Tamilnadu

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் IT பூங்காக்கள் அமைக்கப்படும் ! அமைச்சர் தங்கம் தென்னரசு !

உதகை அருகே புதிதாக அமைய உள்ள புதிய தொழில் பூங்காவிற்கான இடத்தை தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன், நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடைபெற்று முடிந்த நிதித்துறை மானிய கோரிக்கையின் போது நீலகிரிக்கு மினி தொழில் பூங்கா வேண்டும் என்ற கோரிக்கை எழுதுவதாகவும் அதன்படி தற்போது மினி தொழில் பூங்கா அமைக்க HPF பகுதியில் 5 ஏக்கர் நிலம் தேர்வு செய்துள்ளதாக கூறினார்.

அந்த இடத்தில் வனத்துறையிடமிருந்து முறையான அனுமதி பெற்று 1000 பேர் பணிபுரியக்கூடிய வகையில் 100 கோடி செலவில் புதிய தொழில் பூங்கா அமைக்கப்படும் என்ற அவர், அதன் மூலம் நீலகிரி மாவட்டத்தில் வேலை வாய்ப்பு அதிகரிப்பதுடன் தொழில் வளர்ச்சியடையும் எனவும் கூறினார்.மேலும் உலகின் மிக பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோ சாப்ட்வேர் நிறுவனம் உதகையில் வர உள்ளதாக தெரிவித்த அவர், தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்காக அரசு ஏராளமான தொழில் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறினார்.

மேலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று தொழில்துறை நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டதாகவும் அதனையடுத்து பல மென்பொருள் நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வர தொடங்கி உள்ளதாகவும் தெரிவித்த அவர், தமிழகத்திற்கு மென்பொருள் நிறுவனங்கள் வருகையால் கோவை டைடில் பார்க் தற்போது நிரம்பி உள்ளதாகவும், மற்ற மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையால் ஐடி நிறுவனங்கள் தமிழகத்திற்கு வருவதால் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களுக்கு அடுத்து விழுப்புரம், தேனி, மதுரை, தஞ்சை போன்ற பகுதிகளிலும் உதகையிலும் ஐடி நிறுவனங்கள் வர இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில்தான் அதிக தொழில்நுட்ப கல்லூரிகள் உள்ளதால் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு திறன் மிகு மையங்கள் மூலம் பயிற்சி அளித்து தொழில் வளர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதற்காக தமிழக தொழில்துறை, உயர்கல்விதுறை, சிறு குறு தொழில்துறை இணைந்து செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

Also Read: 3 ஆண்டுகளாக அச்சடிக்கப்படாத 2000 ரூபாய் நோட்டு.. மோடியின் பணமதிப்பிழப்பு திட்டத்தின் அடுத்த தோல்வி !