Tamilnadu
“2 லட்சம் மின் கம்பங்கள்.. 11,000 பேர் பணியில்” : மாண்டஸ் புயலை எதிர்கொள்ள தயாராரும் மின்சாரத்துறை !
தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி .செந்தில்பாலாஜி தலைமையில், “மாண்டஸ்” புயலை எதிர்கொள்வதற்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சிறப்பு ஆய்வுக் கூட்டம் காணொளி மூலம் நடத்தினார்.
பின்னர், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாடு மின்சார வாரியம் “மாண்டஸ் புயலை” எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கிறது. குறிப்பாக, இப்போது 12 மண்டலத்தினுடைய தலைமைப் பொறியாளர்கள், 44 மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்து முடிந்திருக்கின்றன.
இந்த புயல் மழையினால் எந்தவிதமான பாதிப்புகளும் வரக்கூடாது. அப்படி பாதிப்புகள் வந்தாலும் கூட உடனுக்குடன் சரி செய்து சீரான மின் விநியோகம் வழங்குவதற்காக இந்தக் கூட்டத்திலே ஆலோசிக்கப்பட்டிருக்கின்றன. மொத்தம் 44 மின் பகிர்மான வட்டங்களிலும் 176 செயற்பொறியாளர்களுடைய தலைமையில் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு, ஏறத்தாழ 11,000 பேர் இப்பொழுது களத்திலே பணியில் இருக்கின்றார்கள்.
24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில் 11,000 நபர்களும் பணியாற்றக்கூடிய வகையிலும் எந்தந்த இடங்களில் மழை இல்லாமல் இருக்கிறதோ அந்த இடங்களில் 200 பேர் கொண்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஏதேனும் மாவட்டங்களில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டால் இந்த சிறப்பு குழுக்களில் பணியாற்றக்கூடிய 200 நபர்களையும் உடனுக்குடன் அழைத்து சென்று அங்கே சரி செய்வதற்காக இந்த சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
8 மீட்டர் கம்பமாக இருந்தாலும் சரி 9 மீட்டர் கம்பமாக இருந்தாலும் சரி, மொத்தம் 2,00,000 மின் கம்பங்கள் தயாராக இருக்கின்றது. அதேபோல 12,100 கிலோமீட்டர் மின் கம்பிகள் மற்றும் 15,000 மின்மாற்றிகள் கையிருப்பில் இருக்கிறது. இப்படி தேவையான அளவிற்கு உபகரணங்களும் கையில் இருப்பு உள்ளது.
எனவே, இந்த புயலை எதிர்கொள்வதற்கு தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர், இயக்குனர்/மின் பகிர்மானம் உள்ளிட்ட இயக்குனர்கள் அனைத்து நிலைகளிலும் பணியாற்றக் கூடியவர்கள் 24 மணி நேரமும் நாங்கள் அந்த பணியில் ஈடுபட்டு இருக்கின்றோம்.
சென்னையைப் பொறுத்தவரையில் சிறப்பு பணிகளை செய்வதற்காக 1,100 பேர் ஈடுபட்டிருக்கின்றார்கள். ஏதேனும் இடத்தில் பாதிப்பு என்று சொன்னால் உடனுக்குடன் சரி செய்து சீரான மின் விநியோகம் வழங்குவதற்காக இந்த குழுக்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றன.
எனவே, இப்பொழுது வரை மின் விநியோகத்தில் எந்த விதமான பாதிப்புகளும் இல்லை. சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, புயல் கரையைக் கடக்கும் போது, தேவைப்பட்டால் பாதுகாப்பு கருதி காற்றின் வேகத்தைப் பொறுத்து மின்சாரத்தை நிறுத்தி வைக்கலாம் என அங்கு இருக்ககூடிய உயர் அதிகாரிகள் முடிவு எடுத்துக் கொள்ளலாம் என இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவசர அழைப்பிற்கு முதலமைச்சர் அவர்களின் திருக்கரங்களால் துவக்கி வைக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மின்னகத்தை (9498794987) தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அதனடிப்படையில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த முறை மயிலாடுதுறை மற்றும் சீர்காழியில் ஏற்பட்ட பாதிப்புகளை 36 மணி நேரத்தில் 2,622 மின் மாற்றிகள் சரி செய்யப்பட்டு சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டது.
தற்பொழுதும் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனுக்குடன் சரி செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பணியாற்ற தயாராக இருக்கிறார்கள். ஜுன் மாதத்தில் இருந்து ஏறத்தாழ 14,00,000 சிறப்பு பணிகளாக எடுத்து முடிக்கப்பட்டது. 44,000 பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கடந்த மழைப்பாதிப்பின் போதும் பெரிய அளவில் பாதிப்பின்றி சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டது.
சென்னையைப் பொறுத்தவரை, மழைநீர் தேங்கும் இடங்களில் உள்ள பில்லர் பாக்ஸ்கள் ஒரு மீட்டர் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மீதம் உள்ள மழைநீரால் பாதிக்காத இடங்களில் உள்ள பில்லர் பாக்ஸ்களும் அடுத்த ஆண்டுக்குள் ஒரு மீட்டர் அளவிற்கு உயர்த்தப்படும்” என்று தெரிவித்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!