Tamilnadu

ஒன்றரை வயது குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்த குடும்பத்தினர்.. சென்னையில் நெகிழ்ச்சி !

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. சுமார் ஒன்றரை வயதாகும் இந்த குழந்தை, கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் விளையாடி கொண்டிருந்தது. அப்போது குழந்தையின் தாய் வீட்டு வேலை செய்துகொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் விளையாடி கொண்டிருந்த குழந்தை, வீட்டிலுள்ள டிவியின் மேஜை மீது ஏறியுள்ளது. அப்போது குழந்தை கால் இடறி கீழே விழுந்துள்ளது. பின்னர் சத்தத்தை கேட்டு வந்த தாய், குழந்தையை பதறி அடித்து தூக்கையில், அதன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது தெரியவந்தது.

பின்னர் பதறியடித்து கொண்டு குழந்தையின் குடும்பத்தார், அதை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த குழந்தை, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

பின்னர் ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் அவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி குழந்தை கடந்த 2 நாட்களுக்கு முன்பு குழந்தை மூளைச்சாவு அடைந்தது. அதோடு அந்த குழந்தை உயிர் பிழைப்பது மிகவும் கடினம் என்று பெற்றோரிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதைக்கேட்டு மிகுந்த வேதனை அடைந்த பெற்றோர் தங்களது குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். மனதை கல்லாக்கிக்கொண்டு பெற்றோர் எடுத்த இந்த அருமையான முடிவுக்கு மருத்துவர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

இதையடுத்து மூளைச்சாவு அடைந்த அந்த குழந்தையின் சிறுநீரகங்கள், கல்லீரல், உள்ளிட்டவையை தானமாக பெறப்பட்டு, அதனை தேவைப்பட்ட குழந்தைகளுக்கு பொருத்தப்பட்டது. அதில் கல்லீரல் 4 மாத பெண் குழந்தைக்கு பொருத்தப்பட்டது. இந்த சம்பவம் கண்ணீர் கலந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னையில் தங்களது தாயின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணிய மகள்கள், தங்கள் தாய் இறந்த பின்பு அவரது உடலை முழுவதுமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு தானமாக வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: 'I Will Miss You'.. 8ம் வகுப்பு மாணவிக்கு Love Letter எழுதிய ஆசிரியர்: இணையத்தில் வைரலாகும் கடிதம்!