Tamilnadu

Insta நண்பனை பார்க்க வீட்டை விட்டு சென்ற சிறுமிகள்: 4 மணி நேரத்தில் பெற்றோர்களிடம் ஒப்படைத்த தமிழக போலிஸ்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் என்ற பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளர்களின் மகள்கள் இரண்டு பேர் அந்த பகுதி பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இருவரும் நெருங்கிய தோழிகளாக இருந்த நிலையில், இருவரும் ஒன்றாகவே பள்ளிக்கு செல்வதும் வருவதும் வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று மாலை இருவரும் திடீரென காணாமல் போயுள்ளனர். பிள்ளைகளை காணவில்லை என்று பெற்றோர்கள் பல இடங்களிலும், சக தோழிகள் வீட்டிலும் தேடியுள்ளனர். ஆனால் அங்கே இருவரும் இல்லை என்பதால் பெற்றோர்கள் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இது தொடர்பாக தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அந்த சிறுமிகளிடம் இருந்த மொபைல் எண்ணை ட்ராக் செய்துள்ளனர். அந்த இடம் தூத்துக்குடி பகுதியை காட்டியுள்ளது. இதையடுத்து அதனை தொடர்பு கொண்ட அதிகாரிகள் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டனர். அப்போது அவர்கள் சென்னைக்கு பேருந்தில் சென்றுகொண்டிருப்பது தெரியவந்தது.

பின்னர் அவர்கள் செல்லும் பேருந்தின் ஓட்டுநரை தொடர்பு கொண்ட அதிகாரிகள், அவர்களை அருகிலிருக்கும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கும்படி கூறினர். அதன்பேரில் இரண்டு சிறுமிகளையும், எட்டையபுரம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அவர்களை அங்கிருந்து காரைக்குடிக்கு அழைத்து வரப்பட்டனர்.

தொடர்ந்து அவர்களிடம் விசாரணை கொண்டதில், தொடர்ந்து இருவரும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்துள்ளனர். அப்போது அதன்மூலம் சிறுவன் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை காண இருவரும் தூத்துக்குடி சென்றதாக சிறுமிகள் கூறினர். இருப்பினும் அவர்கள் கூறியது உண்மை தானா என்று தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

சிறுமிகள் காணாமல் போன விவகாரத்தில் பெற்றோர்கள் அளித்த புகாரையடுத்து 4 மணி நேரத்தில் விரைந்து செயல்பட்டு சிறுமிகளை மீட்ட காவல்துறையினர் செயல் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

Also Read: 4 கால்களுடன் பிறந்த அதிசய பெண் குழந்தை.. மருத்துவர்கள் கூறும் காரணம் என்ன?