Tamilnadu
“கறவை மாடு வளர்ப்போருக்கு வட்டியில்லாத கடனுதவி..” : வேளாண்மைத்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு !
தருமபுரியில் 69-வது கூட்டுறவு வார விழா தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களையும், பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “கூட்டுறவே நாட்டுயர்வு என்ற உயர்ந்த கொள்கையை கொண்டு கூட்டுறவு சங்கங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. முன்னாள் முதலமைச்சர் கலைஞர் முதலமைச்சராக இருந்த போதுதான் விவசாயிகளுக்கு 6 மாதத்திற்குள் திருப்பி செலுத்தும் வகையிலான வட்டி இல்லாமல் கடன் கொடுக்கும் திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தினார்கள்.
விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பயனடைவதற்கு கூட்டுறவு சங்கங்கள் தான் பெரிதும் உதவியாக இருக்கின்றது. கால்நடை வளர்ப்பும் பிரதான தொழிலாக இருக்கின்றது. அதனைத் தொடர்ந்து தற்போது கறவை மாடு வளர்ப்போர் தங்களது கறவை மாடுகளை பராமரிப்பதற்கு, ஒரு கறவை மாட்டிற்கு ரூ.14,000 வரை வட்டியில்லாத கடனுதவி வழங்கப்படுகின்றது.
இத்தகைய கடனுதவி கறவை மாடு வளர்ப்போர் கூட்டுறவு சங்கங்களில் கால்நடை பராமரிப்புக்கான கடனுதவி பெற்று பயன்பெறலாம். முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் சுமார் ரூ.7000 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்தார்கள். அதேபோல தான் தமிழ்நாடு முதலமைச்சர் 5 பவுன் வரை நகை கடன் அறவே தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார்கள்.
அதன்படி, தமிழகம் முழுவதும் சுமார் ஐந்தாயிரம் கோடிக்கு மேல் 5 பவுன் வரையிலான நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அதேபோல் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன், மகளிர் குழுவினருக்கான கடன் ஏறத்தாழ இரண்டாயிரத்தி ஐநூறு கோடி அளவிற்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளும், ஏழை, எளியோர்களும், தொழிலாளர்களும் பயன்பெறும் வகையில் எளிதில் கடனுதவி கிடைப்பது கூட்டுறவு சங்கங்களில் மட்டும் தான். அவ்வாறு பெறுகின்ற கடனுதவிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பி செலுத்தினால், கூட்டுறவு வங்கிகளும் சிறப்பாக செயல்படும், கூட்டுறவாளர்களாக உள்ள மக்களுக்கும் மிகுந்த பயன் கிடைக்கும்.
எனவே, வாங்குகின்ற கடனை குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பி செலுத்த முன்வர வேண்டும். தனியார் நிதி நிறுவனங்களை நம்பி மக்கள் பணத்தை டெபாசிட் செய்யும் பொழுது, சில நிதி நிறுவனங்கள் ஏமாற்றி விடுகின்றன. இதனால் மக்கள் தங்கள் பணத்தை இழந்து ஏமாறுகின்றனர். இதை முற்றிலும் தவிர்க்க மக்கள் நம்பகத்தன்மை வாய்ந்த கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்களில் தங்கள் பணத்தை டெபாசிட் செய்யலாம். பணமும் பாதுகாப்பாக இருக்கும். தேவைக்கேற்றவாறு கடனுதவியும் பெற்றுக்கொள்ளலாம்” என தெரிவித்தார்
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!