Tamilnadu
“அன்று காமராஜர்.. இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின்” : ‘நம்ம ஊர் பள்ளி’ திட்டத்திற்கு குவியும் பாராட்டு!
“அன்று பெருந்தலைவர் காமராஜர்; இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பது போல, அரசுப் பள்ளிகள் மேம்பாடு அடைய 'நம்ம ஊர் பள்ளி' எனும் அற்புத திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது” என்று ‘தினத்தந்தி” தலையங்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து "அன்று காமராஜர்; இன்று மு.க.ஸ்டாலின்" எனும் தலைப்பில் 22.12.2022 தேதிய ‘தினத்தந்தி” தலையங்கத் தில் கூறப்பட்டு ள்ளதாவது:-
அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி அளிக்கும் சேவையை பள்ளிக்கூடங்கள் செய்து வருகின்றன. அதனால்தான் பள்ளிக்கூடங்களை கல்வி கோவில்களாகவும், அங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களை கல்வி கடவுள்களாகவும் சமுதாயம் போற்றுகிறது, வணங்குகிறது.
தமிழ்நாட்டில் கல்விக் கண் திறந்த தலைவராக மக்களால் என்றென்றும் புகழப்படுகிற பெருந்தலைவர் காமராஜர், கிராமப்புறங்களில் உள்ள பள்ளிக்கூடங்களில் கட்டமைப்பு தரத்தையும், கல்வி தரத்தையும் உயர்த்துவதற்காக 1958-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 'பள்ளி சீரமைப்பு' என்ற திட்டத்தை கொண்டுவந்தார்.
அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்களின் பங்களிப்போடு, அவர்களின் நன்கொடைகளை பெற்று பள்ளிக்கூடங்களுக்கு தேவையான வசதிகள், உபகரணங்கள், சாதனங்களை பெறுவதுதான் இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். இந்த திட்டத்துக்கு பொதுமக்களிடம் பெரும் ஆதரவு கிடைத்தது. இதன் காரணமாக, பள்ளிக்கூடங்கள் இருக்கும் பகுதியில் உள்ள பொதுமக்கள், தாங்களாகவே முன்வந்து பள்ளிக்கூடம் கட்டுவதற்கு தேவையான நிலமாகவும், வகுப்பறைகளுக்கு தேவையான பொருட்களாகவும், மேஜை-நாற்காலிகளாகவும், மாணவர்களுக்கு தேவையான 'டெஸ்க்', பெஞ்சுகளாகவும், ஏழை குழந்தைகளுக்கு எழுது பொருட்களாகவும், நூலகங்களுக்கு தேவையான புத்தகங்களாகவும் மற்றும் பல பொருட்களாகவும் நன்கொடைகளை வழங்கினர். இந்த திட்டத்தால் 24,565 பள்ளிக்கூடங்கள் பயன்பெற்றன.
'அன்று காமராஜர்; இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்' என்று கூறும்படி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'நம்ம ஊர் பள்ளி' என்ற ஒரு அற்புதமான திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். அவர் படித்த சென்னை சேத்துப்பட்டில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் நடந்த முன்னாள் மாணவர்கள் சங்க சந்திப்பில் பேசும்போது, பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள் வழங்கும் நிதியின் மூலமாக அரசு பள்ளிக்கூடங்களுக்கு தேவையான அனைத்தையும் செய்யும் திட்டத்தை தொடங்கி வைக்கப்போவதாக அறிவித்தார்.
சொன்னதை செய்வதை நிறைவேற்றும் விதமாக, அரசு பள்ளிக்கூடங்களை அனைவரின் பங்களிப்போடு மேம்படுத்தும் முன்னோடி திட்டமாக அவர் சிந்தையில் உதித்த 'நம்ம ஊர் பள்ளி' திட்டத்தை தொடங்கிவைத்தார். "அரசு பள்ளிக்கூடங்களின் மேம்பாடு என்பது அரசால் மட்டும் முடியாது, உள்ளூர் மக்களுடன், முன்னாள் மாணவர்களுடன், தொழில்துறையுடன், உலகமெங்கும் வாழும் தமிழர்களுடன் கைகோர்ப்பதற்காக 'நம்ம ஊர் பள்ளி' அடித்தளம் அமைத்து இருக்கிறது'' என்று அவர் அறிவித்தார்.
'அரசு பள்ளிக்கூடங்கள் அரசின் சொத்துகள் மட்டுமல்ல; அது மக்களுடைய சொத்தாகும்' என்ற முதல்-அமைச்சர் கூற்றுப்படி, அரசு பள்ளிக்கூடங்கள் நம் பள்ளிக்கூடங்கள் என்ற உணர்வு மக்களுக்கு வரவேண்டும். இந்த திட்டத்தை வெறுமனே அறிவித்ததோடு இல்லாமல் தன் சொந்த நிதியில் இருந்து, இதன் தொடக்கமாக முதல் நபராக ரூ.5 லட்சத்தை அளித்தார். அதைத்தொடர்ந்து இப்போது கோடிக்கணக்கில் நன்கொடைகள் குவிகிறது.
'உங்கள் ஒவ்வொரு ரூபாயும் அரசு பள்ளிக்கூடங்களுக்கே செலவிடப்படும், அரசு பள்ளிக்கூட தரத்தை உயர்த்துவோம், நாம் காண விரும்பிய கனவு பள்ளியை நாம் உருவாக்குவோம்' என்ற முதல்-அமைச்சரின் அழைப்பை ஏற்று இந்த திட்டத்துக்கு 'நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர், நிதி குறைந்தவர் காசுகள் தாரீர், அதுவுமற்றோர் வாய்ச்சொல் அருளீர், ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்' என்ற பாரதியார் பாடலுக்கு ஏற்ப, தமிழ்நாட்டிலும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்கள் அனைவரும் இந்த திட்டத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு அரசு பள்ளிக்கூடங்களுக்கு உதவ வேண்டும் என்பதே கல்வியாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!