Tamilnadu

மக்களே பத்திரம்.. சென்னையில் இருந்து 260 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல்!

வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் தீவிர புயலாக மாறியது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டவிற்கு இடையே இன்று இரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்குக் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் முன்னெச்சரிக்கை நடவடிககையான சென்னை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும் கனமழையினை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து முன்னச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களுக்குத் தலைமைச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் மாண்டஸ் புயல் சென்னையில் இருந்து 260 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இந்த புயல் கரையைக் கடக்கும் போது 85 கி.மீ வேகம் வரை காற்று வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி தீவிர புயலாக இருந்த மாண்டஸ் புயலாக வலுவிழந்து விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் புயல் கரையை கடக்கும் போது காற்று அதிகம் வீசும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Also Read: ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கிய மாணவிக்கு நேர்ந்த சோகம்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி !