Tamilnadu

நரிக்குறவர் மக்களுக்கான சமூக நீதி.. சாத்தியமாக்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்: கி.வீரமணி வரவேற்பு!

நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நாடாளுமன்றத்தில் சட்ட முன்வரைவு நேற்று (16.12.2022) நிறைவேற்றப்பட்டது. இதனை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:-

நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் ஆகிய ஜாதியினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க, நாடாளுமன்றத்தில் சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டுள்ளதை திராவிடர் கழகம் - சமூகநீதிக் கண்ணோட்டத்தில் வரவேற்கிறது.

தமிழ்நாடு அரசு சார்பில் இதற்கான பரிந்துரை ஒன்றிய அரசுக்கு வழங்கப்பட்டது. இந்தப் பரிந்துரையை ஏற்று, இந்திய தலைமைப் பதிவாளர் மற்றும் தேசிய பழங்குடியின ஆணையம் ஆகியவை பரிந்துரைத்ததன் அடிப்படையில், அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒன்றிய பழங்குடியினர் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, இதற்கான சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் நேற்று (16.12.2022) தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு அரசும், அதன் முதலமைச்சரும், நரிக்குறவர், குருவிக்காரர், இருளர் மற்றும் குறவர் போன்ற பிரிவினரின் வளர்ச்சிக்கும், அவர்களுக்குக் கல்வி, உத்தியோகம் அளித்து, அவர்களது வாழ்வாதாரம் கல்வி மேம்பாட்டை வளர்க்கவும், திட்டமிடவும் இந்த முடிவும் சட்டமுன்வரைவு நிறைவேற்றமும் தேவையான அளவுக்கு அதற்குத் துணை நிற்கும்.

இந்த முயற்சிகளைப் பெருக்கி நிரந்தர வாழ்வாதார மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய பணியை பிரதமர் மோடி தலைமையிலான அரசு நிறைவேற்றினால், சமூகநீதி இதுவரை கிட்டாதவர்களுக்கும் கிட்டும் வாய்ப்பினை ஏற்படுத்தும் என்பது உறுதி!

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

Also Read: தங்க முட்டை இடும் வாத்தை வெட்ட மனம் இல்லையா ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு?.. ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கேள்வி!