Tamilnadu

பள்ளி மாணவர்களுக்காக ‘நம்ம ஸ்கூல்’.. முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கும் திட்டத்தின் பயன் என்ன?

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு நலத்திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு என்று காலை சிற்றுண்டி, இல்லம் தேடி கல்வி, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உள்ளிட்ட பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதோடு அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள், மாணவர்களின் தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்த கலைத்திருவிழா, வானவில் மன்றம் என பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அரசுப் பள்ளிகளை மேலும் மேம்படுத்தும் வகையில், "நம்ம ஸ்கூல்" என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கவுள்ளார். இந்த திட்டமானது அரசுப் பள்ளிகளில் பயின்று தற்போது நல்ல நிலைமைகளில் இருக்கும் முன்னாள் மாணவர்களின் உதவியோடு செயல்படுத்தப்படவுள்ளது.

அதாவது அரசுப் பள்ளியில் படித்தவர்கள் முன்னாள் மாணவர்கள், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்கள் (NGO), பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இதற்காக நிதி அளிக்கலாம். அவ்வாறு அளிக்கப்படும் நிதியானது, யார் எவ்வளவு அளித்துள்ளனர் என்பதை அறிய ஏதுவாக புதிய இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த நிதியை வைத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் தேவையான உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்தப்படவுள்ளது.

இதற்காக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தின் மூலம், எந்தெந்த பள்ளிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, பணிகள் எவ்வளவு நடந்து முடிந்துள்ளது, எந்தெந்த பணிகள் முடிந்துள்ளது என்பதையும் நம்மால் அறிந்துகொள்ள முடியும். இந்த இணையதளத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கவுள்ளார்.

இது குறித்து நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் படித்த சேத்துப்பட்டு MCC கல்லூரி மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசினார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் ஒரு முன்னெடுப்பு தமிழ்நாடு அரசின் சார்பில் நாங்கள் வைக்க இருக்கிறோம். அதற்கான அமைப்பை வருகிற 19-ஆம் தேதி நான் தொடங்கி வைக்க இருக்கிறேன். தமிழகம் முழுவதும் இந்த திட்டம் நடைபெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித்தர இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள், தன்னார்வ அமைப்புக்கள் வழங்கக்கூடிய நிதியின் மூலமாக அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான அனைத்தையும் நாம் செய்ய இருக்கிறோம். இதனை செய்து தருவது அரசாங்கத்தினுடைய கடமை என்று மட்டும் நீங்கள் நினைத்துக்கொள்ளாமல் அனைத்தையும் அரசாங்கமே செய்துவிட முடியாது. அதையும் புரிந்துகொண்டு மக்களும் சேர்ந்தால்தான் அதை நிறைவேற்றமுடியும். வெற்றிபெற முடியும்.

தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டம் வரும் 19-ஆம் தேதி தொடங்குவதற்கு முன்னதாகவே நான் படித்த பள்ளியிலே, எனது பள்ளியிலே முன்னெடுப்பாக நடந்திருப்பதைப் பார்த்து நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன்; பெருமைப்படுகிறேன். தமிழகத்தில், இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலமாக ஆக்குவது என்னுடைய இலட்சியம்." என்றார்.

Also Read: “சாம்பார் கணக்குலாம் தேர்தல் மனுவிலேயே இருக்குது.. பில் இருக்குதா?” -அண்ணமாலையை கலாய்த்த செந்தில் பாலாஜி!