Tamilnadu

’நானும் அரசு பள்ளி மாணவன்தான்’ : தன் வாழ்க்கை அனுபவத்தை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்ட திருச்சி ஆட்சியர்!

திருச்சி மாவட்டம் துவாக்குடி வடக்கு மலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெல் ஆர்.எஸ்.கே பள்ளியில் 1987 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் அரசுப் பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலப் புலமையைப் பயிற்றுவித்தல் வகுப்பு தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமை வகித்து, விழாவைத் தொடங்கி வைத்து மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார். பின்பு பேசிய ஆட்சியர் பிரதீப் குமார், " ஒவ்வொருவருக்கும் மொழி புலமை அவசியம் அதன் மூலம் தான் மற்றவர்களுடன் உரையாட முடியும்.

ஒருவரை அடையாளம் காண்பதற்கு அவர் உதவி செய்பவராகவோ பேசுவதில் சிறந்தவராக இருக்க வேண்டும். ஊரக பகுதியில் உள்ள மாணவர்கள் பேச முடியாமல் நேர்முகத் தேர்வுகளில் பல வேலை வாய்ப்புகளைத் தவறவிடுகிறார்கள். இது நகர்ப்புற மாணவர்களிடமும் தொடர்கிறது.

மொழி தொடர்பு மிகவும் முக்கியமாக ஒன்றாகும். அதற்காக மாணவர்கள் பேசுவதை ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் மாணவர்களிடம் அறிவு வளரும். ஆங்கிலம் பேசுவது தவறாகி விடுமோ என்று பலர் பேசாமலே இருந்து விடுகின்றனர். இதனால் தான் அவர்களால் மொழியை கற்றுக் கொள்ள முடியவில்லை.

நானும் ஒரு அரசுப் பள்ளியில் படித்தவன் தான் தற்பொழுது யுபிஎஸ் தேர்வு மூலம் ஆட்சியராக தேர்வு பெற்றுள்ளேன். நீங்களும் உங்களை மொழித் திறமையை வளர்த்துக் கொண்டால் பல்வேறு நிலைகளில் முன்னேற முடியும். ஒவ்வொரு வரும் எந்த துறையில் தலைசிறந்தவர்கள் என நீங்கள் நினைக்கிறீர்களோ அது உங்களுக்குத் தெரிகிறதா? அது உங்களது வாழ்க்கைக்கு உதவுமா? அது உங்களுக்குப் பிடித்து உள்ளதா? என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்" என தெரிவித்துள்ளார்.

Also Read: Fact Check.. தனது மகளையே 62 வயது முதியவர் திருமணம் செய்ததாக வைரலாகும் வீடியோ உண்மைதானா?