Tamilnadu
“கொண்டாட்டங்கள் பின்னால் இருக்கும் லாபம் பெருக்கும் வணிகம்..” : விழாக்களின் தேவை என்ன தெரியுமா?
விழாக்களின் தேவை என்ன? மனிதன் கொண்டாட்டத்தை விரும்புபவன். துயரம் என்னவென்றால் அவன் உருவாக்கியிருக்கும் வாழ்க்கை, கொண்டாட்டத்தைக் கொடுக்க முடியாத வாழ்க்கை என்பதுதான்.
ஆதியில் மனிதன் வேட்டையாடி அசைவத்தை கொண்டு வந்து குழுவுக்கு அளிக்கும்போது அது கொண்டாட்டத்துக்கான நிகழ்வாக இருந்தது. அதிகப் புரதம், அதிக வாழ்நாள். மொத்தக் குழுவினரும் கூடிப் பகிர்ந்து உண்டு, ஆடிப் பாடி கழிக்கும் கொண்டாட்ட நாளாக அது இருக்கும். அத்தகைய கொண்டாட்டங்கள் பழங்குடி சமூகங்களில் இன்றும் நீடிப்பதைக் காணலாம்.
மறுபக்கத்தில் இயற்கையைக் கட்டுப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு shaman எனப்படும் பூசாரி ஓர் ஆட்டம் ஆடும் நிகழ்வை நடத்துவான். அது கொண்டாட்டமாக இருக்காது. அமானுஷ்யத்துக்கான ஆட்டமாக இருக்கும்.
காலம் ஓட ஓட குழுக்கள் சமூகங்களாகின. கொண்டாட்டங்கள் பரிணமித்தன. வெறியாட்டமும் கொண்டாட்டமும் ஊடாடிக் கலந்து கொண்டன. கள்ளேறி போதையில் பித்து தெறிக்க ஆடும் ஆட்டத்தில் ஆடுவோர் கொண்ட துயரங்களின் நிழல் கண்ணீராய் கோர்த்து ஆங்காரமாகவும் வெளிப்படும். வேள்பாரி நாவலில் அத்தகையவொரு அற்புதமான கொண்டாட்டத்தை தோழர் சு.வெங்கடேசன் வடித்து கண் முன் நிறுத்தியிருப்பார். இன்னுமே கூட நம்மூர் நாட்டார் தெய்வங்களில் ஆடும் சாமியாட்டம் இந்த ரகத்துக்கு நெருக்கம்.
காலப்போக்கில் வணிகம் தோன்றிய பிறகு லாபம் பெருக்க கூடல்கள் அதிகம் தேவைப்படத் தொடங்கின. பல தரப்பு மக்களின் பங்கேற்பு, பண்டப் பரிவர்த்தனைகள், ஆண் - பெண் களிப்பு, கலை ஆர்ப்பரிப்பு எனப் பல வடிவங்களில் கூடல்கள் அரசுகளின் ஆதரவுடன் தலைப்பெறத் தொடங்கின. அதற்கான காரணங்களை சமயங்கள் வகுத்தளித்தன. பூம்புகாரின் இந்திர விழா அந்த ரகம்.
கிராம சமூகத்தில் இத்தகைய கூடல்கள் குடும்பம் சார்ந்த நிகழ்ச்சிகளாகவும் சடங்குகளாகவும் கூட கடைப்பிடிக்கப்பட்டன. ஆதி மனித சமூகத்தில் கடைபிடிக்கப்பட்ட பகிர்ந்து உண்ணும் தன்மை மொய் வழக்கமாக மாறி இந்தக் கூடல்களை உயிர்ப்புடன் வைத்திருந்தது. இவையன்றி வழிபாட்டு கூடல்களுக்கான சரடும் தொடர்ந்து கொண்டே வந்தது.
கிராமச்சூழல் நகரமயமாக்கப்பட தொடங்கியதும் முதலாளித்துவம் வேகமாக இறங்க ஆரம்பித்ததும் நகரங்களின் விழாக்கள் கிராமங்களைப் பற்றின. நகரங்கள் வணிகப் பெருக்கத்துக்கான வாயில்கள். எனவே இயல்பாகவே நகரத்தின் கூடல்கள் மத விழாக்களின் கூடல்களாகவே இருந்தன. சம்பந்தமே இல்லாத தீபாவளியை எல்லாம் கிராமங்கள் கொண்டாடும் சூழல் ஏற்பட்டது இப்படித்தான். கூடவே இச்சமூகத்தில் இருக்கும் பண்பாட்டு மேலாதிக்கமும் தேவையான வழிகளை செய்து கொடுக்கிறது.
இன்றைய நகரத்தில் கூடல்கள் என்பது நண்பர்களை சந்திப்பது மட்டுமாக சுருங்கியிருக்கிறது. அதிகபட்சம் போனால் பேரங்காடிகள், கடற்கரைகள், தியேட்டர்களை சொல்லலாம். ஆனால் அவை கடத்தும் கொண்டாட்டத்தின் ஆயுள் சில மணி நேரங்கள்தான்.
கூடல்கள், கொண்டாட்டங்கள் இன்றைய சூழலில் அருகி விட்டன. மத விழாக்களாக மட்டுமே எஞ்சியிருக்கின்றன. அவையும் வணிகம், செலவு, மதம் சார்ந்த விஷயங்களாகவே இருக்கின்றன. அவற்றின் கொண்டாட்டங்கள், முடிந்த பிறகு பெரும் ஆயாசம் ஏற்படும் வகையிலேயே இருக்கின்றன. இன்னும் சிறந்த உத்தி ஒன்று இருக்கிறது. நாம் விரும்பும் கொண்டாட்டத்தை நாம் அன்றாடம் வாழும் கணங்களில் பெற முயலலாம். உண்மையான ஆனந்தம் கிட்டும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!