Tamilnadu

விபத்தில் சிக்கிய நகைக்கடை ஊழியர்.. 2.7 கிலோ நகையை மீட்டு உயிரையும் காப்பாற்றிய Inspector!

சென்னை அடுத்த மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளராக இருப்பவர் சிவ ஆனந்த். இவர் நேற்று இரவு பாடி மேம்பாலம் வழியாக வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது பாடி மேம்பாலம் கீழே கோயம்பேடு நோக்கிச் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒருவர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதில் அந்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்த ஆய்வாளர் சிவ ஆனந்த் உடனே தனது வாகனத்தை நிறுத்திக் காயமடைந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். பின்னர் காயமடைந்த நபரின் உறவினர்களுக்குத் தகவல் சொல்ல வேண்டி அவரது பையைத் திறந்து பார்த்த போது அதில் ரூ. 1.41 கோடி 2.7 கிலோ தங்க நகை இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் ஆய்வாளர் அவரது ஓட்டுநர் உரிமம் மற்றும் அவரது செல்போனில் கடைசியாகப் பேசிய நபருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். பிறகு காயமடைந்த நபர் குறித்து விசாரித்த போது, சென்னை மேற்கு மாம்பலம் காந்தி தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் என்பதும் இவர் புழலில் செயல்பட்டு வரும் பாக்கியம் ஜெம்ஸ் அண்டு கோல்டு நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

மேலும் நேற்று ஹரிஹரன் புழல் பகுதியில் உள்ள நகை தயாரிப்பு நிறுவனத்திலிருந்து 1.41 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.7 கிலோ கொண்ட தங்க நகைகளை தி.நகரில் உள்ள பிரபல நகைக்குக் கொண்டு செல்லும் போது சாலை விபத்தில் காயமடைந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலிஸார் பாக்கியம் ஜெம்ஸ் அண்டு கோல்ட் நிறுவனத்தின் இயக்குனர் கதிரவனை நேரில் அழைத்துத் தங்க நகைகளை ஒப்படைத்தனர். சாலையில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்தவரை மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்து, நகையையும் மீட்ட காவல் ஆய்வாளருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Also Read: 3 மாதமாக UnderCover Agent.. ராகிங் செய்யும் மாணவர்களை கண்டுபிடிக்க கல்லூரி மாணவியாக மாறிய பெண் போலிஸ் !