Tamilnadu

“சீன ஆக்கிரமிப்பு குறித்து வாய் திறக்காத மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க தயாரா?” : KS.அழகிரி சாடல்!

ராகுல் காந்தி மேற்கொண்ட ஒற்றுமை பயணத்தை மக்களிடையே கொண்டு செல்லும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகள் தோறும் 100 இடங்களில் காங்கிரஸ் கொடியேற்று விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி சேலம் மாவட்டத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே .எஸ். அழகிரி பங்கேற்றார். சேலம் அருகே வட்ட முத்தாம்பட்டியில் காங்கிரஸ் கட்சி கொடி ஏற்றிய பின்னர் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, ”நாட்டு மக்களிடையே பாரதிய ஜனதா கட்சி பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுக்க 5,400 மதங்கள் இருக்கின்றன.

இந்தியாவிலும் ஏராளமான மதங்கள் உள்ளன. வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையில் எல்லா மதத்தினரும் சமம் என்பது காந்தியின் கொள்கை. ஆனால் ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே வழிபாடு போன்றவை நம் நாட்டில் சாத்தியமில்லை. அதற்கு இந்திய அரசியல் சட்டத்திலும் இடமில்லை என்பதால் தான், அந்த அரசியல் சட்டத்தையே பாரதிய ஜனதா மாற்ற முயற்சிக்கிறது.

சீனா எல்லைப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை இதுவரை பாரத பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் வந்து, நாட்டு மக்களிடையே உண்மை நிலையை எடுத்துரைக்கவில்லை. 1962 ஆம் ஆண்டு போரில் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டதை கூட அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, நாடாளுமன்றத்திற்கு நேரில் வந்து நாட்டு மக்களிடம் விளக்கம் அளித்தார்.

Nikkei Asian Review

ஆனால் பிரதமர் மோடி இன்று வரை சீன ஆக்கிரமிப்பு குறித்து வாய் திறக்காமல் இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வரலாறு மறைக்கப்பட்டுள்ளதாக கூறி ஆங்காங்கே கண்காட்சிகள் நடத்தப்படுகிறதே என்ற கேள்விக்கு, ”மாற்றி எழுதுவது பெயர் வரலாறு அல்ல, அது திருத்தி கூறுவது என்று அர்த்தம். சுதந்திர போராட்ட காலத்தில் எந்தவித அரசியலும் இல்லை.

அன்று இருக்கக்கூடிய பதிவுகள் நாளிதழில் வந்த செய்திகள் அடிப்படையில் வரலாறு எழுதப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்காக யாரெல்லாம் போராடினார்களோ அவர்கள் அதில் இடம்பெற்றுள்ளனர். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் எப்படி சுதந்திரப் போராட்ட வரலாற்றில் இடம் பெறுவார்கள்? என்று அழகிரி கேள்வி எழுப்பினார்.

Also Read: “மாநில அரசுகள் நல்லது செய்து விடக் கூடாது என்றே பாஜக ஆளுநர்களை நியமிக்கிறது..” - கனிமொழி MP விமர்சனம் !