Tamilnadu

பிரபல ஆங்கில டிஜிட்டல் ஊடக இளம் பெண் பத்திரிகையாளர் திடீர் உயிரிழப்பு.. ஊடகவியலாளர்கள் இரங்கல் !

பிரபல ஆங்கில டிஜிட்டல் ஊடகத்தில் ஒன்றுதான் 'The News Minute'. கர்நாடகா, பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த ஊடகம், தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களிலும் இயங்கி வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் உள்ள Flix & Features என்ற குழுவில் சாரதா என்ற (22) இளம் பெண் பத்திரிகையாளர் ஒருவர் பணிபுரிந்து வந்தார். அவருக்கு கடந்த வாரம் உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சோதனை செய்ததில் அவருக்கு டெங்கு மற்றும் டைபாய்டு இருந்தது கண்டறியப்பட்டது.

தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி சாரதா உயிரிழந்தார். இவரது மறைவுக்கு ஊடகங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சாரதா, முன்னதாக மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியில் படித்த இவர், தி இந்து ஆங்கில பத்திரிகையில் Education Plus and Young World in Chennai ஆகியவற்றில் தலையங்கத்தில் பணியாற்றினார்.

தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 'The News Minute' ஊடகத்தில் சேர்ந்த இவர், அங்கு சினிமா, சினிமா விமர்சனம், மனநலப் பிரச்சினைகளை தவறாக சித்தரிப்பது, ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதற்காக பெண்களை அவமானப்படுத்துவது, பாலினப் பாகுபாடு போன்றவற்றையும் எடுத்து பணியாற்றினார்.

இந்த நிலையில், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட அவரது மறைவுக்கு 'The News Minute' ஊடகவியலாளர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், கலைஞர் செய்திகள் சார்பாகவும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறோம்.

முன்னதாக தி இந்து ஆங்கில பத்திரிகையில் பணியாற்றி வந்த மூத்த புகைப்பட கலைஞரான கே.வி.சீனிவாசன் (56) வைகுண்ட ஏகாதசியின்போது சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை புகைப்படம் எடுத்து கொண்டிருக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: வைகுண்ட ஏகாதசி: புகைப்படம் எடுக்கும்போது உயிரிழந்த போட்டோகிராபர்.. - 5 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்!