Tamilnadu
“இந்தியா அளித்துள்ள உத்தரவாதங்களைக் காப்பாற்ற தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும்” : முதலமைச்சர் உரை!
ஜி-20 மாநாடு தொடர்பாக புதுதில்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார்.
நாட்டிலேயே முன்னோடியாக காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு தமிழ்நாடு உருவாக்கியுள்ள 'தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம்' போன்ற முக்கிய கருத்துக்களை முன்வைத்து உரையாற்றினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :- ”2023-ஆம் ஆண்டுக்கான ஜி-20 தலைமையை இந்தியா ஏற்றிருக்கும் வேளையில் நமது மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு முதற்கண் எனது பாராட்டுகள். இது நம் நாட்டுக்கு மிகவும் பெருமை தரக்கூடிய ஒன்றாகும்.
உலக அளவில் பல்வேறு நாடுகளிடையே புரிதலை மேம்படுத்துவதில் நாம் மிக முக்கியப் பங்கை ஆற்ற வேண்டியுள்ளது. ஜி-20 நாடுகள் மட்டுமல்லாமல் அனைத்து உலக நாடுகளாலும் இந்தியா கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
‘அமைதி, அகிம்சை, நல்லிணக்கம், சமத்துவம், சமநீதி' ஆகிய உயர் விழுமியங்களை உலக அளவில் கொண்டு செல்ல நமது பிரதமர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இந்தியா ஜி-20 தலைமையை ஏற்றதைத் தொடர்ந்து நடத்தப்படவுள்ள கருத்தரங்குகளுக்குத் தமிழ்நாடு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என நான் உறுதியளிக்கிறேன்.
காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்காக இந்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்குகளை எட்டுவதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இயற்கைப் பாதுகாப்பு இயக்கங்களை நிர்வகிக்கவும், காலநிலை மாற்றத்தைக் கையாளவும் 'தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம்' என்ற பெயரில் சிறப்பு நோக்க நிறுவனத்தை (SPV) உருவாக்கியுள்ளோம்.
உலக அளவில் இந்தியா அளித்துள்ள உத்தரவாதங்களைக் காப்பாற்றுவதற்கு அனைத்து வகையிலும் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும். இந்தியாவின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றுவோம். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் வாய்ப்புக்காக நமது மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !