Tamilnadu

போலி பாஸ்போர்ட் மூலம் பங்களாதேஷ் செல்ல முயன்ற பெண்.. விசாரணையில் பகீர் : சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு!

சென்னையில் இருந்து வங்கதேச தலைநகர் டாக்கா செல்லும் US பங்களா ஏர்லைன்ஸ் என்ற பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, நேற்று மாலை புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி கொண்டு இருந்தனர்.

அப்போது இந்திய பாஸ்போர்ட்டுடன், ரீனா பேகம் (37) என்ற பெண், சுற்றுலாப் பயணிகள் விசாவில் டாக்கா செல்வதற்காக வந்தார். ஆனால் குடியுரிமை அதிகாரிகளுக்கு அந்த பயணியின் பாஸ்போர்ட் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து பாஸ்போர்ட்டை சிறப்பு கருவி மூலம் பரிசோதித்த போது, அது போலியான பாஸ்போர்ட் என்று தெரியவந்தது.

இதை அடுத்து ரீனா பேகம் பயணத்தை அதிகாரிகள் ரத்து செய்தனர். அதோடு அவரை நிறுத்தி வைத்து தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது அவர் வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்கம் மாநிலம் வழியாக, இந்தியாவுக்கு ஊடுருவி, இந்தியாவில் போலி பாஸ்போர்ட் தயார் பண்ணி கொடுக்கும் ஏஜென்ட்கள் மூலம், பணம் கொடுத்து இந்த போலி பாஸ்போர்ட்டை வாங்கியதாக தெரிய வந்தது.

மேலும் அவர் இந்த போலி பாஸ்போர்ட் எதற்காக வாங்கினார்? இந்த பாஸ்போர்ட்டை வைத்து எங்கெங்கு சென்றார்? இங்கு சென்னைக்கு எதற்கு வந்தார்? இங்கு எங்கு தங்கியிருந்தார்? என்று தீவிர விசாரணை நடத்தினர். ஆனால் அவர் அந்த விசாரணைக்கு சரிவர பதில் அளிக்கவில்லை. இதை அடுத்து க்யூப் பிரிவு போலிஸார், மத்திய உளவு பிரிவு போலிஸார் ஆகியோரும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதன் பின்பு அவரை மேல் விசாரணைக்காக சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலிஸில் ஒப்படைக்க முடிவு செய்தனர். இதை அடுத்து குடியுரிமை அதிகாரிகள், மத்திய குற்றப்பிரிவு போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் இன்று அதிகாலை சென்னை விமான நிலையம் வந்து, வங்கதேச பெண் பயணி ரீனா பேகத்தை கைது செய்து, சென்னையில் உள்ள அவர்களுடைய அலுவலகத்துக்கு கொண்டு சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் இதை போல் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி போலி பாஸ்போர்ட் மூலம், மலேசியாவில் இருந்து சென்னை வந்த போது, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இதை போல் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், தொடர்ந்து போலி பாஸ்போர்ட்டில் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்படுவது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சென்னைக்கு புதிய Airport.. எங்கே இருக்கிறது பரந்தூர் : என்னென்ன புதிய அம்சங்கள் அங்கே ?