Tamilnadu
“அதிகாரிகள் இந்த 5 கட்டளைகளை நினைவில் வையுங்கள்” - கண்காணிப்புக்குழுக் கூட்டத்தில் முதல்வர் அறிவுறுத்தல்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (21.11.2022) தலைமைச் செயலகத்தில், மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் (DISHA) குழுவின் மாநில அளவிலான இரண்டாவது ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
ஒன்றிய அரசின் பங்களிப்புடன் 15 துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் 41 திட்டங்களை கண்காணிக்க மாநில அளவில் வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA குழு) ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், துணைத் தலைவராக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களும் உள்ளனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், ஒன்றிய அரசின் பங்களிப்புடன் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்களான பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டம், தேசிய நலவாழ்வு குழுமம் (National Health Mission), ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் அமலாக்கம் மற்றும் பிரதம மந்திரி முன்னோடி கிராமத் திட்டம் ஆகிய திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
முதலமைச்சர் இக்கூட்டத்தில், பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் பணிகளை விரைவுபடுத்தி குறித்த காலத்திற்குள் முடித்திட வேண்டும் எனவும், திட்ட செயல்பாட்டில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம் பெறும் வகையில் செயல்பட வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த கூடுதல் நிதியை ஒன்றிய அரசிடமிருந்து பெற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
மேலும், கண்காணிப்புக் குழு உறுப்பினர்களின் செயல்பாடுகள் ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் நிலையான வளர்ச்சியையும், சமூக நீதியையும், சமத்துவத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உருவாக்கிடும் வகையில் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மேலும் 5 முக்கிய கட்டளைகளை அறிவுறுத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :-
அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்துத் துறை வளர்ச்சி என்ற உன்னதமான நோக்கத்தோடு இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பொருளாதாரக் குறியீடுகளைக் கொண்டதாக மட்டும் வளர்ச்சி என்பது தீர்மானிக்கப்படாமல், மக்களின் வாழ்க்கைத் தரம், மகிழ்ச்சி ஆகியவற்றை அளவீடாகக் கொண்டதாக தீர்மானிக்க வேண்டும் என்பதே நமது அரசினுடைய எண்ணம்!
என்னைப் பொறுத்தவரையில் இந்த நோக்கத்தில் இம்மியளவும் மாறாமல் மேல் நோக்கிய பாய்ச்சலில் அரசின் எண்ணமானது நிறைவேறி வருகிறது. இதில் மிக முக்கியமானது கிராமப்புற வளர்ச்சி.
கிராமப்புறப் பிரச்சினைகளை மைக்ரோ அளவில் கவனிக்க வேண்டும் என்றும், அதற்கு மேக்ரோ அளவிலான நன்மைகளைச் செய்து தர வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறேன். அந்த வகையில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கட்டமைப்பு வசதிகளில் சிறப்புக் கவனம் செலுத்தும் நோக்கோடு இந்த ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு, நம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு, குறிப்பாக ஊரகப் பகுதிகளின் வளர்ச்சிக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்காக வருகை புரிந்திருக்கக்கூடிய நாம் அனைவரும் இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கடந்த மே 18-ஆம் நாள் இக்குழுவினுடைய முதல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இன்று நடப்பது இரண்டாவது ஆலோசனைக் கூட்டம். இந்தக் கூட்டத்தில் ஐந்து முக்கிய குறிக்கோள்கள் குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
1. நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதியினுடைய மேம்பாட்டுத் திட்டம்:
நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஒவ்வொரு ஆண்டும் தொகுதிக்காக ஒதுக்கப்படும் ரூ.5 கோடி நிதி மூலமாக பல்வேறு பணிகள் ஊரகப் பகுதியில் நிறைவேற்றப்படுகிறது.
2019-20-ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் 3,471 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, இதுவரை 3,043 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள 428 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளதாக துறை அறிக்கை தெரிவிக்கின்றது.
