிடங்கள் பல்வேறு துறைகளில் அரசால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் நோய்த்தொற்றால் பணியிடை மரணம் அடைந்த 409 முன்களப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து
98 கோடியே 45 இலட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. இரண்டிற்கும் குறைவான குழந்தைகள் உள்ள மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்ற தேர்தல் அறிக்கையின் வாக்குறுதியை இந்த அரசு 1-7-2021 முதல் செயல்படுத்தியிருக்கிறது.
நாங்கள் மதத்துக்கு எதிரானவர்கள், நாத்திகர்கள் என்று சொல்லி, கோயில்களை சரிவர பராமரிக்கவில்லை என்று ஒரு கூட்டம் வீண் வதந்திகளைச் செய்திகளாகப் பரப்பி கொண்டிருக்கிறது. நான் பல முறை இதற்கு பதில் சொல்லி இருக்கிறேன். நாங்கள் மதவாதத்துக்குத்தான் எதிரானவர்களே தவிர; மதத்துக்கு எதிரானவர்கள் அல்ல. மீண்டும் சொல்கிறேன்; நாங்கள் மதவாதத்துக்கு தான் எதிரானவர்களே தவிர; மதத்துக்கு அல்ல. மக்களின் மதநம்பிக்கையை தங்களது சுயநலத்துக்கு பயன்படுத்திக் கொள்பவர்களுக்குத்தான் நாங்கள் எதிரிகளே தவிர; நம்பிக்கையாளர்களுக்கு எதிரிகள் அல்ல. அற நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலம்/ கட்டடம்/மனை ஆகியவற்றில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு 7-5-2021 முதல் 31-10-2022 வரையிலான காலத்தில் 3,150 ஏக்கர் நிலம் உள்ளிட்ட சுமார் 3,657 கோடியே 48 இலட்சம் ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உண்மையான பக்தர்கள் இதைப் போற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், போலியான கபடவேடதாரிகள் அரசுக்கு நல்ல பெயர் கிடைப்பதை பொறுத்துக்கொள்ள இயலாமல் தூற்றிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி சாதனைகள் செய்வது சிலருக்குப் பிடிக்கவில்லை. அனைத்து கோயில்களும் புத்தொளி பெறுவது சிலருக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் அவதூறு செய்துகொண்டிருக்கிறார்கள்.
சட்டம்-ஒழுங்கு குறித்து இம்மாமன்றத்தில் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. குற்றச்சாட்டு சொல்வதாக இருந்தால் அதனை ஆதாரத்தோடு சொல்ல வேண்டும். பொத்தாம் பொதுவாகச் சொல்லக் கூடாது. மதக் கலவரங்கள் நடந்துள்ளதா? சாதிக் கலவரங்கள் நடந்துள்ளதா? சொல்லுங்கள். பொது மக்கள்மீது துப்பாக்கிச் சூடு நடதுள்ளதா? அப்பாவி உயிர்கள் பறிபோனதா? நெஞ்சை உலுக்கக்கூடிய பொள்ளாச்சி சம்பவமும், மர்மத்தின் உச்சமாய் விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய கொடநாடு கொலைகளும், கொள்ளைகளும் யாருடைய ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்தன என்பதை மக்களும் நன்கு உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். எங்காவது நடந்த குற்றச் சம்பவங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லையா? சொல்லுங்கள். காவல் துறை அவர்களது கடமையை சிறப்பாக செய்து வருகிறது. அதைச் சொல்லாமல், நடவடிக்கை எடுக்கப்பட்ட குற்றங்களைப் பேசுவதால் என்ன பயன்?
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை திறம்பட நிலைநாட்டிட இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அரசின் சீரிய நடவடிக்கைகளினால் தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. அதன் காரணமாகவே, பல்வேறு நாடுகளிலிருந்து தொழில் முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டினைத் தேடி வந்து இங்கே முதலீடு செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மதவாத, இனவாத, தீவிரவாத சக்திகளை ஒருபோதும் இந்த அரசு வளரவிடாது. எந்தவொரு வன்முறையும் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து திகழும்.
நேற்று முன்தினம் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் ஜவாஹிருல்லா பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் Major Repair Grant (MRG) என்ற மானியத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமென்ற ஒரு கோரிக்கையை வைத்தார். கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ரூ.5 கோடியாக இருந்த இந்த மானியத் தொகையை கழக ஆட்சி பொறுப்பேற்றவுடன் சென்ற ஆண்டு, ரூ.6 கோடியாக உயர்த்தி வழங்கினோம். தற்போது, உறுப்பினர் அவர்களுடைய கோரிக்கையையேற்று, பள்ளி வாசல்களுக்கு வழங்கப்படும் Major Repair Grant-MRG மானியத் தொகை வரும் நிதியாண்டு முதல் ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை இந்த மாமன்றத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
உறுப்பினர் சகோதரர் திரு. வேல்முருகன் நேற்று பேசும்போது, தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்கள் குற்றச் சம்பங்களில் ஈடுபடுவது பற்றி விளக்கமாக, விரிவாக, உணர்ச்சியோடு குறிப்பிட்டு பேசினார். கடந்த இரண்டு ஆண்டுகளில், கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட வட மாநிலத்தவர்கள்மீது 85 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் கொலை வழக்குகள் 25; அவற்றில் 24 வழக்குகளில் 33 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இது தவிர, தமிழ்நாட்டில் தங்கிப் பணிபுரியும் வட மாநிலத் தொழிலாளர்கள் பற்றிய விவரங்களை ஒவ்வொரு காவல் நிலையமும் சேகரிக்கின்றது. அவர்களை தமிழ்நாட்டில் பணியில் அமர்த்தும் மனித வள நிறுவனங்களிடமிருந்து தகவல்கள் பெறப்படுகின்றன. வட மாநிலத்தவர்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், சந்தேகத்திற்குரியோரை அடையாளம் கண்டு, அந்தந்த மாநிலங்களின் போலீசாரிடமிருந்தும் அவர்களைப் பற்றிய தகவல்கள் மற்றும் உதவிகள் பெற்று மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் யார் என்றாலும், அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோல், வட மாநிலத்திலிருந்து இங்கு வந்து பணிபுரியும் தொழிலாளர்கள் சட்ட விரோத செயல்களில், குற்றச் செயல்களில் ஈடுபட்டாலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை உறுப்பினர் அவர்களுக்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதேபோல், பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவர் கோ.க. மணி தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டுமென்பது குறித்து தனது கருத்துகளை இம்மாமன்றத்தில் எடுத்து வைத்தார். நேற்றைக்கு திரு. பொன்முடி அவர்களும் அதற்கு ஒரு விளக்கம் கொடுத்தார். அதேபோல, அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களும் ஒரு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். எனவே, அதைப்பற்றி அதிகம் நான் பேச வேண்டியதில்லை. இருந்தாலும், சுருக்கமாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் படிக்காமல் பள்ளிகளிலிருந்து தேர்ச்சி பெறமுடியாது என்ற நிலையைக் கொண்டுவருவதற்குத்தான் முத்தமிழறிஞர் கலைஞர் “ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ்மொழி கட்டாயப் பாடம் என்ற “தமிழ் மொழி கற்கும் சட்டத்தை” 13-6-2006 அன்று இயற்றி, தமிழ் மொழி வரலாற்றில் மிக முக்கியமான சாதனையை நிகழ்த்தினார்.
