Tamilnadu

மாமல்லபுரத்தில் விசிட்.. “புயலால் ஏற்படும் பெரிய பாதிப்புகளையும் எதிர்கொள்ள தயார்” : அமைச்சர் பேட்டி!

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு மண்டலமானது “மாண்டஸ்” புயலாக வலுவடைந்து தென்கிழக்கு சென்னையிலிருந்து சுமார் 550 கி.மீ. தொலைவில் நிலைக்கொண்டுள்ளது என்றும், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டவிற்கு இடையே 09.12.2022 அன்று நள்ளிரவு கரையை கடக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 08ம் தேதி முதல் 11ம் தேதி முடிய 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் எனறும், கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 70 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று மற்றும் தரைக்காற்று வீசக்கூடும் என்றும், இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்குக் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் முன்னெச்சரிக்கை நடவடிககையாக சென்னை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும் கனமழையினை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களுக்குத் தலைமைச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் மாண்டஸ் புயல் சென்னையிலிருந்து 180 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இந்த புயல் கரையைக் கடக்கும் போது 85 கி.மீ வேகம் வரை காற்று வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி தீவிர புயலாக இருந்த மாண்டஸ் புயலாக வலுவிழந்து விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் புயல் கரையைக் கடக்கும் போது காற்று அதிகம் வீசும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையிலிருந்து ஈ.சி.ஆர் வழியாகப் பாண்டிச்சேரி வழியாக மற்ற ஊர்களுக்குக் கடற்கரையை ஒட்டிய செல்லும் அனைத்து பேருந்துகளும் மாற்று வழிகளில் இயக்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல், தமிழ்நாட்டில் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும். ஆனால் கடலோர பகுதிகளில் மட்டும் புயல் கரையைக் கடக்கும் நேரத்துக்கு 3 மணி நேரத்துக்கு முன்பும், பின்பும் பேருந்துகள் இயங்காது என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று மதியம் வரையில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன‌. இந்த நிலையில் இன்று பிற்பகல் இருந்து இரவு வரையில் மேலும் 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதை அடுத்து சென்னை விமான நிலையத்தில் மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக இதுவரையில், 27 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் மாண்டஸ் புயல் நெருங்கிவரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் மாமல்லபுரத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது “மாண்டஸ் புயலால் எவ்வளவு பெரிய பாதிப்புகள் வந்தாலும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது” என தெரிவித்தார்.

Also Read: மாண்டஸ் புயல்.. “மொட்டை மாடிகளில் நிற்கக்கூடாது - பொது மக்கள் செய்யக் கூடாதவை என்ன?” : முக்கிய அறிவிப்பு!