Tamilnadu

தந்தை மரணம்.. படுத்த படுக்கையான தாய்: குடும்ப பாரத்தை சுமந்த மாணவியின் வாழ்வில் ஒளியேற்றிய அமைச்சர்!

ராணிப்பேட்டை மாவட்டம், புளியங்கண்ணு கிராமத்தில் குடுகுடுப்பை சமூகத்தைச் சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி மல்லிப்பூ. இந்த தம்பதியின் மூத்த மகன் பழனி (20), மகள் செல்வி(14) உள்ளனர். இவர்கள் நான்கு பேரும் சிறிய ஓலை குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் மல்லிப்பூவின், கணவர் பாபு சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதையடுத்து தனது இரண்டு பிள்ளைகளையும் வீதி வீதியாகச் சென்று பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் சுருக்கு பை போன்றவற்றை விற்பனை செய்து படிக்க வைத்து குடும்பத்தை பாதுகாத்து வந்தார்.

பிறகு சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் மல்லிப்பூ-வின் கால்கள் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வீட்டில் படுத்த படுக்கையாக உள்ளார். மேலும் அவர் தொடர்ந்து வியாபாரத்திற்குச் செல்ல முடியாததால் குடும்பம் வறுமையில் வாடியுள்ளது. இதனை உணர்ந்த மகன் பழனி தந்தையின் தொழிலுக்கு சென்றுவந்துள்ளார். ஆனால் அவருக்கும் உடல் நிலையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து குடும்ப நிலையை உணர்ந்த மகள் செல்வி, 9 ஆம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்துவிட்டு,புத்தகப் பையைச் சுமப்பதற்கு பதிலாக கடந்த 4 மாதமாகப் பிளாஸ்டிக் பொருட்களைச் சுமந்து வீதி வீதியாக சென்று விற்பனை செய்து வருகிறார்.

இந்த மாணவியின் கல்வி ஆர்வமும், குடும்ப கஷ்டம் குறித்து கைத்தறித்துறை அமைச்சர் காந்திக்குத் தெரியவந்துள்ளது. பிறகு உடனே அமைச்சர் காந்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆகிய இருவரும் நேரடியாக மாணவி செல்வி வீட்டிற்குச் சென்று குறைகளைக் கேட்டறிந்தனர்.

பின்னர் கல்லூரி படிப்பு வரை தேவையான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொள்வதாக மாணவி செல்விக்கு அமைச்சர் காந்தி உறுதியளித்தார். மேலும் அவரது சகோதரர் பழனிக்கு டி.வி.எஸ் நிறுவனத்தில் வேலைக்கும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

இதோடு மாணவி செல்வியின் தாயாருக்கு முதியோர் நலத்திட்ட உதவிகளையும் விரைவாக வழங்கவும், குடிசை வீட்டிற்குப் பதிலாக அரசு சார்பில் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்காக நடவடிக்கையை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கும் அமைச்சர் காந்தி உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து மாணவியின் வாழ்க்கையில் அணைந்த கல்வி என்ற அகல் விளக்கை மீண்டும் ஏற்றிய அமைச்சர் காந்திக்கு பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்.. இலங்கை இன்னமும் மாறவில்லை.. தமிழர்களுக்காகப் பேசுவாரா பிரதமர்?: முரசொலி!