Tamilnadu

அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.92,500 அபராதம்.. அதிரடி காட்டிய போக்குவரத்துத் துறை !

தமிழ்நாட்டில் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல ஊர்களுக்கு பொதுமக்கள் செல்வர். அவ்வாறு பயணிகள் செல்வதற்கு ஏதுவாக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும் தனியார் பேருந்துகளும் அதிகமாக இயக்கப்பட்டு வருகிறது.

பொதுவாக தனியார் பேருந்துகளில் சாதாரண நாட்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விட பண்டிகை காலங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆண்டுதோறும் பொதுமக்களிடம் புகார்கள் குவிந்த வண்ணமாக காணப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முனைப்பு காட்டி வருகின்றனர். மேலும் சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்ப வரும் பயணிகளும் தங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முனைப்பு காட்டுகின்றனர். இதனால் தனியார் ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தது.

இந்த நிலையில், போக்குவரத்து ஆணையர் உத்தரவின் படி சென்னை (வடக்கு) சரசு இணைப் போக்குவரத்து ஆணையர் வழிகாட்டுதலின் பேரில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை தினங்களை ஒட்டி ஆம்னி பேருந்துகளில், வழக்கத்துக்கு மாறான அதிக கட்டணம் வசூலிக்கும் புகார் குறித்து கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு 23/12/22 முதல் 02/01/2023 வரை சென்னை வடக்கு சரசு பகுதியில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த 23-ம் தேதி கோயம்பேடு மற்றும் போரூர் சுங்கசாவடி பகுதிகளில் சிறப்பு ஆம்னி பேருந்து சோதனை செய்யப்பட்டது. இதில் வழக்கத்திற்கு மாறான அதிக கட்டணம் வசூலிக்கும் புகார் மற்றும் வரி செலுத்தப்படாமல் இயக்கப்படும் பிற மாநில ஆம்னி பேருந்துகள் குறித்து சோதனை செய்யப்பட்டது.

அந்த சோதனையில் 49 ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தது தெரியவந்தது. இதையடுத்து வழக்கத்துக்கு மாறான அதிக கட்டணம் வசூலித்ததாக புகார் பெறப்பட ஆம்னி பேருந்துகளிருந்து 9 பயணிகளுக்கு ரூ. 9200 அதிக கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டது. மேலும் அந்த 49 பேருந்துகளுக்கு ரூ.92,500 அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இது போன்று வரி செலுத்தப்படாமல், அதிக கட்டணம் வசூலிப்பது மற்றும் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் மீது மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் விதிகளின் படி தொடர்ந்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதிக கட்டணம் வசூலித்ததால் 49 பேருந்துகளுக்கு ரூ.92,500 அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.

Also Read: “Oscar விருது TO ரஜினி வரை” விஜயின் KUTTY STORY காப்பி அடிக்கப்பட்டதா? -இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள்