Tamilnadu
“கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டுவிட்டதாக நினைக்கிறார் பழனிசாமி” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு உரை!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (8.12.2022) தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.22.20 கோடி செலவில் 57 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.34.14 கோடி மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,03,508 பயனாளிகளுக்கு ரூ.182.56 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை: "வானரங்கள் கனிகொடுத்து மந்தியோடு கொஞ்சும்!
மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்!
கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பர்!
கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பர்!
தேன் அருவித் திரை எழும்பி வான்வழி ஒழுகும்!
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்!
கூனல்இளம் பிறைமுடித்த வேணி அலங்காரர்!
குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே!
- என்று போற்றிப் பாடப்பட்ட திருக்குற்றால வனப்பரப்புக்கு நான் வந்திருக்கிறேன்!
தென்காசி மாவட்டத்துக்கு வந்ததுமே, இந்த மண்ணைப் போலவே மனதும் குளிர்ச்சி அடைந்து விடுகிறது. எப்போதும் லேசான தூறல் – சாரலாகப் பெய்து வருவதைப் பார்க்கும்போது - சென்னை போன்ற வெப்பமான நகரத்தில் இருந்து வரும் எனக்கு இது மிகவும் இதமாக இருக்கிறது. ஆண்டுதோறும் சாரல் விழாவை அரசு கொண்டாடி வருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கும் மாவட்டம்!
குறிஞ்சி, மருதம், முல்லை ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய குற்றாலம் இருக்கக்கூடிய மாவட்டம்!
அதிகமான அருவிகள் உள்ள மாவட்டம்!
அணைகள் அதிகம் உள்ள மாவட்டம்!
மொத்தத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டம் இந்த தென்காசி மாவட்டம்.
அது மட்டுமல்ல, வீரத்தின் விளைநிலமாக இருக்கும் பூலித்தேவன் மண் இது! இந்திய விடுதலைக்காகக் குரல் கொடுத்து, 1755-ஆம் ஆண்டே ஆங்கிலேயர்க்கு வரி கட்ட மறுத்த பூலித்தேவன் மண் இந்த மண்.
1998-ஆம் ஆண்டு நெற்கட்டான்செவலில் மாவீரன் பூலித்தேவனுக்கு மணிமண்டபமும் சிலையும் அமைத்துக் கொடுத்தவர் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.
மாவீரன் பூலித்தேவனின் படைத்தளபதியாக இருந்த மாவீரன் ஒண்டி வீரனின் மண் இந்த மண். அந்த ஒண்டி வீரனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ததும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்தான்! அவர் ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோது.
வடக்கே காசி இருப்பதைப் போல தெற்கேயும் ஒரு காசியை உருவாக்க வேண்டும் என்று மன்னன் பராக்கிரம பாண்டியன் நினைத்து உருவாக்கியதுதான் தென்காசி கோபுரம்! அரிகேசரி பராக்கிரம பாண்டியன், இங்கிருந்துதான் இலங்கைக்குப் படையெடுத்துச் சென்றான்.
500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தென்காசி கோயில் ராஜகோபுரத்தை மீண்டும் புதுப்பிக்க 1960-ஆம் ஆண்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது திருப்பணிக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டவர்தான் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவராக இருந்த பி.டி.ராஜன் அவர்கள்.
பின்னர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களது ஆட்சிக் காலத்தில் 'தினத்தந்தி' அதிபர் பெருமதிப்பிற்குரிய பா. சிவந்தி ஆதித்தன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. 25.6.1990 அன்று கழக ஆட்சிக் காலத்தில் - அன்றைய அறநிலையத் துறை அமைச்சராக இருந்த மரியாதைக்குரிய 'தினகரன்' கே.பி.கந்தசாமி அவர்கள் தலைமையில் ராஜகோபுர குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இப்படி, இயற்கைக்கும், வீரத்துக்கும், ஆன்மீகத்துக்கும் வேளாண்மைக்கும், விளைச்சலுக்கும் புகழ்பெற்ற தென்காசிக்கு வந்திருப்பதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன், பெருமைப்படுகிறேன், பூரிப்படைகிறேன். இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக தன்னுடைய கடமையை ஆற்றிக்கொண்டிருக்கின்ற நம்முடைய அருமைச் சகோதரர் மாண்புமிகு கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்களை நான் மனதார பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன்!
விருதுநகரைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவரது உழைப்பின் விருதாக தென்காசி மாவட்டமும் இணைத்து பொறுப்பில் தரப்பட்டுள்ளது. இதையும் தனது சொந்த மாவட்டமாக நினைத்து, இரட்டைக் குதிரையில் திறம்பட சவாரி செய்து, வெற்றிக் கொடி நாட்டக்கூடியவராக அவர் செயல்பட்டு வருகிறார்.
பிரமாண்டமாக, நேர்த்தியாக உழைப்பவர் மட்டுமல்ல – இட்ட பணியை ஈடு இணையில்லாமல் செய்து காட்டக் கூடியவர். சில வாரங்களுக்கு முன்னாலும் – சில நாட்களுக்கு முன்னாலும் அவர் உடல் நலிவுற்றார். ஆனால், உடல் நலிவுற்றிருந்தாலும், தென்காசி விழாவை மிகச்சிறப்பாக நடத்திக் காட்டவேண்டும் என்று முடிவு செய்து இங்கேயே வந்து தங்கி தனது உடல்நிலையை பற்றி கூட பொருட்படுத்தாமல் இந்த மாவட்ட மக்களுடைய நன்மையை மட்டுமே மனதில் வைத்து நம்முடைய அமைச்சர் ராமச்சந்திரன் அவர்கள் இந்த கடமையை நிறைவேற்றித் தந்திருக்கிறார்.
எனவே, அவருக்கு என்னுடைய இதயபூர்வமான வாழ்த்துகளை அரசின் சார்பில், இந்த மாவட்டத்தினுடைய மக்களின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, அவருக்கு துணைநின்று பணியாற்றியிருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், தென்காசி மாவட்டத்தினுடைய அரசு அதிகாரிகள், அலுவலர்கள் உள்ளிட்ட அத்தனை பேருக்கும் நான் என்னுடைய பாராட்டுக்களை அரசின் சார்பில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
இது என்ன அரசு விழாவா? அல்லது எங்கள் கட்சியினுடைய மாநில மாநாடா? என்று சந்தேகப்படக்கூடிய அளவிற்கு பெரிய எழுச்சி. மிகப்பெரிய அளவில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றால், அப்படி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கக்கூடிய இந்த நிகழ்ச்சியில், இங்கே வழங்கப்பட இருக்கக்கூடிய தொகையும் மிகப் பெரியதாக அமைந்திருக்கிறது.
22 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 57 முடிவுற்ற திட்டப்பணிகளை மக்களுடைய பயன்பாட்டிற்காக நான் துவக்கி வைத்திருக்கிறேன்.
34 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 23 புதிய பணிகளுக்கு இன்றைக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.
1 லட்சத்து 3 ஆயிரத்து 508 பேர் பயனடையும் வகையில் - 182 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் இங்கு வழங்கப்படவிருக்கிறது.
ஒரே ஒரு விழாவில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைய இருக்கின்றன என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு நான் தெரிவிக்கிறேன். கழக ஆட்சி மலர்ந்து பத்தொன்பது மாதங்கள் ஆகி இருக்கிறது. இந்த 19 மாத காலங்ளில் பல நூறு சாதனைகளை தமிழ்நாட்டு மக்களுக்கு நாங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம் என்பதை சாதாரணமாக இல்லை, நெஞ்சை நிமிர்த்தி நான் உங்கள் முன்னால் தெரிவிக்கிறேன்.
இவை வெறும் வாய் வார்த்தைகளால் அல்ல. பயனடைந்த மக்கள் – இந்த அரசைப் பல்லாண்டு காலம் வாழ்க, வாழ்க என்று வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். தென்காசி மாவட்டத்தில் பயனடைந்தவர்கள் எண்ணிக்கையை மட்டும் நான் சொல்கிறேன்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் 11 ஆயிரத்து 494 மனுக்கள் பெறப்பட்டு 11 ஆயிரத்து 490 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவிக் குழுக்களின் 27 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
486 நபருக்கு 24 லட்சத்து 23 ஆயிரத்து 530 ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின்கீழ் 41 ஆயிரத்து 980 மாணவ மாணவியர்கள் பயனடைந்திருக்கிறார்கள்.
மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்து பயணத்திட்டத்தின் கீழ் 80 லட்சம் முறை கட்டணமில்லாமல் பேருந்து பயணம் மேற்கொண்டு மகளிர் பயனடைந்திருக்கிறார்கள்.
2 ஆயிரத்து 935 திருநங்கைகள் பயனடைந்துள்ளார்கள்.
50 ஆயிரத்து 361 மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.
73 ஆயிரத்து 491 பயனாளிகளுக்கு 436 கோடி ரூபாய் அளவிற்கு பயிர் கடன் மற்றும் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
உழவர்களுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின்கீழ்
13 கோடி ரூபாய் செலவில் 1,823 பயனாளிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் 19 ஆயிரத்து 599 பேர் பயனடைந்துள்ளனர்.
கொரோனா சிறப்பு நிவாரண நிதியாக 4 ஆயிரம் ரூபாயை 4 லட்சத்து 41 ஆயிரத்து 989 பேர் பெற்றுள்ளார்கள்.
50 ஆயிரம் பனைவிதைகள் மற்றும் பனங்கன்றுகள் 1 லட்சத்து 95 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பீட்டில் நடப்பட்டுள்ளது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் புதிதாக ஓய்வூதிய ஆணைகள் வழங்கப்பட்டிருக்கிறது.
1,701 குடும்பங்களுக்கு வேளாண் கருவித் தொகுப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது.
150 திருக்கோயில்களில் பணிபுரியும் 84 அர்ச்சகர்கள், 6 பட்டாச்சாரியார்கள்,
60 பூசாரிகளுக்கு 1000 ரூபாய் மாத ஊக்கத்தொகையாக மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
சங்கரன்கோயிலில் புதிய வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் 2 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
- இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னதாக, தென்காசி மாவட்ட மக்களின் கோரிக்கைகள் சில என்னிடம் தெரிவிக்கப்பட்டன. உடனடியாக அதிகாரிகளை அழைத்து நான் பேசினேன். கலந்துரையாடினேன். அவைகள் சிலவற்றை நிறைவேற்றித் தருவதற்கான அறிவிப்பை இந்த மேடையிலேயே அறிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
தென்காசி மாவட்டத்தின் முக்கிய இணைப்பு சாலையாக விளங்கக்கூடிய புளியங்குடி சங்கரன்கோயில் நெடுஞ்சாலை மேம்படுத்தப்படும்.
புதிதாக அமைந்துள்ள தென்காசி மாவட்டத்திற்கு புதிய மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்கப்படும்.
துரைசாமிபுரம் மக்களுடைய நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பனையூர் கூடலூர் - துரைசிங்கபுரம் சாலை மேம்படுத்தப்படும்.
தென்காசி குற்றாலம் இடையே இருக்கக்கூடிய இலாத்தூர் பெரிய ஏரி ஒரு முக்கிய மீன்பிடி மற்றும் சுற்றுலாத்தலமாக 10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
சிவகிரி மற்றும் ஆலங்குளம் பகுதி விவசாயிகளினுடைய கோரிக்கையை ஏற்று அவர்கள் பயன்பெறக்ககூடிய வகையில் ஆலங்குளத்தில் புதிய வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்கப்படும்.
அதேபோல, இங்கே சட்டமன்ற உறுப்பினர் குறிப்பிட்டவாறு, ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள இராமநதி, ஜம்புநதி, திட்டப்பணிகளுக்கு கடந்த ஆட்சி காலத்தில் நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு முறையான அனுமதி பெறப்படாததால், திட்டப்பணிகள் துவக்கப்படாமலேயே இருந்தது. ஆனால் நமது ஆட்சி அமைந்த பிறகு இதற்கான முறையான வனத்துறை அனுமதிகள் பெறப்பட்டு, தற்போது இத்திட்டம் ஒன்றிய வனத்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியை பெறப்பட்டவுடன், இப்பணிகள் விரைவில் துவக்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தகைய நலத்திட்ட சாதனைகளின் அரசுதான் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக அரசு.
தென்காசி அலங்கார் நகரைச் சேர்ந்த மாணவி சண்முகவள்ளி என்பவர் 2020-இல் நடைபெற்ற குடிமைப் பணித் தேர்வில் இந்திய அளவில் 108-வது இடத்தையும், தமிழக அளவில் 3-வது இடத்தையும், பெண்கள் பிரிவில் முதலிடம் பெற்று இந்த மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு இந்த விழாவின் மூலமாக முதலமைச்சர் என்கிற முறையில் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல், வினைதீர்த்த நாடார்பட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளியில்,
3-ஆம் வகுப்பு படிக்கக்கூடிய ஆராதனா எனும் குழந்தை, சமீபத்தில், எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அந்தக் கடிதத்தில், தான் படிக்கும் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டித்தர வேண்டும் என்று கேட்டிருந்தார். பாருங்கள் ஒரு குழந்தை எழுதியிருக்கிறது. அந்தக் கடிதத்தை படித்ததும் எனக்குப் பெருமையாக இருந்தது. எத்தகைய நம்பிக்கையை அவர் என் மீது வைத்திருந்தால் இந்தக் கடிதம் எழுதி இருப்பார் என நான் நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன். குழந்தை ஆராதனாவின் கோரிக்கை ஏற்கப்பட்டது என்பதை இந்தக் கூட்டத்தில் இப்போது நான் அறிவிக்கிறேன்.
அதற்கு முதற்கட்டமாக, 35 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் இரண்டு வகுப்பறைகள் கட்டப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வளவு சிறு வயதிலேயே நம்பிக்கையோடு எனக்குக் கடிதம் எழுதிய அந்த குழந்தை ஆராதனா, அதே பள்ளியில் படித்து எதிர்காலத்தில் சிறப்பான நிலையை அடைய வேண்டும் என்று மீண்டும் அந்த சிறுமியை, அந்த குழந்தையை நான் வாழ்த்துகிறேன்.
இந்த மாவட்ட மக்களினுடைய நீண்டநாள் கோரிக்கை, தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் வட்டம் மேலநீலித நல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு தனி அலுவலரை நியமித்த அரசு தான் தமிழக அரசு, தி.மு.க அரசு.
1969-ஆம் ஆண்டில் முக்குலத்தோர் கல்வி மேம்பாட்டிற்காக பி.கே.மூக்கையாத் தேவர் முயற்சியால் தென் மாவட்டத்தில் மூன்று கல்லூரிகள் தொடங்கப்பட்டது. முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா, நம்முடைய தலைவர் கலைஞர் ஆகியோர் பல்வேறு உதவிகளை இதற்காகச் செய்தனர். இதில் ஒரு கல்லூரி மேலநீலித நல்லூரில் தொடங்கப்பட்டது.
அதை நிர்வகிக்க, தேவர் எஜூகேஷனல் சொசைட்டி - திருநெல்வேலி மாவட்டம் என்ற சங்கம் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவராக இருந்த திரு.செல்லப்பாண்டியன் அவர்கள் தலைமையில் அது உருவாக்கப்பட்டது. முதலமைச்சர் கலைஞர் அவர்கள்தான் அன்றைக்கு அதற்கு அனுமதி வழங்கினார். இந்த வட்டாரத்தின் கல்வி வளர்ச்சிக்காக 44.94 ஏக்கர் அரசு நிலத்தை முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் வழங்கினார்.
ஆனால், காலப்போக்கில், சிலரால் இதன் நோக்கம் சிதைக்கப்பட்டு தனிநபர்களுடைய ஆக்கிரமிப்புக்கு ஆளானது. இதனை மீட்பதற்கு முன்னாள் மாணவர்கள் பலரும் போராடி வந்தார்கள். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மதுரை பொதுக்கூட்டத்தில் நான் பேசுகிறபோது சொன்னேன், 'கழக அரசு அமைந்ததும் தேவர் கல்லூரி தனிநபர் பிடியில் இருந்து மீட்டு அதற்கு ஒரு விடிவுகாலத்தை ஏற்படுத்துவேன் என்று உறுதிமொழி அளித்தேன். 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியிலும் கோரிக்கை மனுக்கள் என்னிடத்தில் தரப்பட்டன.
ஆட்சி அமைந்ததும், தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்காற்றுச் சட்டப்படி, அரசாணை எண் 146-இன்கீழ் கல்லூரியை நிர்வகிக்க தனி அலுவலரை நியமித்திருக்கிறோம். என்ன நோக்கத்துக்காக மூக்கையாத்தேவர் அவர்களும், செல்லப்பாண்டியன் அவர்களும் இதனை உருவாக்கினார்களோ, அதனடிப்படையில் கல்லூரியை வளர்த்து, இந்தப் பகுதி மக்கள் பயனடையக்ககூடிய வகையில் அதை நடத்திக் காட்டுவோம் என்று அந்த உறுதியை இந்த மேடையில் நான் கூறுகிறேன்.
இப்படி ஒவ்வொருவருடைய தேவைகளையும் கேட்டுக் கேட்டு- ஒவ்வொரு பகுதியின் பிரச்சினையையும் அறிந்து, அறிந்து நிறைவேற்றித் தரும் அரசாக நம்முடைய அரசு செயல்பட்டு வருகிறது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், “திமுக ஆட்சிக்கு வந்ததும் எந்த சாதனையையும் செய்யவில்லை - எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
சில மாதங்கள் வரைக்கும் என்ன சொன்னார் என்றால், விடுபட்ட சில வாக்குறுதிகளை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு “இதை நிறைவேற்றவில்லை, அதை நிறைவேற்றவில்லை” என்று சொல்லிவிட்டு இருந்தார், சொல்லிக்கொண்டு இருந்தார் என்று சொல்லக்கூடாது, புலம்பிக் கொண்டிருந்தார். அதையும் நாம் நிறைவேற்றியதும் - என்ன சொல்லுவது என்று தெரியாமல் எதையுமே நிறைவேற்றவில்லை அப்படி என்று ஒரே வரியில் சொல்லி இருக்கிறார்.
பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டுவிட்டதா நினைக்குமாம். அதுபோல எதிர்க்கட்சித் தலைவர் நினைத்துக் கொண்டு இருக்கிறார். இவர் வேண்டுமென்றால் கண்ணை மூடிக்கொண்டு இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் 19 மாதத்துக்கு முன்பே விழித்துவிட்டார்கள். இருண்ட காலத்தை முடித்து வைத்து, உதயசூரியனின் காலத்தை உருவாக்கிவிட்டார்கள். எனவே, மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் எரிச்சல் வார்த்தைகளுக்கெல்லாம் நான் விரிவாக பதில் சொல்ல விரும்பவில்லை.
நாங்கள் சொன்ன வாக்குறுதிகள் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கே நேரம் கிடைக்கவில்லை. இதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்லிக் கொண்டிருப்போம். ஏதோ அரசியலில் தாங்களும் இருக்கிறோம் என்று காட்டுவதற்காக நம்மை பற்றி விமர்சிக்கிறார்கள். ஆனால் எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு நாங்கள் உண்மையாக இருக்கிறோம். உணர்வுப் பூர்வமாக உழைக்கிறோம். தமிழ்நாட்டை இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக ஆக்குவது ஒன்றுதான் என்னுடைய குறிக்கோள்.
கடந்த ஆண்டு இந்தியா டுடே-யில் ஓராண்டு நிறைவேற்றப்பட்ட பிறகு இந்தியாவில் இருக்கக்கூடிய முதலமைச்சர் வரிசைப்படுத்திய நேரத்தில் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் முதலிடம் என்று அவர்கள் கணக்கெடுத்து அறிவித்தார்கள். அப்போது நிருபர்கள் கேட்டபோது நான் சொன்னேன், எனக்கு இது பெருமையல்ல, என்னைப் பொறுத்தவரையில், நான் முதல்வனாக பொறுப்பேற்று முதலிடத்திற்கு வந்திருப்பதைவிட நான் முதல்வனாக பொறுப்பேற்று இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்திற்கு வரவேண்டும் இதுதான் என்னுடைய இலட்சியம் என்று நான் சொன்னேன். அதுதான் என்னுடைய குறிக்கோள். அதைதான் நாங்கள் எதிர்நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம்.
தொழில் வளர்ச்சியா?
சிறுதொழில் மேம்பாடா?
கல்வியா?
சுகாதாரமா?
உள்கட்டமைப்புப் பணிகளா?
மகளிர் மேம்பாடா?
ஒடுக்கப்பட்டவர்களுடைய மக்களின் மேம்பாடா?
இளைஞர் நலனா?
விளையாட்டா?
அனைத்திலும் தமிழகம் முன்னேற்றம் அடைய வேண்டும். அதற்கான திட்டங்களை தீட்டி வருவது மட்டுமல்ல - அந்தத் திட்டங்களால் தமிழகம் உயர்ந்து வருவதை கண்ணுக்கு முன்னால் நான் பார்க்கிறேன். நாள்தோறும் எங்களுக்கு கிடைக்கும் செய்திகள் இதனை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசாங்கத்தின் சார்பில் சில நேரங்களில் வெளியாகக்கூடிய புள்ளிவிவரங்களை பார்த்தீர்கள் என்றால், தமிழ்நாட்டின் வளர்ச்சி கண்ணுக்குத் தெரியும். சில தன்னார்வ அமைப்புகள் வெளியிடும் அளவீடுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சி தெரியும். ஆங்கில ஊடகங்கள் வெளியிடும் கட்டுரைகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை பெருமைப்பட எழுதுகிறார்கள்.
இவை அனைத்தும் தமிழ்நாடு உயர்ந்து வருகிறது - எல்லாத் துறையிலும் உயர்ந்து வருகிறது - எல்லாப் பிரிவினரையும் உயர்த்தி வருகிறது என்பதற்கான திட்டவட்டமான சான்றுகளாக அமைந்திருக்கிறது! இவை அனைத்துக்கும் மேலாக, பயனடைந்த மக்களுடைய மனங்களில் உருவாகி வரும் மகிழ்ச்சியை நான் பார்க்கிறேன். தென்காசியிலிருந்து இந்த இடத்திற்கு வர எவ்வளவு நேரம் ஆகும்? மிஞ்சி, மிஞ்சி போனால் ஒரு 15 நிமிடத்திற்கு வந்து சேர்ந்துவிடலாம்.
ஆனால் இங்கு வருவதற்கு நாங்கள் ஒன்றரை மணி நேரம் ஆகியிருக்கிறது. என்ன காரணம்? வருகிற வழியெல்லாம் சாலையின் இருபுறங்களிலும், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், இருமருங்கிலும் நின்றுகொண்டு என்னை வரவேற்றது மட்டுமல்ல, வாழ்த்தியது மட்டுமல்ல, இந்த ஆட்சி தான் தொடரவேண்டும், இந்த ஆட்சிதான் தொடரவேண்டும் என்று அவர்கள் என்னை ஊக்கப்படுத்திய அந்த காட்சியை நான் பார்த்தேன். இதுதான் நல்லாட்சியினுடைய அடையாளம்!
திட்டமிடுவது - திட்டமிட்டதை செயல்படுத்திக் காட்டுவது! அதை நிறைவேற்றுவதுதான் என்னுடைய நாள்தோறப் பணியாக இருக்கிறது! திட்டத்தை அறிவித்தோம் - நிதியை ஒதுக்கினோம்- அத்தோடு கடமை முடிந்துவிட்டது என்று இல்லாமல், ஒவ்வொரு நாளும் நான் அதைக் கண்காணிக்கிறேன். உரிய காலத்தில் அனைத்துத் திட்டங்களையும் முடிப்பது தான் என்னுடைய இலக்கு என்று நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன்.
ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணத்தை நடத்தி அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று பல பணிகளை முடித்துக் கொண்டு வருகிறேன். திறப்பு விழா நிகழ்ச்சி, அடிக்கல் நாட்டு விழா, இதையெல்லாம் ஒவ்வொரு மாவட்டத்தில் முடித்துக் கொண்டு வருகிறேன். அடுத்தகட்டமாக, மாவட்டவாரியாக, இந்தத் திட்டப்பணிகள் குறித்து குறிப்பிட்ட மாவட்டத்திற்கு நான் வந்து ஆய்வு நடத்தத் திட்டமிருக்கிறேன்.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அறிவிக்கப்பட்ட பணிகள் – நடைபெறுவதை நானே பார்த்து – அந்த பணிகளை முடுக்கிவிட இருக்கிறேன். அமைச்சர்களை உடன் வைத்துக்கொண்டு - அதிகாரிகள் - அலுவலர்களை நேரில் அழைத்துப் பேச இருக்கிறேன். நாங்கள் என்ன நோக்கத்திற்காக இந்தத் திட்டங்களைத் தீட்டித் தருகிறோமோ அதே நோக்கம் கடைநிலை அலுவலர்கள் வரை இருந்தால்தான் அந்தத் திட்டத்தின் நோக்கம் முழுமை அடையும்.
மக்களிடம் செல்! மக்களோடு வாழ்!
மக்களிடம் இருந்து கற்றுக் கொள்!
என்று சொன்னார் பேரறிஞர் அண்ணா.
அப்படி மக்களுக்கான அரசாக நம்முடைய அரசு செயல்படும். இங்கே அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டவாறு, திருநெல்வேலியிலிருந்து இந்த மாவட்டம் பிரிந்திருந்தாலும், இந்த தென்காசிக்கு தேவையான அனைத்துத் திட்டங்களையும், நான் நிறைவேற்றித் தருவேன் அதில் யாருக்கும் எள்ளளவு சந்தேகம் இருக்க வேண்டிய அவசியமில்லை. எடுத்துச்சொன்ன உறுதிமொழிகள், கேட்டிருக்கக்கூடிய கோரிக்கைகள், அதில் எடுத்துச்சொன்ன பல்வேறு பிரச்சனைகள் இவையெல்லாம் ஏற்கனவே வராமலில்லை. வந்திருக்கிறது.
இருந்தாலும், நினைவுபடுத்தியிருக்கிறார்கள், சட்டமன்றத்தில் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். எனவே, அதற்குரிய நடவடிக்கை நிச்சயமாக இந்த அரசு எடுக்கும், அதை நிறைவேற்றித் தருவோம், தென்காசி மாவட்டத்தினுடைய முன்னேற்றத்திற்கு நிச்சயமாக இந்த அரசு துணை நிற்கும், நான் அதற்கு துணை நிற்பேன் என்ற அந்த உறுதியை மாத்திரம் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, உங்கள் அத்தனை பேருக்கும் மீண்டும் ஒரு முறை என்னுடைய இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்து விடை பெறுகிறேன்!” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!