அந்த வகையில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழை முழுமையாகப் பயிற்றுவிப்பதை இந்த அரசு தொடர்ந்து கண்காணிக்கும். வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் வாழக்கூடிய தமிழர்களின் குழந்தைகள் தங்கள் தாய்மொழியான தமிழைக் கற்பதற்கு ஏதுவாக தமிழ் பரப்புரைக் கழகம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் மாணவர்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் பல்வேறு தலைப்புகளில் 108 புதிய புத்தகங்களையும், குழந்தைகளுக்கான இளந்தளிர் நூல்களையும் கொண்டுவந்துள்ளதோடு, தமிழ்நாட்டில் மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கான 5 முக்கிய பன்னாட்டு மருத்துவ நூல்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் கொண்டு வந்திருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழக அரசு, தனது தமிழ் காக்கும் பணிகளைத் தொடர்ந்து புதிய புதிய முன்னெடுப்புகளையெடுத்து சீரிய பணிகளை ஆற்றும் என்பதை உறுப்பினர்களுக்கு நான் பெருமிதத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
அடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த உறுப்பினர்
திரு. சிந்தனை செல்வன் பேசும்போது, ஒரு கருத்தைச் சொன்னார். ‘நமக்கு நாமே’ திட்டத்தின்கீழ் ஊராட்சிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளவாறு பேரூராட்சிகளிலும் பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளுக்கும் ஐந்தில் ஒரு பங்கு வழங்கப்படவேண்டுமென்று என்ற ஒரு கோரிக்கையை வைத்தார். அதனையேற்று இந்தத் திட்டத்தின்கீழ் வளர்ச்சிப் பணிகளைச் செயல்படுத்த ஏதுவான பேரூராட்சிகளில் மட்டுமல்ல; நகராட்சிகளிலும் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதேபோன்று, கடந்த ஆட்சிக் காலத்தில் பல்வேறு காலக்கட்டங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்களில் குறிப்பிட்டுள்ள பயனாளிகள் வீடுகட்டி குடியேற இயலாத வகையில் மேடு பள்ளங்களாகவும், சாலை வசதி இல்லாமலும் காணப்படுவதாக தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட பட்டா இடங்களில் வீடுகள் கட்டி குடியேறத்தக்க வகையில் இல்லாத இடங்களின் விவரங்களையெல்லாம் மாவட்டம்வாரியாக சேகரிக்கப்பட்டு, எந்தெந்த இடங்களில் சமன்செய்து மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள தகுதியானவை என்பதையறிந்து, உடனடியாக அதுகுறித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்பதை நான் உறுப்பினர் அவர்களுக்கும், இந்த அவைக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதேபோன்று சட்டமன்ற உறுப்பினர், பாரதிய ஜனதா கட்சித் தலைவர், நயினார் நாகேந்திரன் அவர்கள், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டம் குறித்து, மனம் திறந்து பாராட்டினார். அதற்காக அவர்களுக்கு நான் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தற்போது அவர் அவையில் இல்லை. செய்தியைப் படிப்பார் என்று நினைக்கிறேன். அந்தத் திட்டத்தைப் பொறுத்தமட்டிலும், சில தகவல்களை இந்த அவையில் நான் பதிவு செய்ய விரும்புகிறேன். பகிர்ந்துகொள்ளவும் விரும்புகிறேன்.
கடந்த 7-5-2022 அன்று, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன்கீழ், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின்கீழ் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்டது. அதன் தொடக்கமாக, சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து அவரவர் தொகுதிகளில் நிறைவேற்றப்படாத பல முக்கிய கோரிக்கைகள், தத்தமது மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அனுப்பிவைக்குமாறு நான் கேட்டுக்கொண்டிருந்தேன். இதுவரை, 233 சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து கோரிக்கைப் பட்டியல் வரப்பெற்றுள்ளன. உறுப்பினர்கள் நன்றாக கவனிக்க வேண்டும், ஒன்று மட்டும்தான் வரப்பெறவில்லை.
மொத்தம் 234 உறுப்பினர்களில், 233 சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்தனர். யார் அளிக்கவில்லை என்பதை நான் சொல்ல விரும்பவில்லை, கொடுக்காதவர்களுக்கு தெரியும். இதுவரை, 233 சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து 1,483 பணிகளுக்கான கோரிக்கைப் பட்டியல் வரப்பெற்றுள்ளன. இவற்றையெல்லாம் வகைப்பாடு செய்து, துறைவாரியாக மதிப்பீடுகள் செய்யப்பட்டு, அவற்றில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய பணிகளைத் தேர்வு செய்யப்பட்டு, உயர்நிலைக் குழுவில் வைக்கப்பெற்று, வரும் நிதியாண்டில் நிருவாக அனுமதி வழங்கப்பட்டு, அப்பணிகள் படிப்படியாக நிறைவேற்றித் தரப்படும் என்பதை இந்த அவையில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்
நேற்று, எதிர்க்கட்சித் தலைவர் பேசியபோது, அ.தி.மு.க. ஆட்சியைவிட, தி.மு.க. ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு மேலும் அதிகக் கடன் வாங்கியுள்ளதாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்கள். இது முற்றிலும் தவறான தகவல். அ.தி.மு.க. ஆட்சியின் கடைசி ஆண்டான 2020-2021 ஆம் ஆண்டில், 83,275 கோடி ரூபாய் நிகரக் கடனாக பெறப்பட்டது.
நன்றாக கவனிக்க வேண்டும். 2020-2021 ஆம் ஆண்டில், அ.தி.மு.க. ஆட்சியின் கடைசி ஆண்டில், 83,275 கோடி ரூபாய் நிகரக் கடனாக பெறப்பட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு, கடும் நிதி நெருக்கடி இருந்தபோதிலும், பல்வேறு புதிய மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தியிருக்கின்றபோதிலும், என்னுடைய திறமையான நிருவாகத்தினால், 2021-2022 ஆம் ஆண்டில் பெறப்பட்ட நிகரக் கடனை, 79,303 கோடி ரூபாயாக குறைத்திருக்கிறோம். அதாவது, முந்தைய ஆண்டைக் காட்டிலும், சுமார் 4,000 கோடி ரூபாய் அளவிற்குக் குறைவாகவே கடன் பெறப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அதேபோன்று, இந்த அரசால் அமைக்கப்பட்ட குழுக்கள் குறித்தும், விமர்சனம் செய்துள்ளார்கள். மேலும் குழுக்களின் விவரங்களைத் தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். நான் சில குழுக்களின் நடவடிக்கைகளை சொல்ல விரும்புகிறேன். அதற்கு பதிலளிக்கக்கூடிய வகையில், இந்த அரசால் அமைக்கப்பெற்ற குழுக்கள் சிலவற்றை மட்டும் நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.
சென்னையில், வெள்ளத் தடுப்பு குறித்து ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளை அரசிற்கு பரிந்துரைக்க ஒய்வுபெற்ற ஆட்சிப் பணி அலுவலர், திரு. திருப்புகழ் அவர்களின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் பலனை தற்போது மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அது குறித்து இந்த அவையிலும் பேசப்பட்டது. அதன் விவரத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை.
கடந்தகால மழைக்காலங்களில் சென்னை மாநகரம் மழைநீரில் தத்தளித்ததுபோல் அல்லாமல், 2022 ஆம் ஆண்டில் மழைநீர் தேங்குவது முற்றிலுமாக தடுக்கப்பட்டது. அதேபோன்று, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த எனக்காக ஒரு பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவானது, நம் மாநில 1 trillion dollar பொருளாதார இலக்கினை அடைவதற்கான வழிமுறைகளுக்கும், சீர்திருத்தங்களுக்கும் உரிய ஆலோசனைகளை தொடர்ந்து வழங்கிவருகிறது. அதன் அடிப்படையில்தான் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அடுத்து கொரோனா பரவலைத் தடுக்கும்பொருட்டும், அதனைக் கட்டுப்படுத்தவும், ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அலுவலர், திரு. பூர்ணலிங்கம் அவர்களின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தியாவிலேயே கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்திய மாநிலத்தில், தமிழ்நாடு முன்னிலை வகித்தது அனைவருக்கும் தெரியும்.
அடுத்து NEET தேர்வு குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதியரசர், திரு. A.K. ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. NEET விலக்கு சட்டமுன்வடிவு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் அவர்களின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டு, அதன் பிறகு குடியரசர் அவர்களின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அடுத்து, online rummy விளையாட்டினைத் தடை செய்யும்பொருட்டு, ஓய்வுபெற்ற நீதிபதி திரு. K. chandru தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதற்கான சட்டமுன்வடிவு, இந்த சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, தற்போது ஆளுநர் அவர்களின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தொன்மையான கோயில்களையெல்லாம் பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டுமென்ற அந்த நோக்கத்தில் வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழு இன்றைய தேதி வரை 3,720 திருக்கோயில்களை தொன்மை மாறாமல் புதுப்பிக்க அளித்திருக்கக்கூடிய பரிந்துரைகளை ஏற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒரு எடுத்துக்காட்டிற்காகத்தான் இதையெல்லாம் சொன்னேன்.
இதுபோன்று இந்த அரசால் அமைக்கப்பட்ட ஏனைய அனைத்து குழுக்களும் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றன. அவ்வப்போது அரசுக்கு வழங்கும் ஆலோசனைகளை ஏற்று, மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளினால் இந்தக் குழுக்கள் அமைக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறியுள்ளதால் தமிழ்நாட்டு மக்களின் நலன்களும் பேணி பாதுகாக்கப்படுகின்றன என்பதை இந்த அவையில் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
கடந்த இரு நாட்களாக உறுப்பினர்கள் இந்த அவையில் எடுத்து வைத்திருக்கக்கூடிய கருத்துகள் தொடர்பாக நான் அமைச்சர்களோடு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு ஆலோசித்தேன். அதனடிப்படையில் சில அறிவிப்புகளை தற்போது நான் வெளியிட விரும்புகிறேன்.
முதலாவதாக, கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் அடிப்படையில் முக்கிய ஊராட்சி ஒன்றியச் சாலைகளை வலுப்படுத்தவும், தரம் உயர்த்தவும், “முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்” என்ற புதியத் திட்டத்தை அரசு செயல்படுத்தும். முதற்கட்டமாக, 2 ஆண்டுகளில் 10,000 கி.மீ. அளவுக்கு ஊராட்சி ஒன்றிய சாலைகள் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.
இரண்டாவதாக, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 15-9-2022 அன்று மதுரையில் தொடங்கப்பட்டது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கு முன்னோடி முயற்சியாக செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் முதற்கட்டமாக, 1,545 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1.14 இலட்சம் மாணவர்களுக்கு அவர்களின் பள்ளியில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் பெரும்பாலான பொது மக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் மிகவும் பாராட்டப்பட்டு, அதை மகிழ்ச்சியோடு வரவேற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
மேலும் இந்த முயற்சியின் பயனாக, பள்ளிகளில் மாணவர்களின் வருகை எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு, இந்தத் திட்டத்தினை 2023-2024 ஆம் ஆண்டு, படிப்படியாக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கும் விரிவாக்கம் செய்திட முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
மூன்றாவதாக ஒரு முக்கியமான அறிவிப்பு. உலக முதலீட்டாளர்கள் மாநாடு. பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்திய அளவில் பொருளாதாரத்தில் இரண்டாவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கின்றது.
முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து, இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிடவும், மாநில பொருளாதாரத்தை வலுவடையச் செய்திடவும், நான் 2030 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டினை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்தேன். அதனை அடைய பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த இலக்கினை நோக்கிப் பயணம் மேற்கொள்ளும் விதமாக, பல முதலீட்டாளர்கள் மாநாடுகளை துபாய் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டன. மேலும், உலகளவில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தொழில் துறை அமைச்சர் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு, ஜெர்மனி, அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் தைவான் போன்ற நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார்கள்.
சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரத்தில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டம் 2022-ல் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
நம் மாநிலத்திற்கு மேலும் முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்காக, “உலக முதலீட்டாளர்கள் மாநாடு” வரும் 2024 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 10, 11 ஆம் நாட்களில், 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் பங்கேற்புடன், பெருமளவில் பிரம்மாண்டமாக சென்னையில் நடத்தப்படும் என்பதை இம்மாமன்றத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
பேரவைத் தலைவர் அவர்களே, எந்த அரசாக இருந்தாலும், அந்த அரசிற்கு ஒரு இலக்கு தேவை. இலக்கை நிர்ணயித்தால்தான் அந்த இலட்சியத்தை நாம் அடைய முடியும். 2030 ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி என்பது எங்களுடைய இலக்காகும். அந்த இலக்கை நோக்கி நாங்கள் பயணித்துக்கொண்டிருக்கிறோம். இதனை வெறும் நிதி அளவுகோலாக மட்டும் நீங்கள் கருதக் கூடாது.
இதனை மக்களின் வளர்ச்சியோடு சேர்த்து பார்க்க வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன். அனைத்தையும், அனைவரையும், அனைத்துத் துறைகளையும், அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய திராவிட மாடல் வளர்ச்சியாக்க வேண்டுமென்றும் நான் சொல்லி வருகிறேன். ஏற்றுமதி, இறக்குமதி அளவீடுகளாக மட்டுமே பொருளாதார வளர்ச்சி அளவீடுகள் அமைந்து விடக் கூடாது என்பது எனது எண்ணம்.
சமூக, அரசியல், பொருளாதார, வாழ்வியல், பண்பாட்டு வளர்ச்சியை உள்ளடக்கியதாகவே தமிழ்நாட்டு மாநில வளர்ச்சி அமைய வேண்டும் என்று கருதுகிறேன். அதற்கான திட்டமிடுதல்களை நாங்கள் செய்து வருகிறோம். ஏராளமான புதிய புதிய தொழில் நிறுவனங்களைத் தமிழ்நாட்டில் கொண்டு வருகிறோம். புத்தாக்கத் தொழில்களுக்கு முன்னுரிமை தருகிறோம். சிறு, குறு, நடுத்தரத் தொழில்களை ஊக்குவிக்கிறோம். புதிய தொழில் பேட்டைகள் தொடங்கப்பட்டுள்ளன. வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருகிறோம்.
வேலைகளுக்குத் தகுதியானவர்களாக இளைஞர்களை உயர்த்தி வருகிறோம். பெண்களைச், சொந்தக் காலில் நிற்பவர்களாக மாற்றிட தன்னம்பிக்கை ஊட்டி வருகிறோம். அவர்களது திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறோம். பள்ளி, கல்லூரிகளில் 'நான் முதல்வன்' திட்டம் மூலமாக மாணவ, மாணவியரைத் தனியாற்றல் கொண்டவர்களாக வளர்த்து வருகிறோம். இதுதான் புதிய தமிழ்நாடு! அறிவுசார் தமிழ்நாடு! வலிமை வாய்ந்த, வளம் நிறைந்த தமிழ்நாடு!! தமிழ்நாட்டின் இந்த இளையசக்தியை அறிவுசக்தியாக, ஆற்றல்மிக்க சக்தியாக மாற்றி - அதனை தொழில் வளர்ச்சியோடு இணைக்கிறோம். மனித ஆற்றலின் மகத்தான சக்தியை அதிகப்படுத்துவதன் மூலமாக மாநில வளர்ச்சியை உயர்த்தி வருகிறோம். இதுதான் திராவிட மாடல் ஆட்சியுடைய தனித்தன்மை.
நிகழ்காலத்தைப் பொற்காலமாக மாற்றும் முயற்சியில் தான் நித்தமும் செயல்பட்டு வருகிறோம். "முடியுமா நம்மால் என்பது தோல்விக்கு முன்பு வரக்கூடிய தயக்கம். முடித்தே தீருவோம் என்பது வெற்றிக்கான தொடக்கம்" என்பது தமிழினத் தலைவர் கலைஞருடைய பாடம் இது. அத்தகைய வெற்றியை நோக்கிய பயணம் தொடர்கிறது. உறுப்பினர்கள் இந்த அரசுக்கு கூறியுள்ள நல்ஆலோசனைகளை உள்ளடக்கியதாக எங்களது வருங்காலத் திட்டமிடுதல்கள் நிச்சயமாக இருக்கும்.
என்னுடைய வெற்றிக்கு அடிப்படையாக நான் நினைப்பது, மக்களுக்காக உண்மையாக இருப்பதும், மனச்சாட்சிப்படிச் செயல்படுவதும்தான். இந்தப் பொறுப்புக்கு நான் வரக் காரணமானவர்களே மக்கள்தான். அந்த மக்களுக்கு உண்மையாக நான் இருக்கிறேன். அதற்காக நான் எந்நாளும் உழைக்கிறேன்! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - தனித்துவமான பொன்நாடு! வெல்லும் திராவிட மாடல் ஆட்சியில் உலகுக்கு வழிகாட்டும் தமிழ்நாடாக இருக்குமென்று கூறிக்கொள்கிறேன்.
உறுப்பினர்கள் 11 பேர் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது 94 திருத்தங்களை அளித்திருக்கிறார்கள். தங்கள் தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து குறிப்பிட்டிருக்கிறார்கள். உரிய அமைச்சர்களுக்கு நடவடிக்கை எடுக்க, அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எனவே, உறுப்பினர்கள் தாங்கள் அளித்திருக்கக்கூடிய திருத்தங்களை, திரும்பப்பெறுமாறு கேட்டு, அனைத்து கட்சி எல்லைகளை மறந்து, மக்கள் நிலையை உணர்ந்து, இந்த ஆளுநர் உரையை மனப்பூர்வமாக வரவேற்க வேண்டும்.
நிறைவாக, பேரவைத் தலைவர், பேரவையினுடைய துணைத் தலைவர், அமைச்சர் பெருமக்கள், எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கூட்டணி கட்சிகளினுடைய தலைவர்கள் மற்றும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன். ‘வாழ்க தமிழ் – வெல்க தமிழ்நாடு’." எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !