Tamilnadu
“ஓய்வை உதறித் தள்ளி மக்களுக்கு உழைத்து, பாரதி கண்ட கண்ணனாக திகழ்கிறார் தமிழக முதல்வர்”: சிலந்தி பாராட்டு!
பாரதி கண்ட கண்ணனாக தமிழக முதல்வர்!
“இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்" - பாரதியார் கண்ணனை சேவகனாக பாவித்துப் பாடிய பாடல் வரிகள் இவை! இன்று தமிழ்நாட்டு மக்கள் தளபதியை முதல்வராகக் காணவில்லை; தங்களது சேவகராக எண்ணிடும் அளவு, அவரது அன்றாடச் செயல்பாடுகள் அனைத்தும் உள்ளன.
கொரோனா கொடுந்தொற்று உச்சத்தில் நின்று நாட்டு மக்களை உலுக்கிய நேரத்தில் பதவி ஏற்றார். ஏற்ற அடுத்த கணமே களத்திலே இறங்கினார். புயல்வேக மானது அவரது செயல்வேகம்! அமைச்சர்கள் முடுக்கப்பட்டனர், அதிகாரிகள் அசுரவேகத்தில் பணிபுரியத் தொடங்கினர், ஆக்சிஜன் தட்டுப்பாட்டை நீக்கிட அதிவேக நடவடிக்கைகள், அதுவரை முடங்கிக் கிடந்த அரசு இயந்திரம் சுறுசுறுப்புடன் சுழன்றிடத் தொடங்கியது!
அதிகாரிகள் கூட்டம், மாநில அளவிலான அதிகாரிகளோடு மட்டுமல்ல, மாவட்ட அதிகாரிகளோடும் தொடர்பு கொண்டு நிலைமையை அறிந்து நிவாரணத்துக்கு வேண்டிய முடுக்குதல்கள்!
மக்கள் அவசரத் தேவைக்குத் தொடர்பு கொள்ள 'வார்' ரூம்கள், அந்த வார் ரூம்' சரியாக இயங்குகிறதா எனக் கண்காணித்திடும் வகையில் நள்ளிரவு விஜயம், பொது மக்களின் அவசர அழைப்பை முதல்வரே ஏற்று அவர்களோடு பேசியது, அவசரத் தேவைக்கு, பாதிப்பு அதிகமுள்ள மாவட்டத் தலைநகர்களில் எல்லாவித வசதிகள் கொண்ட தற்காலிக மருத்துவமனைகள்.
அந்த மருத்துவமனைகள் சரியாக, வேண்டிய வசதிகளோடு உள்ளதா? என்றுதானே நேரில் அங்கு சென்று ஆய்வு, மருத்துவமனைகளில் சரியான சீரான மருத்துவம் தரப்படுகிறதா என்பதறிய மருத்துவமனைக்குள் சென்று சோதனை - எனப் பம்பரமாக அவர் சுழன்ற காட்சிகள், இவற்றைக் கண்ட மக்கள் அவரை முதலமைச்சராகப் பார்க்கவில்லை! தங்களது சேவகனாகவே கருதினர்!
"இரவிற் பகலிலே எந்நேரமானாலும் சிரமத்தைப் பார்ப்பதில்லை - சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறாமற் காப்பேன்" சேவகனாக கண்ணன் பாரதியாரிடம் உதிர்த்த வரிகள்; பாரதியின் கற்பனையில் பிறந்தவை! தமிழ்நாட்டு மக்களோ கற்பனையாக அல்ல; நிஜமாக.
பாரதி வருணித்த அந்தச் சேவகனை நேரில் காண்கின்றனர்! கண்ணனுக்கு முன் இருந்த சேவகர்கள் குறித்தும் பாரதியார் பாடியுள்ளார்! “ஓயாமல் பொய்யுரைப்பார் ஒன்றுரைக்க வேறுசெய்வார்” -அன்று பாரதி பாடியது இன்றும் எப்படிப் பொருந்துகிறது என்பதை எண்ணிப் பாருங்கள்!
பொய்யுரைப்பதையே தொழிலாகக் கொண்ட எத்தர்கள் இந்த நாட்டை பத்தாண்டு காலம் ஆட்சி செய்து, பாழ்செய்ததை இந்த இரு வரிகள் எத்தனை இரத்தினச்சுருக்கமாய் சுட்டிக் காட்டுகிறது. பாரதி அன்றுரைத்தார். இன்றைய தமிழகம் நம் கண்முன் விரிகிறது!
பதவி மோகம், பணம் சேர்ப்பு, பஞ்சமா பாதகங்களுக்கும் அஞ்சாத படுபாதகச் செயல்கள் செய்தல், அத்தனையையும் மறைத்திட நாக்கூசாது பொய் பேசியே பத்து ஆண்டுகாலம் தமிழ் மக்களைப் பரிதவிக்கவிட்ட படுபாதகர்கள் நம் நினைவுக்கு வருகிறார்கள் அல்லவா? பாரதியின் அடுத்த வரிகளில், இன்றைய முதல்வர் தளபதி ஸ்டாலின் பளிச்சிடுகிறார்!
அந்த அவலங்களை, 'நானறிவேன் சற்றும் நயவஞ்சனை புரியேன்' என்றுரைத்து வந்த பாரதி கண்ட சேவகனைப் போல தமிழக மக்கள் தங்கள் சேவகனாக பாவித்து பாராட்டிப் போற்றிடும் சேவகனாக மக்களுக்குக் காட்சியளிக்கிறார் நமது முதல்வர்! தமிழ் மக்களின் சேவகனாக ஆட்சியில் அமர்ந்தார். எத்தனை எத்தனை திட்டங்கள், நாளும் ஒரு நல்லறிவிப்பு, தமிழ்நாடு மீண்டும் தலைநிமிரத் தொடங்கியது! மக்களிடையே புத்துணர்வு!
ஒன்றிய அரசை ஆள்வோரின் அடிமைகள் கூடாரமாகி விடுமோ தமிழகம் என அஞ்சியிருந்த நேரத்தில், "உறவுக்குக் கை கொடுப்போம் உரிமைக்குக் குரல் கொடுப்போம்” என்ற குரல் மீண்டும் ஓங்கி ஒலித்திடத் தொடங்கியது. ஒரு பக்கம் அடிமை விலங்கொடிக்கப் போர்; மறுபக்கம் தமிழ்நாட்டை தலைசிறந்த மாநிலமாக்க ஆக்கப் பணிகள், இன்னொரு பக்கம் இயற்கைச் சீற்றத்தால் இன்னலுறும் மக்களை இடரிலிருந்து காப்பாற்ற ஓய்வறியாப் பணி!
ஆம்; மனித சக்தியை மீறிய செயல்கள்! உள்ளத்தின் வேகத்துக்கு உடல் சில நேரங்களில் ஒத்துழைப்பு தராத போதும் உத்வேகம் குறையவில்லை! மழை-வெள்ளத்தால் கடந்த ஆண்டுகளில் மிதந்த சென்னையை சீரான திட்டமிட்டு, ஆற்றல்மிகு அதிகாரிகள், அமைச்சர்கள், மேயர், துணை மேயர், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்போடு இந்த முறை பெய்த மழையில் காப்பாற்றியதோடு மட்டுமின்றி, சென்னை மக்களின் பாராட்டு மழையில் மகிழ்ந்திருந்த முதல்வரின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை.
சீர்காழி - கடலூர் பகுதிகளில் வரலாறுகாணா மழையால் மக்கள் தவிக்கிறார்கள் என்ற செய்திகளை ஊடகங்கள் வெளியிடுகின்றன! மெய்வருத்தம் பாராது பசிநோக்காது, கண்துஞ்சாது கருமமே கண்ணாகி சுழன்று சுழன்று பணியாற்றியதால் - முதல்வரது உள்ள வேகத்தோடு போட்டியிட முடியாது உடல் சுணங்கியது!
முதுகுவலியின் தொடர்ச்சியாக கால்வலி! புராணிகர்கள் பாஷையில் சொல்வதென்றால், கண் திருஷ்டி பட்டதுபோல, அவர் உடல் நிலையில் பாதிப்பு -சிறிது கால ஓய்வு ஒன்றே சிகிச்சைக்கு உரிய பலனளிக்கும் என மருத்துவர்கள் கூறியிருப்பதாகச் செய்திகள் வருகின்றன! அதே நேரத்தில் முதுகுவலி காரணமாக சோதனைக்காக முதலமைச்சர் சென்னை இராமச்சந்திரா மருத்துவமனைக்குச் சென்றார். சோதனைகள் முடிந்து வீடு திரும்பினார். மருத்துவர்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளனர் என்ற செய்திகள் ஏடுகளிலும் ஊடகங்களிலும் வருகின்றன!
அதே நேரத்தில் சீர்காழி, வரலாறுகாணா மழையால் தனித் தீவாகக் காட்சியளிப்பதாகச் செய்திகள் வருகின்றன! மருத்துவர்கள் அறிவுறுத்திய ஓய்வை உதறித் தள்ளிவிட்டு எழுந்து, மழையால் பாதிப்புக்குள்ளாகி பரிதவிக்கும் மக்களுக்கு ஆறுதல் கூறப்புறப்படுகிறார்."மக்களிடம் செல்! அவர்களோடு வாழ்ந்திடு! அவர்களை நேசித்து சேவை செய்!" என்ற அண்ணாவின் அறிவுரை அவரது செவிகளில் ஒலித்ததால் எழுந்த எழுச்சியா?
உடல் நலிவுற்று சக்கர நாற்காலியில் அமர்ந்து பயணித்த நேரத்திலும், மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அவதியுறுகிறார்கள் என்றதும், அவர்களுக்கு ஆறுதல் கூறிட விரைந்த கலைஞரைப் பார்த்து படித்த பாடமா? எதுவாக இருந்தாலும், இன்னலுற்ற நேரத்தில், தன் உடல் நலிவையும் உதறித் தள்ளி ஓடோடி வந்து ஆறுதல் கூறிய முதல்வரைப் பார்த்து தங்கள் வேதனை மறந்து மக்கள் மகிழ்ந்த காட்சி, இங்கிவனை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்' எனும் பாடல் வரிகள் மக்கள் மனதில் பதிந்துள்ளதை எடுத்துக் காட்டுவதாகவே அமைந்துள்ளது!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!