அதேபோல், 2021-22-ஆம் ஆண்டினை பொறுத்தவரைக்கும், 1,015 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அவற்றில் 570 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. இந்த நிதியை முறையாகப் பயன்படுத்தி விரைந்து பணிகளை முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
2. தேசிய நல்வாழ்வுக் குழுமம் (National Health Mission)
பொதுமக்கள் அனைவருக்கும் சமமான, தரமான மருத்துவ சேவைகளை எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் வழங்க வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தினுடைய நோக்கம்.
தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம், நம்மைக் காக்கும் 48, மனம் – மனநலத்தை மேம்படுத்துதல், காசநோய் இறப்பில்லாத் திட்டம், நடமாடும் மருத்துவக் குழு, நடமாடும் மருத்துவமனை, இளம் சிறார் நல்வாழ்வைத் தேடி (ஊட்டச்சத்து கணக்கெடுப்பு), பச்சிளங் குழந்தைகளுக்கான அவசர கால மேலாண்மைப் பிரிவு, குழந்தைகள் தீவிர சிகிச்சை மற்றும் அவசர கால மேலாண்மை பிரிவுத் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
3. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்
மாநிலத்தில் உள்ள 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்களில் 27 இலட்சத்து, 774 குழந்தைகள், 7 இலட்சத்து 51 ஆயிரத்து 673 கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு இச்சேவை சிறப்பாக அளிக்கப்படுகிறது.
ஒன்று முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரம் ஒரு முட்டை வழங்கப்பட்டு வந்ததை, நவம்பர் 2022 முதல் மூன்று முட்டைகளாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
இக்குழந்தைகளில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்டுகள் (Fortified Biscuits) வழங்கவும் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் "ஊட்டச்சத்தை உறுதி செய்" எனும் திட்டம் கடந்த 21.05.2022 அன்று துவக்கி வைக்கப்பட்டு, ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மருத்துவக் குழுக்கள் மூலம் கண்டறியப்பட்டு அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ சேவை அளிக்கப்பட்டு வருகிறது.
4. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம்
தமிழ்நாட்டில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டு அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
மாநிலத்தின் அனைத்து குடும்பத்தினருக்கும் உணவு பாதுகாப்பினை உறுதி செய்திடும் பொருட்டு அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி மற்றும் கோதுமை விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், “பட்டினியின்மை”எனும் இலக்கு எய்தப்பட்டுள்ளது.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் முறையாக செயல்படுத்தப்படுவதை கண்காணிக்கும் பொருட்டு, ஒரு தலைவர் மற்றும் ஐந்து உறுப்பினர்களுடன் கூடிய மாநில உணவு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. நியாயவிலைக் கடைகளின் தரத்தையும் உயர்த்தி வருகிறோம்.
5. பிரதமரின் முன்னோடி கிராமத் திட்டம்
கிராம மக்கள் தொகையில் 50 விழுக்காட்டுக்கும் மேல் ஆதிதிராவிடர் வாழும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதி செய்ய இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஒரு கிராமத்திற்கு ரூபாய் 20 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 23 மாவட்டங்களைச் சேர்ந்த 1,357 வருவாய் கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் குடியிருப்புகளின் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஐந்து திட்டங்களின் செயல்பாடுகள் தொடர்பாக அனைவரும் விரிவாக ஆலோசனை செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு திட்டமுமே ஒவ்வொரு விதத்தில் முக்கியமானதுதான். இவை அனைத்தும் ஒட்டுமொத்தமான வளர்ச்சிக்கு ஒவ்வொரு விதத்தில் உதவி செய்பவை. எனவே கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டும்.
எந்தத் திட்டமாக இருந்தாலும் அதனுடைய செயல்பாடுகள் கடைகோடி மக்களையும் சென்றடையவேண்டும் என்பதே நமது நோக்கம்! உங்களின் செயல்பாடுகள் ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் நிலையான வளர்ச்சியையும், சமூக நீதியையும், சமத்துவத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியையும் உருவாக்கிடும் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.
இந்தக் கூட்டத்திற்கு வருகை புரிந்துள்ள உறுப்பினர்கள், தமிழகத்தினுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் தங்களின் மேலான ஆலோசனைகளையும், கருத்துகளையும் வழங்கிட வேண்டும் என்று எடுத்துக் கூறி என் தலைமையுரையை இந்த அளவோடு நிறைவு செய்கிறேன்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?