Tamilnadu
தனியார் பேருந்து மீது மோதிய கார்.. 3 இன்ஜினீரிங் மாணவர்கள் பரிதாப பலி.. கோவில்பட்டியில் நடந்த கோரம் !
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிருஷ்ணா நகரை சேர்ந்த லட்சுமணப் பெருமாள் மகன் கீர்த்திக் (22). இவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவரும் வானரமுட்டியை சேர்ந்த அஜய் (23), கோவில்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் (24), அருண்குமார் (21), விக்னேஷ் (23) ஆகியோர் நண்பர்களாக இருந்துள்ளனர்.
கீர்த்திக், கல்லூரிக்கு காரில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி நேற்றும் கல்லூரிக்கு காரில் சென்ற கீர்த்திக், கல்லூரி முடிந்து வீடு திரும்பையில் தனது நண்பர்களையும் காரில் ஏற்றிக்கொண்டு வந்துள்ளார். அப்போது காரை கீர்த்திக் ஓட்டி செல்ல, மற்றவர்கள் தங்கள் இருக்கையில் அருகருகே நெருக்கி அமர்ந்திருந்தனர்.
அப்போது கார் கோவில்பட்டி அருகே உள்ள அய்யனேரி பகுதியில் இளையரசனேந்தல் கிராமத்தை அடுத்து பாலத்தில் வந்த போது எதிரே வந்த தனியார் பேருந்து ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியது. இந்த கோர சம்பவத்தில் கீர்த்திக், செந்தில் குமார், அஜய் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க உயிரிழந்தனர்.
அதோடு அருண்குமார், விக்னேஷ் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். இந்த கோர விபத்து குறித்து அப்பகுதிவாசிகள் உடனே காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் டிஎஸ்பி வெங்கடேஷ், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்த், உதவி ஆய்வாளர் அரி கண்ணன் மற்றும் தீயணைப்பு அலுவலர் சுந்தர்ராஜ் தலைமையான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் இடிப்பாடுகளின் சிக்கி இருந்த 3 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்த 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே அவர்களுக்கு அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தனியார் பேருந்தில் வந்து காயமடைந்த தனியார் கல்லூரி தோட்ட தொழிலாளி பிள்ளையார் நத்தத்தைச் சேர்ந்த மாடசாமி (62) என்பவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரில் நண்பர்களுடன் கல்லூரி முடிந்து வீடு திரும்பியபோது பேருந்து மீது கார் மோதிய கோர விபத்தில் 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன், சென்னையில் நண்பர்களுடன் காரில் ஊர் சுற்றி பார்க்க சென்றபோது நிகழ்ந்த விபத்தில் ஐடி பெண் ஊழியர் ஒருவர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!