Tamilnadu

சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் ஒன்றும் கட்டவில்லை..பதில் சொல்வது அவர்கள் கடமை: அமைச்சர் சேகர்பாபு!

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குக் கீழ் செயல்பட்டு வரும் காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் இன்று அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்..

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் செயல்படும் பள்ளிகள் , கல்லூரிகள் அனைத்தும் தனியார் நடத்துகின்ற பள்ளி கல்லூரிகளுக்கு இணையாக இருக்க வேண்டும் என்று முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் அறநிலையத்துறையின் சார்பில் செயல்பட்டு வரும் பல்வேறு பள்ளிகள் கல்லூரிகளைத் தமிழ்நாடு முழுவதும் சென்று ஆய்வு செய்து வருகிறோம் .

இந்து சமய அறநிலைத்துறை பள்ளி கல்லூரிகளுக்கு ரூ. 20 கோடி நிதி ஒதுக்கிடு செய்து முதலமைச்சர் கொடுத்துள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களால் கட்டப்பட்ட கோயில் கிடையாது. அது மன்னர்களாலும், முன்னோர்களாலும் கட்டப்பட்டது. எனவே அந்த திருக்கோயிலில் வரும் வருமானங்களைக் கணக்கு கேட்கும் போது முறையாக கணக்குக் காட்ட வேண்டியது தீட்சிதர்களின் கடமை. அதேபோல நிர்வாகத்தில் உள்ள குளறுபடிகளைப் பற்றி கேள்வி கேட்கும் பொழுது அதற்குப் பதில் சொல்ல வேண்டியதும் அவர்களின் கடமை.

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள்ளே இஷ்டத்திற்குத் தீட்சிதர்கள் கட்டடங்களை எழுப்பி உள்ளனர். அவ்வாறு எழுப்பப் பட்டிருக்கும் கட்டிடங்களின் நிலை குறித்து கேள்வி எழுப்ப வேண்டியது இந்து சமய அறநிலையத்துறையின் கடமை. எனவே தீட்சிதர்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் நீதிமன்ற அவமதிப்பு தொடர்வதை யாரும் தடுக்கவில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் நீதிமன்றத்தில் சந்தித்து அதற்குரிய விளக்கங்களை அளிக்கத் தயாராக உள்ளோம்" என தெரிவித்துள்ளார்.

Also Read: ச்சே என்ன ஒரு காதல் கதை.. 4 மாதம் - 8 நாடுகள் சைக்கிளில் பயணம்: 44 ஆண்டுகள் கடந்தும் தொடரும் காதல்!