Tamilnadu

உங்க வீட்ல அக்கா,தம்பி இப்படி தான் பேசுவீர்களா ? -பாஜகவை குறிப்பிட்டு முகம் சுழிக்கும் இணையவாசிகள் !

என்னதான் மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தாலும், பல்வேறு மாநிலங்களில் எம்.எல்.ஏக்களை வாங்கி பாஜக ஆட்சியில் இருந்தாலும், தமிழ்நாட்டில் அக்கட்சியால் தலைநிமிர முடியாத நிலையே இருக்கிறது. இதன் காரணாமாக திரை பிரபலங்களை வைத்து தமிழ்நாட்டில் கட்சியை பலப்படுத்த பாஜக கடந்த சில ஆண்டுகளாகவே நடவடிக்கை எடுத்துவருகிறது.

அந்த வகையில் நடிகை காயத்ரி ரகுராம் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் பாஜகவில் இணைந்தார். இவர் தெரிவிக்கும் கருத்துக்கள் அவ்வப்போது சர்ச்சையை கிளப்பி வந்தார். அதோடு சமீபத்தில் யூடியூப் பிரபலமும் மருத்துவருமான டெய்சி, சூர்யா போன்றோரும் பாஜகவில் இணைந்தனர்.

இதனிடையே சிறுபான்மை அணி தலைவராக நியமிக்கப்பட்ட டெய்சி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் அணி செயலாளர் சூர்யா ஆகியோர் இடையேயான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிலும் சூர்யா ஆபாசமாக டெய்சியை விமர்சித்த ஆடியோ காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் பாஜகவினர் அமைதியாக இருந்த சூழலில், பெண்களை குறிவைத்து தவறாக பேசினால் நாக்கு வெட்டப்படும் என உறுதியளித்துள்ளார். "இப்படிப்பட்ட சமயங்களில் சொந்த கட்சிப் பெண்களை ஏன் தாக்க வேண்டும்? குரல் அச்சுறுத்தலைக் கேட்டு இதயம் உடைந்தது. டெய்சிக்கு வலிமை. என் ஆறுதல் மற்றும் ஆதரவு" என்று கூறியிருந்தார்.

இந்த சூழலில் தமிழக பாஜகவிலிருந்து காயத்ரி ரகுராம் 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டார். அதேநேரம் ஆபாசமாக பேசிய தனது ஆதரவாளரான சூர்யாவை கட்சியிலிருந்து நீக்காமல் 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று அண்ணாமலை கூறியது விமர்சனத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சர்ச்சையில் சிக்கிய டெய்சி மற்றும் சூர்யா ஆகியோர் கூட்டாக இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய டெய்சி "சூர்யா தனக்கு தம்பி போலத்தான் எனவும், இருவரும் பரஸ்பரம் சுமூகமாக பிரச்சனையை முடித்துக் கொள்வது என முடிவெடுத்துள்ளதாகவும், எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக செய்தி சமூகவலைத்தளங்களில் வெளியான நிலையில், பாஜகவினர் வீட்டில் அக்கா, தம்பி இப்படித்தான் பேசுவார்களா என்றும், பாஜகவில் உறவுமுறைகளை இப்படித்தான் பார்க்கிறதா என்றும் விமர்சித்து வருகின்றனர். அதோடு இந்த விவகாரத்தில் காயத்ரி ரகுராமையும் நினைத்து சமூகவலைத்தளத்தில் மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

Also Read: கேரளாவில் கொள்ளையடித்து தப்பித்த கும்பல்.. எல்லையில் மடக்கி பிடித்த தமிழக போலிஸ்.. விறுவிறு சம்பவம் !