Tamilnadu
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு : 'கால அவகாசம் நீட்டிக்கப்படுமா ?' - அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் !
தமிழ்நாட்டில் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. மேலும் இதற்காக கால அவகாசம் வழங்கியதோடு பொதுமக்களுக்கு ஏதுவாக இருக்க மின்துறை சார்பில் சிறப்பு முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாமை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மின் வாரியத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளின் அடிப்படையில்தான் ஆதார் எண்ணை இணைக்கக் கூடிய பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 2.66 கோடி நுகர்வோரில், இதுவரை 1.03 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
அதில் ஆன்லைன் மூலம் 51 லட்சம் பேரும், சிறப்பு முகாம்கள் மூலம் 53 லட்சம் பேரும் இணைத்துள்ளனர். சென்னையில் கூடுதலாக 4 வணிக வளாகங்களிலும் இந்த சிறப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதோடு 15 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தலைமை செயலகத்திலும் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப கூடுதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
இந்த மாத இறுதிக்குள் பெரும்பான்மையாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்படும். தமிழகம் முழுவதும் உள்ள 2,811 பிரிவு அலுலகங்களில் வரும் 31-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை வரும் 31-ஆம் தேதிக்குள் இணைக்காவிட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்கள் மத்தியில் ஒரு பதட்டத்தை உருவாக்க வேண்டாம். எதிர்பார்த்ததைவிட மிக சிறப்பாக, மிக நேர்த்தியாக விரைவாக பணிகள் நடைபெறுகிறது. கால அவகாசம் நீட்டிக்கப்படுவது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து சென்று பின்னர் அறிவிக்கப்படும். ஆதார் - மின் இணைப்பு சிறப்பு முகாம்கள் டிசம்பர் 25 (Christmas) மட்டும் அரசு விடுமுறை காரணமாக செயல்படாது. மற்ற விடுமுறை நாட்களிலும் இந்த பணிகள் தொடரும்.
மின்வாரிய துறையை கடந்த ஆட்சியை விட தற்போது கூடுதல் வருவாய் வரக்கூடிய துறையாக மாற்றியுள்ளோம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தற்போது 13 கோடியே 71 லட்ச ரூபாயாக வருவாய் அதிகரித்து, மின்வாரியத்தின் வருவாய் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
மின்வாரியம், வங்கிகளில் பெறப்பட்டுள்ள கடன்களுக்கு கூடுதல் வட்டி விகிதம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த வட்டி விகிதத்தை குறைத்துள்ளதால் 84 கோடி ரூபாய் செலவு மிச்சமாகி, மின்சார துறையை சீரமைக்கப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்துவதற்கான டெண்டர் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. 7 டிவிஷனில் புதைவட கம்பிகள் பதிப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது." என்றார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!