Tamilnadu

"இனி சினிமாவுல நடிக்க கூடாது.." - துணை நடிகையை கொடூரமாக கொன்ற கணவர்.. கைது செய்த திருப்பூர் போலிஸ் !

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (38). இவர் தனது மனைவி சித்ரா (35) மற்றும் இரண்டு மகள்களுடன் திருப்பூர் செல்லம் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். திருப்பூர் தென்னம் பாளையம் காய்கறி சந்தையில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் இவரது மனைவி சித்ரா டிக்டாக்கில் அதிக ஈடுபாடு கொண்டவர் என கூறப்படுகிறது. டிக்டாக் தடை செய்யப்பட்ட பின்னர் இன்ஸ்டா ரீல்ஸ் உள்ளிட்ட சில சமூக வலைதளங்களில் தனது நேரத்தை அதிக அளவில் செலவழித்துள்ளார்.

இதில் அதிக ஃபாலோயிர்கள் கிடைத்த நிலையில் அதன் மூலம் கிடைத்த சினிமா நண்பர்கள் உதவியுடன் சினிமாவில் நடிக்க வேண்டும் என கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சித்ரா தனியாக சென்னையில் குடியேறியுள்ளார்.

இந்நிலையில் பெரிய மகளுக்கு திருமணம் என்பதால் கடந்த வாரம் மீண்டும் திருப்பூர் திரும்பி உள்ளார். திருமணம் முடிந்து ஒருவாரம் ஆன நிலையில் மீண்டும் சென்னை செல்ல போவதாக கணவர் அமிர்தலிங்கத்திடம் தெரிவித்துள்ளார். இதற்கு அமிர்தலிங்கம் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்குமே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணவர் மனைவி அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

சித்ரா மயங்கியதும் பயந்து போய் வீட்டை விட்டு வெளியேறிய அமிர்தலிங்கம் காலை தனது மகளுக்கு போன் செய்து நேற்று இரவு அம்மாவை அடித்து விட்டேன், என்ன செய்கிறார் பார் என தெரிவித்துள்ளார். மகளும் வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டின் வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது சித்ரா கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக திருப்பூர் மத்திய காவல் நிலையத்திற்கு தனது கணவர் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து சென்ற போலீசார் சித்ராவின் உடலை கைப்பற்றி தலைமறைவாக இருந்த அமிர்தலிங்கத்தை பெருமாநல்லூரில் வைத்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த இளைஞர்.. மனைவிக்கு அனுப்பிய Whatsapp ஆடியோ: புதுச்சேரியில் நடந்த சோகம்!