Tamilnadu

சர்ச்சை கருத்து.. மீண்டும் கிஷோர் கே சாமி கைது.. புதுச்சேரியில் சுற்றிவளைத்த போலிஸ்!

தமிழ்நாட்டில் சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் போதும் கூட சாலைகளில் வெள்ளம் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் பொதுமக்கள் பலரும் நன்றி தெரிவித்துப் பாராட்டி இருந்தனர்.

ஆனால், பா.ஜ.க ஆதரவாளரான கிஷோர் கே சாமி முதலமைச்சரின் பணிகளை விமர்சிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இது குறித்து சென்னை மாநகர காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவு வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகும்படி கிஷோர் கே சாமிக்குச் சம்மன் அனுப்பியுள்ளது.

ஆனால் அனுப்பிய சம்மனுக்கு ஆஜராகாத கிஷோர் கே சாமிக்கு முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், கிஷோர் கே சாமியின் முன்ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் அவதூறு பரப்பும் வகையில் முகநூலில் பதிவிட்ட வழக்கு தொடர்பாக இதுவரையிலும் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலிஸார் ஆஜராகக் கூறி சம்மன் அனுப்பியும் ஆஜராகாமலிருந்த கிஷோர் கே சாமியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் புதுச்சேரியில் அதிகாலையில் கைது செய்தனர்.

மேலும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் கைது செய்யப்பட்ட கிஷோர் கே சாமியைச் சென்னை கொண்டு வந்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி சமூக ஊடகங்களில் இதுவரை தவறாகக் கருத்துக்களைப் பதிவிட்டதாக 17 வழக்குகள் கிஷோர் கே சாமி மீது நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: யார்கிட்ட வந்து.. பா.ஜ.க தொண்டரை பந்தாடிய கால்பந்து ரசிகர்கள்: கேரளாவில் நடந்தது என்ன?